தம்பி!
நீர் இன்னார்ற்ற மேன் எல்லோ?
தாயகப் பயணத்தில் சைக்கிளில் ஊர் சுற்றும் போது வழி, தெருவில் என்னை நிறுத்திக் குசலம் விசாரிப்பர்.
தங்களது கணிப்புச் சரியான சந்தோஷத்தில்
“அப்பிடியே அம்மாவின்ர முகம் ஒட்டியிருக்கு”
என்று பூரிப்பாகச் சொல்லி விட்டு விடைபெறும் சமிக்ஞையோடு தலையாட்டிக் கொண்டே கடந்து விடுவர்.
“நான் ஆரெண்டு தெரியுமோ”
என்று கேட்பவர்களின் முகப் பரிச்சயம் மட்டும் இருக்கும்.
ஓவென்று தலையாட்டும் போது
சிலசமயம் தங்களை அடையாளப்படுத்தக் கேட்டுத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதும் உண்டு.
முப்பது வருடங்களாகப் புலப் பெயர்வு வாழ்க்கை, அதில் பாதி வருடங்கள் ஊருக்கே போக முடியாத போர்க்காலச் சூழல் எல்லாம் கடந்து ஊருக்குப் போனால் போரிலும் நோயிலும் செத்தவர் பாதி போக மூப்பில் அந்திமத்தை எட்டுவோர் மீதி என்ற நிலையில் இருப்போருக்குத் தம் பழைய முகங்களைக் காணும் போது எழும் அகத் திருப்தி தான் இம்மாதிரியான விசாரிப்புகள்.
தன் பால்ய மண்ணுக்கு அரவிந்த்சாமியின் மீள் வரவு என்ற ஒற்றை வரி அறிமுகதோடு மெய்யழகனைப் பார்க்கத் தொடங்கினால், அதன் அடி நாதமாக அந்தப் பழைய உறவைத் தேடிக் கண்டடைதல் என்ற செய்தியோடு படம் முடியும் போது உண்மைக்கு நெருக்கமாக இப்படைப்பை வைத்துக் கொண்டேன்.
ஆனால் ஆரம்பத்தில் தன் சொந்த வீட்டைப் பிரியும் விடலைப் பையனின் மன உணர்வுகளைக் குறும்படமாகச் சித்தரித்த விதம், தன் தங்கைக்குக் கொலுசு அணிவிக்கும் போது நமக்கும் மொழுக்கென்று விழுந்த கண்ணீர்த் துளிகள், கார்த்தியின் மனைவி ஶ்ரீதிவ்யாவின் வெள்ளந்திப் பேச்சு இவை கவிதைத்தனமாக அமைந்து படைப்போடு ஒன்ற முடிந்தது.
"ஶ்ரீதிவ்யா எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அதனால மெய்யழகன் படைப்பில்
அவங்களையும் சேர்க்கணும்னு
ஹைதராபாத் வரை தேடிப் போய்
பிடிச்சு வந்தேன்,
அவங்க முதல்ல நடிக்க இருந்தது
அர்விந்த்சாமியின் தங்கையாக"
இப்படியாக சாய் வித் சித்ராவில் இயக்குநர் சி.பிரேம்குமார் தன் பேட்டியில் சொல்லி இருந்தார்.
உண்மையில் மெய்யழகன் படத்தில் அர்விந்த்சாமிக்கு அடுத்ததாகப் பாத்திர வார்ப்பில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஶ்ரீதிவ்யா தான்.
கார்த்தியும், அர்விந்தசாமியும் ராத்திரியில் குடித்துக் கும்மாளமிடப்போகிறார்கள் என்று தெரிந்தும்,
நயமாக அவர்களுக்கு வழி விடுவதும்
அவர்களின் கொட்டத்தைக் காது கொடுத்துக் கேட்டு முறுவலிப்பதும்,
"சாப்பிடுறீங்களாண்ணா" அன்றே அறிமுகமான அந்நிய உறவுக்காறர் அர்விந்த்சாமியைப் பரிவோடு கேட்பதும்,
இதையெலாம் தாண்டி அந்த ஜல்லிக்கட்டுக் காட்டியில் மிடுக்கோடு சினிமாத்தனமில்லாத ஒரு வீராங்கனையாக வருவதும் என்று ஶ்ரீதிவ்யாவுக்கு ஒரு அழுத்தமான வாழ் நாட் பாத்திரத்தை பிரேம்குமார் கொடுத்திருக்கிறார்.
அதையெல்லாம் தாண்டி ஒரு அனுபவரீதியான ஒரு காட்சியும் இருக்கும்.
அர்விந்த்சாமிக்கு உதவ வேண்டும் என்று கார்த்தி எல்லாத்தையும் அள்ளிப் போடும் போது ஒத்தாசையாக ஶ்ரீதிவ்யா நாண்டுகொண்டு நிற்பதை அக்மார்க் வெள்ளந்திக் கிராமியப் பெண்களிடம் பார்க்கலாம்.
