Pages

Tuesday, January 17, 2023

பொய்மான் 🦌 மெய்மை தேடும் ஒரு பயணம் 🏡 திரை அனுபவம் 🎬

ஈழத்தில் இருந்து படகு வழி ஏதிலிகளாக நம் உறவுகள் அவுஸ்திரேலியாவை எட்டும் செய்திகள் ஊடகப் பரப்பிலும், அரசியல் அரங்கிலும் பரபரப்பாகப் பேசப்பட்ட நேரமது. 

நமது அலுவலகத்தின் மதிய உணவு நேரத்தில் எழும் அரட்டையிலும் பேசு பொருளாக அமர்ந்து கொண்டது.

“உங்கள் ஆட்கள் படகில் வருகிறார்களே” 

என்ற எள்ளலோடு எனக்கு முன்னால் இருந்த 

ஆசியப் பின்புலம் கொண்ட மேலதிகாரி தொடங்கவும், 

நான் சிரித்து விட்டு,

“ஆமாம் நானும் நீங்களும் பறந்து வந்தோம்”

 என்று சொன்னதோடு அந்த உரையாடலும் 

அன்றோடு முற்றுப்புள்ளி கண்டது.


“பொய் மான்” திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கிய போது இந்தச் சம்பவத்தை அது நினைப்பூட்டிய சில நிமிடங்கள் கழித்து, இதே மாதிரியானதொரு அனுபவம் திரையில் கண்முன்னே விரிந்தது.

உண்மைக்கு அணுக்கமாகவும், நம் வாழ்வியல் தரிசனங்களையும், இப்படைப்பின் கதை மாந்தர்களாகவும், காட்சிப் பின்புலங்களாகவும் காண்பதே “பொய் மான்” நிறுவிய வெற்றி எனலாம்.

புலம்பெயர் தமிழர் வாழ்வியலில் தென்னிந்தியத் திரைப்படங்கள் செல்வாக்குச் செலுத்தினாலும், தமது அடையாளத்தை நிறுவும் முயற்சியாக ஈழத்தவர் குறும் படங்களில் பெரு வெற்றி கண்டிருக்கின்றார்கள். சொல்லப் போனால் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இரு தசாப்தங்களுக்கு முன்னர் எழுந்த குறும்படப் படைப்புகள் உலகத் தரத்துக்கு நிகராகவும் அமைந்ததை அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறேன். இன்று தமிழகத்தில் புதிய பல இளைஞர்கள் முழு நீளத் திரைப்படங்களை எடுப்பதற்கான முகவரியாக அவர் தம் இயக்கத்தில் வெளியான குறும்படங்கள் இருப்பது ஒரு புதிய அலை எனலாம். 

ஒரு கச்சிதமான திரைமொழியைக் குறும்படம் வழியாகக் கற்று அதற்கு அடுத்த பரிமாணமாக முழு நீளத் திரைப்படம் எடுப்பது என்பது ஏகலைவ பாடம்.


Dr ஜெயமோகன் அவர்களின் படைப்புலகமானது, வானொலி நாடக மரபிலிருந்து மேடை நாடகம் அதன் பின் குறும்பட முயற்சிகள் என்று பரிணமித்து இன்று ஒரு முழு நீளத் திரைப்படத்தை எடுக்கும் முயற்சி என்ற அந்தம் வரை எட்டியிருக்கிறது.  

“பொய் மான்” அவுஸ்திரேலியாவில் நீண்ட இருப்பில் இயங்கும் ஒரு தலைமுறையின் வாழ்வியல் பழக்க வழக்கங்கள், புதிதாக இந்த நாட்டு வந்திருக்கும் இளையதலைமுறையின் சவால்கள் இவற்றை இரு சக மனிதர்களின் வழியாகப் பேசுகின்றது.  இப்படியானதொரு புலம்பெயர் வாழ் மனிதர்களது சமூகச் சிக்கலைக் கருப்பொருளை வைத்துக் கொண்டு காட்சியமைப்புகளைக் கையாளும் போது அது தொலைக்காட்சி நாடகத் தரமாக வழி தவறிப் போகும் அபாயம் தான் ஈழத்தமிழரது முழு நீளத் திரைப்பட முயற்சிகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. அதுவே நம்மவரின் சீரிய முயற்சிகளுக்கும் தடைக்கல்லாக அமைந்திருக்கின்றது. பொய் மானின் தொழில் நுட்பத் தரம் என்பது ஈழத்தவர் திரை முயற்சிகளில் இன்னொரு கட்டுடைப்பு என்று சொன்னால் மிகையில்லை.

படத்தொகுப்பில் non-linear முறைமையைக் கையாண்டு, ஒரு காட்சியோட்டத்தில் பின்னால் நிகழப்போகும் திருப்பத்தை முன்னகர்த்திக் காட்டிய ஓட்டத்தோடு எதிர்பார்ப்பை எழுப்பி விடுகிறது.

