Pages

Tuesday, May 07, 2019

சிட்னியில் கவிஞர் அம்பி 90 - ஈழத்துப் படைப்பாளிக்கோர் பெரு விழா






கவிஞர் அம்பி ஈழத்தின் மூத்த எழுத்தாள ஆளுமை கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி அகவை 90 கண்டார். 
சிட்னியில் வாழும் அவரின் இலக்கியப் பணியைப் போற்றிக் கொண்டாடும் உயரிய சிந்தனையில் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் சமூகம் விழாக் குழுவொன்றை உருவாக்கி மூன்று மாதத் திட்டமிடலோடு கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி விழா அரங்கை அமைத்தது. இது நாள் வரை கண்டிராத பெருங் கூட்டம் கவிஞர் அம்பி ஐயா மீதான நன்றியறிதலோடு அரங்கத்தில் திரண்டது.

கவிஞர் அம்பி 90 விழா நிகழ்வில் குத்துவிளக்கேற்றலில்  இருந்து விழா நிறைவு வரை ஈழத்தின் கலை, இலக்கியத் துறையில் பங்களித்தோர், சிட்னி வாழ் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் என்று பொருத்தப்பாட்டோடு நிகழ்வை அணி செய்தனர்.
கவிஞர் அம்பியின் விரிவான இலக்கியப் பணியை ஆய்வுப் பார்வையிலும், வரலாற்றுப் பதிவாகவும் கொண்டு  விழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த விழா மலரில் அம்பி அவர்களை வாழ்த்திப் பகிரப்பட்ட  வாழ்த்துகள் கூட அம்பியின் கவிதைகளில் பொறுக்கிய நறுக்குகளாக அமைந்தது புதுமை.

கவிஞரும் ஊடகவியலாளருமான செளந்தரி கணேசனின் வரவேற்புரையைத் தொடர்ந்து கல்விச் செயற்பாட்டாளரும், இலக்கிய அறிஞருமான திரு திருநந்தகுமார் அவர்கள் தலைவராக இருந்து விழாவைக் கொண்டு நடத்தினார். அவுஸ்திரேலியாவில் தமிழ் மாணவருக்கான பாட நூல் ஆக்கத்துக்காக அப்போது பப்புவா நியூகினியில் இருந்த அம்பியிடம் தான் வேண்டுகோள் விடுத்து அதன் பிரகாரம் தமிழ்ப் பாட நூல் பணியில் அம்பியின் பங்களிப்பு பெற்றது குறித்த வரலாற்றுச் செய்தியை பேராசிரியர் கந்தராசா அவர்கள் பகிர்ந்த நயப்புரையில் கல்விச் சமூகத்தில் அம்பியின் பங்கின் ஆழம் புரிந்தது. 

கனடா உதயன் ஆசிரியர் திரு லோகேந்திரலிங்கம் அவர்களின் சிறப்புரை தொடர்ந்து இடம்பெற்றது. கவிஞர் செ.பாஸ்கரன் கவிஞர் அம்பிக்குத் தான் யாத்த கவிதையால் வாழ்த்தினார். ஈழத்தின் மூத்த எழுத்தாள ஆளுமைகள் எழுத்தாளர் லெ.முருகபூபதியின் உரையில் அம்பியின் இலக்கியப் பணியைத் தாண்டி அவரின் குணாதிசியம் குறித்த கலகலப்பான உரை அமைய, அம்பியின் கவிதை நயத்தை எழுத்தாளர் மாத்தளை சோமு உதாரணங்கள் காட்டிச் சிறப்பித்தார்.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் Jodi McKay வருகை தந்து சிறப்புரையாற்றியதோடு பாராளுமன்றத்தின் சிறப்புப் பட்டயம் ஒன்றைக் கெளரவப் பரிசாகக் கவிஞர் அம்பிக்கு வழங்கிக் கெளரவித்தார்.

பாப்பா பாடல்கள் மூலமாகவும், பாட நூல்கள் வழியாகவும் அடுத்த தலைமுறை இளையோரோடு தொடர்ந்தும் காலா காலமாகத் தொடர்பில் இருக்கும் அம்பி ஐயாவுக்கு இளையோர் இணைந்து இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தது மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது. சிட்னியின் இரு பெரும் தமிழ்ப் பள்ளிகளான வென்ற்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலை மற்றும் ஹோம்புஷ் தமிழ்ப்பாடசாலை மாணவர்கள் தனித்தனி கவிதா நிகழ்வும், பேச்சரங்கமுமாகக் கவிஞர் அம்பியின் படைப்புகளைச் சிலாகித்துப் பகிர்ந்தனர்.
கம்பன கழகம் அவுஸ்திரேலியாவின் இளையர் செல்வி பூர்வஜா நிர்மலேஸ்வரக் குருக்கள் மற்றும் செல்வன் புவன் செந்தில் ஆகியோர் சிறப்புரையாற்ற் வைத்திய கலாநிதி யதுகிரி லோகதாசன் தன் இனிய குரலில் கவிஞர் அம்பி கவிதைகளைப் பாட்டிசைத்துப் பாடினார்.

ஈழத்தில் மருத்துவத் துறையில் பெரும்பணியாற்றிய மருத்துவ முன்னோடி சாமுவேல் கிறீனின் பெருமையைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுதியவர். குழந்தைப் பாடல்களை ஈழத் தாயகத்திலும், புலம் பெயர் மண்ணிலும் படரச் செய்தவர், வானொலி ஊடகத் துறையிலும் கால் பாதித்தவர், சிறந்த சிந்தனையாளர் தன் முதுமையிலும் கலகலப்பாகவும் மற்றோர் முகம் கோணாமலும் பேசும் மாண்பு கொண்ட கவிஞர் அம்பியின் ஏற்புரையோடு அவையோர் கெளரவம் அம்பி தம்பதிகளுக்குக் கொடுக்கப்பட விழா இனிதே நிறைந்தது.

படங்கள் : கானா பிரபா மற்றும் தமிழ்முரசு ஒஸ்ரேலியா
கானா பிரபா

No comments:

Post a Comment