Pages

Wednesday, December 09, 2020

அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி


சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய நாட்களில் சுடச் சுட வாங்கி ஒரு தடவை அந்தப் புத்தக வாசனையை நாசியில் ஏற்ற வாசித்து மகிழ்ந்த “கோகுலம்” சிறுவர் இதழ் கொடுத்த அதே பரவச உலகத்துக்குப் பின் சென்று வாழ்ந்து விட்டு வந்தேன். அப்படியொரு பெருமிதத்தைக் கொணர்ந்தது ஈழத்தில் இருந்து இப்போது துளிர்த்திருக்கும் “அறிந்திரன்” சிறுவர் சஞ்சிகையின் வரவு.

“இரன்” என்பது ஈழத்து வாழ்வியலில் ஒன்று கலந்த சொல்லாடல், “இருங்க” என்ற தமிழகத்து மக்களின் பேச்சு வழக்குக்கு சமமானது.

ஈழத்தில் 32 வருடங்களாக வெளிவந்து சாதனை படைத்த, முன்னோடி நகைச்சுவை சக இலக்கிய இதழ் “சிரித்திரன்” சஞ்சிகை கூட இந்த “இரன்” என்ற சிறப்புப் பெயரை ஒட்டிக் கொண்டு வந்தது.

“சிரித்து இரன்”  சிரித்திரன் என்பது போல இப்போது “அறிந்து இரன்” அறிந்திரனாக.

ஒருவனது பரந்த வாசிப்பு வெளிக்கும், பன்முக எழுத்தாற்றலுக்கும் முகிழ் போல அமைவது அவனது சிறு வயது வாசிப்புப் பழக்கம். அதுவும் அந்தக் காலத்தில் எங்கள் பால்ய வாழ்வில் ரத்னபாலா, பாலமித்திரா, அம்புலி மாமா தொடங்கி அடுத்த கட்ட நகர்தலாக அமைந்த “கோகுலம்” சிறுவர் சஞ்சிகையின் பரந்த இலக்கியச் செயற்பாடு மிக முக்கியமாகக் கொள்ள வேண்டியது. அது தன் வாசகராய் அமைந்த சிறுவர்களையும் உள்ளிழுத்து அவர்களையும் ஆக்க இலக்கியதாரர்களாக அமைத்து ஒரு பரவலான வாசகர் வட்டத்தை கோகுலம் குடும்பமாக அமைத்துக் கொண்டது.

இதே பாங்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் சஞ்சீவி பத்திரிகைக் குழுமத்தில் “அர்ச்சுனா” என்ற இதழ் வெளிவந்த போது அக்காலத்துப் பள்ளி மாணவராய் நானும் சிறுகதைகள் எழுதி, பரிசுப் போட்டியில் சான்றிதழ் எல்லாம் பெற்றிருக்கின்றேன். இன்று என்னை எழுத்துலகில் வைத்திருக்க இவையெல்லாம் ஆரம்ப கால உந்து சக்திகள். ஆனால் போர்ச்சூழலில் உதயன் காரியாலயம் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான போது அர்ச்சுனாவின் வரவும் துரதிஷ்டமாக நின்று போனது. அப்போது நான் என் சிறுவர் நாவல் ஒன்றை வெளியிட அப்போது அர்ச்சுனா ஆசிரியராக இருந்த திரு வே.வரதசுந்தரம் முயற்சி எடுத்து அடுத்த இதழில் வருவதாக இருந்த நிலையில் நின்று போனது.

இம்மாதிரி முன்னோடிச் செயற்பாடுகளின் நீட்சியாக “அறிந்திரன்” வரவு அமைந்திருக்கின்றது. இந்த முயற்சியை நான் மனதாரப் பாராட்டி ஒரு வாரத்தில் என் கையில் “அறிந்திரன்” இதழ் கிட்ட ஆவன செய்யிருக்கிறார் அன்புச் சகோதரர், ஆசிரியர் கணபதி சர்வானந்தா அவர்கள்.

சிறுவர்களுக்குக் கைக்கு அடக்கமாக, வள வள காகிதத்தில் பல் நிறமூட்டிய பதிப்பாக வந்ததே இந்த இதழின் சீரிய நோக்குத் தெளிவாகின்றது. அதுவும் வெறும் இருபது ரூபா இலங்கைக் காசில் விலை நிர்ணயித்திருப்பது கூட அந்தக் காலத்தில் நான் ஐம்பது சதக் கணக்கில் சேர்த்துப் புத்தகம் வாங்கிய பால்ய காலத்துக்கு இழுத்துப் போனது.

“புத்தகப் படிப்பைத் தாண்டிய பரவலான வாசிப்பே ஒரு மனிதனைப் பூரணமாக்கும்” என்ற தொனியோடு ஆசிரியர் அறிவன் அண்ணாவின் ஆசிரியத் தலையங்கம் தாங்கி, நன்னெறிக் கதை, அறிவியல், உலக நடப்பு, வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள், புவியியல், வர்ணம் தீட்டுதல், குறுக்கெழுத்துப் போட்டி, கவிதை என்று ஒரு முழுமையான சிறுவர் இதழாக, அழகான வடிவமைப்பு, புகைப்படங்கள் என்று கலந்து கட்டித் தன் முதல் இதழிலேயே ஜொலிக்கிறது.

எதிர்காலத்தில் ஈழத்துக் கவிஞர்கள் அமரர் சத்தியசீலன், துரைசிங்கம், தமிழகத்து எழுத்தாளர் அழ வள்ளியப்பா போன்றோரையும் “அறிந்திரன்” உள்வாங்க வேண்டும். சிறுவருக்கான போட்டிகளைத் தனித் தாளில் அச்சிட வேண்டும். எதிர்காலத்தில் இந்தப் போட்டிகள் பாடசாலைக் களங்களில் நிகழ வேண்டும்.

இந்த முதல் இதழின் சிறப்பு என்னவென்றால் விதவிதமாகப் படைக்கப்பட்ட எல்லா ஆக்கங்களுமே அவற்றின் மொழி நடை, உள்ளடக்கம் என்பவற்றில் சிறுவர்களை முதலில் இலக்கு வைத்திருக்கிறது அடுத்தது எம் போன்ற பெரியோருக்கும் சுவாரஸ்யம் கொடுக்கின்றது.

இன்று சிறுவர் சஞ்சிகைகள் தமிழகத்திலும் நின்று போன நிலையில் “அறிந்திரன்” வரவு ஈழத்துச் சிறுவர் இலக்கியப் பரப்பில் மட்டுமல்ல உலகத் தமிழரது வாசிப்பு வட்டத்தில் மிக முக்கியமானதொரு செயற்பாடாக நோக்க வேண்டும். 

என்னளவில் இந்த “அறிந்திரன்” சஞ்சிகை தொடர்ந்து இயங்கவும், சிறுவர் இலக்கிய வானில் ஒளி வீசவும் என்னால் ஆன பங்களிப்பை வழங்கப் பேராவல், அது போல் நம் எல்லோரும் இந்தச் சஞ்சிகையைத் தத்தெடுக்க வேண்டும். அதன் வழி “அறிந்திரன்” தன் பன்முகப்பட்ட பணியைக் கொடுக்கவும், சிறுவர் இலக்கிய இயக்கமாக அது பரிணமிக்கவும், இதே அக விலையில் தொடர்ந்து கொடுக்கவும் அது பேருதவியாக இருக்கும்.

வாருங்கள் வளர்ப்போம் நம் “அறிந்திரன்” சிறுவர் சஞ்சிகையை.


கானா பிரபா






No comments:

Post a Comment