Pages

Sunday, February 03, 2008

"The Kite Runner" - பட்டம் விட்ட அந்தக் காலம்...!

கடந்த வாரம் என் அலுவலகத்தில் பணிபுரியும் சக வெள்ளை இனப் பெண்மணி சொன்னாள்
"பிரபா!, The Kite Runner படம் பார்த்தேன், நீ இந்த நாட்டில் இருப்பது எவ்வளவு பெரிய அதிஷ்டம்" என்று சொல்லி அந்தப் படத்தில் தான் ஒன்றிப் போனதை இப்படி வெளிப்படுத்தினாள்.

நேற்று இந்தப் படத்தைப் பார்த்தேன். காட்சிகள் திரையில் விரிய என் இளமைக் காலத்து மாலை நேரப்பொழுது போக்குகளை நினைப்பூட்டி விட்டது The Kite runner திரைப்படம்.பள்ளிக்கூடம் மாலை மூன்று மணி வாக்கில் முடிந்ததும் நேரே வீடு சென்று புத்தகப் பையை எறிந்து விட்டு தாவடிச் சுடலைப் பக்கம் இருக்கும் தோட்டக் காணிக்கு ஓடுவேன். எங்களின் சித்தி வீட்டுக்குப் பின் காணியை ஒட்டிய தோட்டப்புறம் என்பதால் வீட்டிலும் அதிக கெடுபிடிகள் இருக்காது. நான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்தோடித் தோட்டக் காணிகளுக்குள் பாயவும், வேகத் தடையாகக் காலில் சுறுக்கென்று பாயும் தோட்டத்தில் விரவியிருக்கும் முட்கள். பிறகு நிதானமெடுத்து, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருக்கும் நீண்ட நெடிய தோட்டக்காணிகளை ஒரு முறை கண்களால் அளவெடுத்து விட்டு, மரவள்ளி மரக்கன்றுப் பாத்திகளுக்குள் நிறைந்திருக்கும் நீர்ச்சகதிக்குள் காலை நனைக்காமல், மெல்லப் பாய்ந்து வாய்க்கால் ஓரமாய் இருக்கும் மண் திட்டியில் தடம் பதித்துத் தூரத் தெரியும் செம்பாட்டு வெறும் நிலப்பரப்பை நோக்கி நடப்பேன். அங்கு ஏற்கனவே மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு வந்து அவற்றைத் தோட்டக் காணிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்டிருக்கும் தடிகளில் கட்டி விட்டு விளையாடிக் கொண்டிருக்கும் அயல் வீட்டுப் பெடியன்கள் நிறைந்திருப்பார்கள். மாடுகள் தம்பாட்டுக்கு ஏற்கனவே விளைந்த பயிர் எச்சங்களை மென்று கொண்டிருக்கும்.