அதாவது தன் கணவன் அப்பாவியாக எல்லாத்தையும் வழிச்சுத் துடைச்சு உதவும் போது கூடவே அவனின் குணாம்சம் ஒட்டிக் கொண்ட பெண்களை அனுபவத்தைக் கண்டிருக்கிறேன்.
"இந்தாங்க ! இதையும் அவங்களுக்குக் கொடுத்துடுங்க பாவம்"
என்ற மனோநிலை. இதை என் வீட்டம்மாவிடம் ஏதோவொரு சந்தர்ப்பங்களில் அடிக்கடி கண்டிருக்கிறேன்.
திருமணத்துக்குப் பின் கணவனோ, மனைவியோ அவரவர் குணவியல்பிலிருந்து விலகிப் பரஸ்பரம் மற்றவரின் பண்பைப் பழகும் வாழ்வியல் அது.
“யாரோ இவன் யாரோ” கமல் பாடும் பாடல் தவிர்த்து
பின்னணி இசையும், பாடல்களும் கூடப் பெரிதாக ஈர்க்கவில்லை. தஞ்சை மண்ணின் கல்யாணப் பாடல் வித்யாசாகருக்குக் கிடைத்திருந்தால் ஒரு பெரும் கல்யாண விருந்தே படைத்திருப்பார்.
இது அரவிந்த்சாமி படம். ஆரம்பத்தில் ஒரு உணர்வுரீதியாகத் தன் கிராமத்து வீட்டோடும், அந்த வாழ்வியலோடும் ஒட்டிக் கொண்டவன், நகரத்து வாழ்வியில் ஒரு வெறுப்பு மன நிலையில் வாழ்ந்து விட்டு, தங்கைக்குச் சீர் செய்யும் கல்யாண மேடையில் உடைந்து அழும் காட்சி ஒன்றே போதும் அவருக்கு மகுடம் சூட்ட.
மெய்யழகன் எடுத்துக் கொண்ட கதைப்பின்புலத்துக்கே இயக்குநர் பிரேம்குமாருக்குப் பூச்சொண்டு கொடுத்துப் பாராட்ட வேண்டும்.
ஆனால் வலைப்பதிவு யுகத்தில் எண்ணற்ற பதிவர்கள் தம் நனவிடை தோய்தலில் காட்டிய 90களின் வாழ்வியலை மிக அழகாக எழுதியிருக்கிறார்கள். அவற்றை முன்னுறுத்திக் காட்சிகளுக்குக் கனம் சேர்த்திருக்கலாம். குறிப்பாக அந்தக் கோயில் வாழ்வியலும், யானையோடு எழும் பந்தமும்.
“மெய்யழகன்” ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, நம் ஈழத்து வாழ்வியலின் கடந்து போன பக்கங்களை அவ்வப்போது நினைத்துக் கொண்டேன்.
சொத்துப் பிரச்சனை, காணி எல்லைப் பிரச்சனை என்று தமிழகத்தின் பண்பாட்டுக் கூறு ஈழத்திலும் இன்று வரை சம தளத்தில் தொடர்ந்தாலும், நிலம் இழந்த கதைகள் பலதும் நம் போர்க்கால வாழ்க்கையோடு தான் ஒட்டி இருக்கின்றன.
ஆர்மிக்காரன் பிடிச்ச வீடு பார்க்கப் போய் சூடு பட்டுச் செத்தவர்களும், மிதி வெடியில் கால் இழந்தவர்களும், முழுக் குடும்பத்தையுமே காவு கொண்டு மொட்டைச் சுவர்களாக இன்றும் பற்றை படர்ந்த காணிகளுமாக அந்த நிலம் பேசும் கதைகள் பல.
ஊருக்குப் பல்லாண்டுகள் கழித்துப் போதெல்லாம் பழகிய நட்புகளை விட இயற்கை தான் உற்ற தோழன். அது மீட்டிப் பார்க்கும் நினைவுகள் பல. அதனால் தான் சைக்கிளில் தேடித் தேடி அவற்றைக் காண உலாத்துவேன்.
இந்தப் படத்தின் ஆரம்பத்தில் நன்றி அறிவிப்பில் “இயற்கை” க்கும் கொடுத்தது இன்னொரு இன்ப அதிரச்சி.
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே”
ஒவ்வொரு தடவை தாயகத்திலிருந்து மீளும் போதும் அப்பா சொல்லி அனுப்புவார்.
நானும் அப்படியே அந்த இயற்கையில், என் சைக்கிள் பயணங்களில் அவர்களைத் தேடுகிறேன்.
கானா பிரபா
No comments:
Post a Comment