Pages

Saturday, March 19, 2022

இசையமைப்பாளர் உதயா


எந்தவொரு செயலுக்கும் பின்னால் ஒரு உந்து சக்தியாக மறைபொருள் ஒன்று நம்மை இயக்கிக் கொண்டிருப்பதை நான் பரிபூரணமாக நம்புபவன். அதிலும் SPB பாடகன் சங்கதி ஆக்கங்களை எழுத ஆரம்பித்த போது, தானாகவே வந்து சேர்ந்த அனுபவங்களை இப்போதும் நினைத்துப் பிரமிப்பேன்.

கடந்த டிசெம்பர் 25, 2021 அன்று காலை SPB பாடகன் சங்கதி நூலின் இறுதி வரைபைப் பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென்று பொறி தட்டவே “அடடா இவரிடமும் எஸ்பிபி குறித்த அனுபவங்களைக் கேட்டிருக்கலாமே” என்று நினைத்து உடனே அழைத்தேன். இரண்டு மூன்று தடவை அழைத்து நான் ஓய்ந்து போன தருணத்தில், அவரிடமிருந்து அழைப்பு.

“பிரபா நான் இப்போது தான் தேவாலயம் சென்று விட்டு வருகிறேன்” என்று அழைத்துப் பேசியவர் நான் அன்று காலை தேடிய அதே இசை ஆளுமை உதயன் விக்டர் அவர்கள்.

அந்த கிறிஸ்மஸ் தினத்தன்று எஸ்பிபி அவர்களைத் தன்னுடைய முதல் படத்தில் பாட வைத்த நெகிழ்வான வரலாற்றை அவர் சொல்ல அப்படியே அதைக் கிரகித்து, எழுத்தில் வடித்துப் புத்தகத்துக்குச் சேர்த்துக் கொண்டேன்.

புத்தகமும் வெளிவந்து SPB பாடகன் சங்கதி குறித்துத் தன்னுடைய விமர்சனத்தைப் பகிர்ந்த திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் இந்தப் புத்தகத்தில் மிக முக்கியமானதில் ஒன்றாகக் கோடிட்டுக் காட்டியது 

இசையமைப்பாளர் உதயா அவர்களுக்கும் எஸ்பிபிக்குமான அந்தச் சந்திப்பே தான். அதைப் பார்த்து விட்டுக் கண்மூடி ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன்.

இசையமைப்பாளர் உதயா அவர்கள் எஸ்பிபியை வைத்துத் தன் முதல் பாடலாகக் கொடுத்தது இதுதான்

ஓ ஊர்வலம் என் கண்ணில் தேர் வரும்”

https://www.youtube.com/watch?v=ssHxC0N-O4c

கேட்டுப் பாருங்கள் எவ்வளவு ரம்மியமாக இருக்கும்.





இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு புறப்படுபவர்கள் எல்லோருமே அதீத புகழ் வெளிச்சத்தை அடைவதில்லை. பலர் சோர்ந்து போய் வேறு துறைகளை நாடுவதுண்டு. ஆனால் தன்னுடைய “மாநகர காதல்” என்ற ஈழத்துத் திரைப்படம் வெளிவராத கடந்த 32 ஆண்டுகளிலும் தன்னை ஒரு இளைய சிந்தனை கொண்ட இசையமைப்பாளராகவே வைத்துக் கொண்டு இயங்கிவருபவர் உதயா அண்ணர்.

அதன் அறுவடைகளில் ஒன்று தான், கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் அன்பு நண்பன் வசீகரனோடு இணைந்து கொடுத்த “காதல் கடிதம்” இசைத் தொகுப்பின் வெற்றி. ஈழத்தின் பொப்பிசைப் பாடல் யுகத்துக்குப் பின்னர் பண்பலை வானொலிகளில் ஒரு பெரும் இசைப் புரட்சியை எழுப்பியது 

“யாழ்தேவியில் காதல் செய்தால்” 

https://www.youtube.com/watch?v=ClXGlsrIOyM

இந்தப் பாடலை அந்தக் காலத்தில் ஒலிபரப்பாத ஈழத்து, மற்றும் உலகத் தமிழர் வானொலிகளே இல்லை எனலாம்.

கார்த்திகை 27 என்ற ஈழத்து தேச மறவர் பாடல்களோடு ஏராளம் ஈழத்துத் தேசிய எழுச்சிப் பாடல்கள், தமிழ்த் திரைப்படங்கள் என்று பயணித்துக் கொண்டிருக்கிறார். அதற்கும் மேலாக நல்லிசை எங்கிருந்தாலும் தேடிக் கொண்டாடுவதும், இசை ரசிகர்களை அரவணைத்துச் சிலாகிப்பதுமான நற்பண்புகளைக் கொண்ட இசைப் பெருந்தகை உதயன் விக்டர் என்ற உதயா அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

கானா பிரபா

19.03.2022


No comments:

Post a Comment