இடுப்பை விட்டு நழுவும் காற்சட்டையை மெல்ல மேலே இழுத்து விட்டு நானும் இந்தப் பெடியன்களுடன் மாலை நேர விளையாட்டில் ஐக்கியமாவேன். அந்த விளையாட்டுக்களில் ஒன்று தான், சோளகக் காலத்து பட்டம் பறக்கவிடுதல். அவரவர் தம் அதி வீர பராக்கிரமங்களைத் தம் பட்டங்களைப் பறக்க விடுதலில் காட்டுவார்கள். மூங்கில் கழிகளை வளைத்துச் செய்யப்பட்ட கொக்குப் பட்டம், நாலு மூலைப் பட்டம், எட்டு மூலைப் பட்டம், வெளிச்சக்கூடு என்று வானத்தில் அணிவகுக்கும் பட்டக் கூட்டம். குமாரசாமி மாமாவின் பெடியள் ஒரு புறம், அங்காலை நாகதீபனின் தமையன்மார் இன்னொரு பக்கம், தாமோதரம் மாமாவின் மகன் தன்ர வீட்டுக் காணிப்பக்கம், தாவடிப் பக்கமிருந்து மேய்ச்சலுக்கு வந்த பெயர் தெரியாத பெடியள் அங்காலிப் பக்கம், கூடவே தோட்டத்துக்குப் பட்டம் விடவென்றே வந்த சில பெடியள் என்று அந்தப் பெரிய செம்பாட்டு மண் தோட்டக் காணியை நிறைத்திருப்பார்கள். கையிலே மாப்பசை போட்டு முறுக்கேறிய கொடி நூற் பந்தைக் கிழுவந்தடித் துண்டமொன்றில் சுற்றித் தயாராக ஒருவர் வைத்திருக்க, இன்னொருவர் விண் பூட்டிய பட்டமொன்றை அந்த நூலிலே பொருத்தி விட்டு பட்டத்தை விரித்த படி, காற்றடிக்கும் திசைக்குக் கொஞ்சத் தூரம் ஓடிப் போய் மெல்லக் கையை விட, மேலே, மேலே, இன்னும் மேலே பட்டம் பறக்கத் தொடங்கிவிடும். "கொங்ய்ய்ய்ய்" என்று பட்டத்தில் பூட்டியிருக்கும் பனையோலை விண் ஒலி எழுப்பும். ஒன்று, இரண்டாகி, மூன்று, நாலாகி வானத்தில் பரந்திருக்கும் பட்டங்களில் ஒலியெல்லாம் சேர்ந்து கலவையாக இருக்கும். "ஆரின்ர பட்டம் உயரமாப் பறக்குது?" ஆவென்று வாய் பிளந்து மேலே கலர் பார்க்கத் தொடங்கி விடுவேன். அதிக உயரத்தில் பட்டம் விடுபவருக்குப் பக்கத்தில் போய் நிற்பதே பெருமை. அந்த ஆளும் ரைட் சகோதரர்கள் கணக்கில் பெருமை பிடிபடாமல் கருமமே கண்ணாக இருப்பார். சில பட்டங்கள் அற்ப ஆயுசில் வானத்தில் ஒருமுறை வட்டமடித்து விட்டுக் கீழே விழுந்து செத்துப் போகும். கானமயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி கணக்காய் நானும் வீட்டில் தென்னங்குச்சிகளை வளைத்து இதயம் போல வடிவமாக உடுப்புக்குத் தைக்கிற நூலைக் கொண்டு வளைத்துக் கட்டி, கோபால பிள்ளை மாமா வீட்டில் வாங்கிய கலர் திசூப் பேப்பரை மாப்பசையால் இந்த எலும்புக்கூட்டுப் பட்டத்துக்கு ஒட்டி விட்டு, தோட்டத்துக்கு வந்து சித்தி மகன் நூலைப் பிடிக்கப் பட்டத்தோடு தோட்டக் காணியிலேயே நேராக ஓடியது தான் மிச்சம். நான் கையை விட முதலேயே பட்டம் என்ர காலுக்குள் விழுந்து "என்னால ஓட முடியாது என்று மன்னிப்புக் கேட்கும்".

1986 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னுடைய இன்னொரு அவதாரமாக விமானக் குண்டு வீச்சில் தமிழரை அழிக்கத் தீர்மானிக்க, அதற்கு ஒத்திகை பார்த்த முதல் இடம் நாங்கள் விளையாடி அந்தத் தோட்டக் காணி தான். அந்த நாள் ஏனோ தெரியாது, நான் தோட்டப் பக்கம் போகவில்லை. இரண்டு பிளேன்கள் வானத்தை வட்டமிடுவதை ஆவென்று பார்த்திருக்கின்றது தோட்டக் காணியில் இருந்த கூட்டம். பிளேன்கள் தோட்டக்காணிகளைத் தாண்டி சில யார் தொலைவில் இருந்த தம்பாபிள்ளை மகேஸ்வரனின் தமிழ் தேசிய இராணுவம் இயக்கக் காம்பை தான் இலக்கு வைத்திருக்கின்றன. ஆனால் முன்பின் விமானக் குண்டு வீச்சைக் கண்டிராத சனம், பிளேனைக் கிட்டப் பார்க்கும் அதிஷ்டத்தை எண்ணி வியந்திருக்க, முதற் குண்டை ஒரு விமானம் கக்கியது. சிவராசா அண்ணையின் வீட்டை ஒன்றிய தோட்டப் புறம் இரண்டு சின்னப் பெடியள் விளையாடிக் கொண்டிருந்தவை. அந்தச் சின்னனுகள் தான் இந்த முதற் குண்டின் பலி கடாக்கள். உடல் சிதறி அங்கேயே செத்துப் போயின அந்தப் பிள்ளைகள். அதுக்குப் பிறகு அந்தத் தோட்டவெளிப் பக்கம் மாடு மேய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. ஆடு, மாடுகளுக்கு அவர்கள் வீட்டில் வைத்தே வெட்டிக் கொண்டு வந்த பலாக் குழைகளும், புல்லுக் கட்டுக்களும் கிடைத்தன. மாலை நேரக் காற்றாடலும் விளையாடும் உரிமையும், மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் மறுக்கப்பட்டது. "தோட்ட வெளிப்பக்கம் நிண்டால் பிளேன்கள் கண்டு குண்டு போட்டு விடும்" அந்தப் பக்கம் ஆரும் போகக் கூடாது" என்று எல்லார் வீடுகளிலும் தடா. ஒரு சில வீம்பு பிடிச்ச பெடியள் மட்டுமே தோட்டக் களத்தில் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிப் போனார்கள். எமது இளமைக் காலச் சந்தோசங்களில் ஒன்றான பட்டம் விடுதலும் வெகுவாகக் குறைந்து போயிற்று. (பட்டத்தைக் கண்டு பிளேன்கள் ஏவுகணை எண்டு நினைக்குமாம் - உபயம் : சுப்பையா குஞ்சி ஐயா)