நல்ல திரைக்கதையின் உத்தி என்பது திரைப்படைப்பின் ஆரம்பக் காட்சிகளிலேயே அது பயணிக்கும் திசையை நிறுவி விடுவது என்ற எழுத்தாளர் சுஜாதாவின் “திரைக்கதை எழுதுவது எப்படி” கட்டுரையை ஒப்பு நோக்க முடிகின்றது.

ஆபத்தான படகுப் பயணத்தின் அநர்த்தத்தை மிக நேர்த்தியான அமைப்போடும், தேர்ந்த நடிகர் குழுவோடும் அடையாளப்படுத்தும் அந்த நிமிடத் துளிகள் இன்னமும் கண்ணுக்குள் நிற்குமளவுக்கு உழைப்புத் தெரிகின்றது. 

ஈழத்து வாழ்வியலின் அந்த அழகிய நாட்களைக் காட்டும் வானவில் வண்ண ஒளித்தெறிப்புகள் எழுப்பும் பரவசம், அப்படியே அது ஒரு அவலம் நிறைந்த போர்ச்சூழலுக்குள் போகும் போது பரவும் சாம்பல் கலவை, கடற் பயணத்தின் இருள் வண்ணம், உள்ளரங்கக் காட்சியை நிறைக்கும் நிறம் என்று காட்சிக்குக் காட்சி ஒளிக் கலவையை உணர்வூட்டியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சாருராம், குரு, ஆதி ஆகியோர் பாடல்களுக்கான இசையைக் கையாண்டிருக்கிறார்கள். 

சாரு ராம் இசைத்த “அன்பு மழை பொழிந்தது” https://youtu.be/T2BgP1D25xw படத்தின் அடி நாதமாக  எழுந்து இனிக்கிறது. 

எங்கட ஊரின் மண் வாசம்

https://youtu.be/xz2W1wMCtzg

காட்சிக்கும் தீனி கொடுத்திருக்கிறது.

அன்புவின் மனப் போராட்டத்தைத் தொட்டு எழும் பாடம் அந்தக் காட்சியமைப்பை இன்னும் வலுவூட்டுவதில் முக்கியம் பெறுகிறது.

மணி & அன்பு உரையாடல் காட்சிக்கும் கொஞ்சம் வேகமெடுக்கும் இசையை அணிவித்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.

கிரி, ஆதி, கலைமாமணி பூஷணி கல்யாணராமன் குரல்கள் கச்சிதமான தேர்வு. பாரதியார் பாடல்கள் கதையோட்டத்துக்குக் கை கொடுத்திருக்கின்றன. கலைமாமணி பூஷணி கல்யாணராமனின் குரலை வெண் திரை வழி கேட்கும் போது உள்ளத்தில் எழும் பிரவாகத்துக்கு அளவில்லை.



அவுஸ்திரேலியாவில் நெடுங்காலம் வாழும் முந்திய தலைமுறை மனிதர் மணி என்ற மாணிக்கவாசகம் என்ற பாத்திரத்தில் Dr. ஜெயமோகனும், 

இலங்கையிலிருந்து அப்போதுதான் புகலிடம் கோரி வரும் அன்பு என்ற அன்புச்செல்வனாக ஜனார்த்தனனும் இந்தப் படத்தின் முக்கிய நாயகர்கள். 

இவர்களின் பாத்திர அமைப்பு, கதைப்பின்புலம் வேறாயினும் ஒத்திசைவோடு பயணிக்க வேண்டிய பொறுப்பு. அதில் இம்மிளவும் பிசகாமல் தம்முடைய பாத்திரத்தில் மிளிரும் அதே சமயம் இருவரும் சம நிலைப்பட்டு இயங்குகிறார்கள் என்பதால் படத்தோடு மிக நெருக்கமாக ஒன்றி விட முடிகின்றது.

அதுவும் ஜெயமோகன் அவர்களின் முந்திய மேடைப் பாத்திரங்கள் அங்கதச் சுவையோடு பின்னப்பட்டிருக்கும். அதுவே அவரின் முத்திரை ஆகிவிட்ட பின்னர் இந்த மாதிரியானதொரு கலவையான பாத்திரத்தில் தோன்றி நடிப்பதும் தன் முந்திய இமேஜைக் களைந்து அது பார்வையாளரிடம் ஒட்டிக் கொள்வதும் வெகு இயல்பாக நிகழ்ந்திருக்கிறது.

அதுவும் அந்தக் கடைசிக் காட்சியில் அமைதியாக நடிப்பை அள்ளி விட்டதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

அதுபோல் புலம்பெயர் தேசத்தில் பிறந்த ஜனார்த்தனுக்கு, ஈழத்தில் இருந்து வரும் ஒரு இளைஞனின் உடல் மொழியில் இருந்து வசன உச்சரிப்பு, நடிப்பு என்று அற்புதமாக அவர் உள்ளே இறங்கியிருக்கிறது.

