Pages

Friday, February 04, 2022

மணி ஓசை கேட்குதம்மா.....



மணி ஓசை கேட்குதம்மா...கோயில்

மணி ஓசை கேட்குதம்மா...

பரராஜ சேகரப் பிள்ளையார் திருகோயில்

மணி ஓசை கேட்குதம்மா.......

இணுவில் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலின் பென்னம் பெரிய காண்டாமணி ஒலிக்க, கணீரென்று மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடும் அந்தத் தெய்வீக நாதம் கேட்டால் அப்படியே எம் பிள்ளையாரை நினைத்து மனம் கரைந்து வழிபடும்.

இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் சுசீலா அக்கா, எனது அம்மாவின் வாசிப்புத் தோழி. நான் சின்னக் குழந்தையாக இருந்த காலத்தில் விதானையார் மாமா வீட்டுக்கு என்னையும் அழைத்துப் போவார். அங்கே சுசீலா அக்கா எடுத்து வைத்திருந்த புத்தகங்கள் அம்மாவின் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருக்கும். அப்படித் தொடர்ந்த தொட்டிலில் பழக்கம் தான் என்னையும் தீவிர “படிப்பாளி” ஆக்கி ஏதோ எழுதவும் வைக்கிறது.

 

சுசீலா அக்கா குடும்பம் தமிழகத்துக்குப் புலம் பெயர்ந்து அங்கேயே தங்கி விட்டார்கள். ஆனால் அவரால் தன் இணுவில் மண் வாசனையை மறக்க முடியவில்லை. அதனால்தான் தன் ஊர்க்கோயில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆன “மடத்துவாசல்” பிள்ளையாருக்கும் பாடல் இயற்றிப் பதிப்பித்திருந்தார்.

இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் பாமாலை என்ற பத்துப் பாடல் கொண்ட தொகுப்புக்கு இணுவையூர் வீரமணி ஐயர்,சுசீலா ஆகியோர் கவிவரிகள் கொடுக்க, டி.வி.ரமணி இசையில் அனைத்துப் பாடல்களையும் பாடியவர் மலேசியா வாசுதேவன். இரண்டாவது தொகுதியில் டி.வி.ரமணி இசையில் 11 பாடல்களில்அமைந்திருக்கின்றன.
ஈழத்தின் புகழ்பூத்த இசை மேதை இணுவையூர் வீரமணி ஐயர் அவர்களும் பாடல்களை எழுதிச் சிறப்பிக்க மீதி அனைத்தையும் சுசீலா அவர்களே எழுதினார். இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு, உன்னிகிருஷ்ணன் அவர்களும் இளம் பாடகர்களுமாகப் பாடியிருக்கிறார்கள்.


 

 

இந்தப் பாடல் தொகுப்பு எவ்வளவு ஆத்மார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றது என்பதற்கு உதாரணமாக இந்த ஒன்றைக் கேளுங்கள்

“உண்ணாமல் இருப்பேனா

உன்னை எண்ணாமல் இருப்பேனோ

என் இணுவை விநாயகனே”

https://www.youtube.com/watch?v=icj9bbTpjDk

தன்னுடைய இந்த இசைத் தொகுப்பை 1997 ஆம் ஆண்டில் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் குடமுழுக்குக் கண்ட போது சுசீலா அவர்கள் யாத்திருந்தார்.

இன்று 25 வருடங்கள் கழித்து பரராஜ சேகரப் பிள்ளையார் கும்பாபிஷேகம் காண்கிறார். ஊரே அந்தப் பக்திப் பரவச நிலையில் இருக்கிறது.

ஆனால் சுசீலா அக்கா நம்மோடு இல்லை.

தனது பிள்ளையாரின் கும்பாபிஷேகம் அறிவித்துப் புனருத்தாரணம் செய்யும் காலச் சூழலிலேயே பிள்ளையாரிடம் சேர்ந்து விட்டார்.

அடுத்த முறை தாயகம் போகும் போது எங்கள் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் காலைப் பூசை முடிந்ததும் வழக்கம் போல

“மணி ஓசை கேட்குதம்மா” பாடலை கோயிலின் லவுட்ஸ்பீக்கர் பாடும் போது சுசீலா அக்காவும் நினைப்பில் வருவார்.

கானா பிரபா

04.02.2022


No comments:

Post a Comment