குற்ற உணர்ச்சியோடு பதை பதைக்கும் நடிப்பு வெகு யதார்த்தம்.

அன்புவின் மனைவியாக வரும் கவிஜாவின் நடிப்புத் திறன் அந்த ஒரே காட்சியிலேயே துலங்கியது.

மணியின் பிள்ளைகளாக வருபவர்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற கதையமைப்புக்கேற்ப பாத்திரத்தில் நடித்தவர்களும் அற்புதமாக ஒட்டிக் கொண்டு விட்டார்கள்.

நடிப்புத்துறையில் இலங்கை வானொலி காலம் தொட்டு ஐம்பது ஆண்டுகளைக் கடந்து இயங்கி வரும் திருமதி ஷாமினி ஸ்ரேரருக்கு இந்தப் படம் மிக வித்தியாசமான, அழுத்தமான பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறது. Dr ஜெயமோகன் போன்றே இவரின் நடிப்பு முத்திரையாக அறியப்பட்ட குணாதிசியத்தைக் களைந்திருக்கிறார்.

படத்தில் ஆங்காங்கே எழும் நகைச்சுவையிலும் நாகரிகம் பேணப்பட்டிருக்கிறது.

முழு நீளத் திரைப்படத்துக்கு உண்டான காட்சி மொழி இன்றைய நடப்பு சினிமாத் தொழிலில் பயன்படும் உத்தியோடு உள்வாங்கப்பட்டிருப்பதோடு, வசனங்களை நீட்டி முழக்காமல் கச்சிதமான உரையாடலாகவும், வீணான காட்சிகளை உள் நுழைக்காமலும் பொய் மான் மின்னுகிறது.

மிதுஷன் இயக்கிய இலங்கைக் காட்சிகளும் கச்சிதமாக இணைகின்றது. பொதுவாக இரு வேறுபட்ட சூழலில் வெவ்வேறு கலைஞர்களால் எடுத்துப் பொருத்தும் போது எழும் நெருடல் இல்லை. 

பொய் மானைப் பார்த்து விட்டு திரைக்கதையில் எழும் தர்க்கரீதியான கேள்விகள் கூட இந்தப் படைப்பு எவ்வளவு தூரம் பார்வையாளருக்குள் நுழைந்திருக்கிறது என்பதற்காக சான்று.

போலிக் கெளரவத்தில் வாழும் புலம் பெயர் வாழ் சமூகம், நம்மவரே சக மனிதரைத் தாழ்த்தும் சமூக நடத்தைகளைப் போகிற போக்கில் கேள்விக்குட்படுத்துகிறது இந்தப் பொய் மான்.

இரண்டு கனதியான சமூகச் சிக்கல்களை இணைத்து, ஒரு அழுத்தமான செய்தியை வைத்துக் கொண்டு முடிக்கும் போது நெகிழ வைத்து விடுகிறது. 

அவுஸ்திரேலியத் தமிழ்ச் சமூகத்தில் நம்முடைய கதைகளை, பொதுவான திரை மொழியில் மற்றைய சமூகத்துக்கும் காட்ட “பொய் மான்” வழி சமைத்திருக்கிறது.

“பொய் மான்” என்ற தலைப்பில் இருக்கும் கவித்துவம்  படைப்பு முழுக்க நிரவியிருப்பது Dr ஜெயமோகனுக்கும் அவர் சார்ந்த குழுவுக்கும் கிடைத்த வெற்றி.  

மேடை நாடகம், குறும்படம் இதோ இப்போது முழு நீளத் திரைப்படம் என்று தன்னுடைய அடுத்த பரிமாணத்திலும் வெற்றிகரமாக அடையாளப்பட்டிருக்கிறார் Dr ஜெயமோகன்.

கானா பிரபா

Experience the soulful journey of film by getting your tickets now at https://www.eventboss.com/shows


This feature film, produced in Australia, is written and directed by Dr J Jayamohan, who also directed acclaimed short films like Oru Cappuccino Kathal and Boomerang. Both short films had an incredible positive response worldwide, with over 50k views.


MOVIE DETAILS

Production : Shobhanam Creations

Movie : Poi Maan

Cast : Janarthan, Kavija, Jayamohan and Sharmini

DOP : R Poudel

Editing : Senthilkumar R and Harish

Di Colorist : R Delepan

Art Direction : Shaminine C

BGM : Nishadhan S

Music (Songs) : Charou Ram , Aathi, Guru P

Lyrics: Bharathiyaar, Kuventhiran, Jayamohan, Aathi

Singers : Kalaimamani Bhushany kalyanaraman, Gire , R.P Shravan( Super Singer), Athi

Written & Directed by : J Jayamohan


#poimaan #pm #jayamohan #shobhanamcreations #tamils #australiantamils #tamilcinema

No comments:

Post a Comment