இப்போது "The Kite Runner" இற்குத் தாவுகின்றேன்.
1975 களில் ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யப் படைகள் ஆப்கானிஸ்தான் மீது முற்றுகை நடத்த முன்னர் இருந்த வசந்த காலத்தில் "காபூல்" நகரில் கதை ஆரம்பமாகின்றது. அமீர் என்ற சிறுவனின் தகப்பன் பாபா அவ்வூர் பெரும்பணக்காரர். இவர்கள் வீட்டில் Hazara என்ற இனத்தைத் சேர்ந்த அலி என்ற வேலையாளும் அமீரின் வயதை ஒத்த ஹசன் என்ற சிறுவனும் பணியாளர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அமீரோ அவன் தகப்பனோ ஹசனை ஒரு வேலையாளின் மகன் என்ற அந்தஸ்தை தாண்டி மிகவும் நேசத்தோடு பழகுகின்றார்கள். அமீருக்கு இயல்பாகவே கதைகள் புனையும் திறமை இருக்கின்றது. இதை இவனின் தகப்பன் பாபா ஒரு பொருட்டாக எடுக்காவிட்டாலும் தந்தையின் நண்பர் ரஹீம் கான் அமீரை மிகவும் ஊக்கப்படுத்தி இன்னும் கதைகளை எழுத உற்சாகப்படுத்துகின்றார். படிக்காத ஹசனும் பணக்கார அமீரும் இணைந்து விளையாடுவதும், அமீர் தான் புனைந்த கதைகளை ஹசனுக்குச் சொல்லி மகிழ்வதுமாக இவர்களின் நட்பு தெளிந்த நீரோடையாகப் போய்க்கொண்டிருக்கின்றது. தான் பிறந்த போது தன் அம்மா இறந்த காரணத்தினால் தன் தந்தை பாபா தன்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்ற கவலையும் ஏக்கமும் மட்டும் அமீரின் மனதில் எப்போது ஒட்டிக்கொண்டிருக்கின்றது.
அப்போது அவ்வூரில் பட்டம் விடும் போட்டி ஆரம்பமாகின்றது. அந்தச் சுற்றுப் போட்டியில் தன் எஜமானர் பாபா வங்கித் தந்த பட்டத்தோடு தன் சின்ன எஜமான் அமீருடன் இந்தப் போட்டியின் தானும் களம் இறங்குகின்றான் ஹசன். தன்னுடைய இலாவகமான பட்டம் விடும் திறன், எதிராளியின் பட்டத்தை அறுத்து விழுத்தும் திறமை இவை எல்லாம் சேர்த்து ஹசனுக்கும் அமீருக்கும் அந்தப் பட்டப் போட்டியில் வெற்றியைக் கொடுக்கின்றது. தன் தந்தை மனதில் இந்த வேலைக்காரச் சிறுவன் இன்னும் இடம் பிடித்து விடுவானோ என்ற கவலை பொறாமையாக அமீரின் மனதில் உருவெடுக்கின்றது. ஊர்ச்சிறுவர்கள் ஹசனின் சாதியைத் தாழ்த்தி இகழ்ந்து, அவனை அடித்துத் துன்புறுத்துவதையும் கண்டும் காணாமல் நகர்கின்றான் அமீர். இணை பிரியா நண்பனாக இருந்த ஹசனை அவமானப்படுத்தியும், ஏசியும் விலக்குகின்றான் அமீர். தன் தந்தையை ஏமாற்றி நாடகமாடி ஹசனைத் திருட்டுப் பட்டம் கட்டி வீட்டை விட்டு வெளியேற்றுகின்றான்.

தொடர்ந்து சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுளையவும், வீடு வாசல் இழந்து பெரும் பணக்காரர் பாபாவும், மகன் அமீரும் பாகிஸ்தானுக்கு கள்ளப் பாதையால் பயணித்துப் போய் பின்னர் அமெரிக்காவில் அகதியாக அடைக்கலமாகுகின்றார்கள். 2000 ஆம் ஆண்டுக்கு நகர்கின்றது கதை. தன் தகப்பனின் மனதில் இடம் பிடிக்கும் அமீர் ஒரு பெரிய எழுத்தாளனாகவும் ஆகின்றான். இப்போது அமீர் ஒரு பரந்த உள்ளம் கொண்ட மனிதன். இந்த வேளை பாகிஸ்தானில் இருந்து தந்தையின் நண்பர் ரஹீம் கான் அவசரமாக அமீரை அங்கு வரும்படி அழைக்கின்றார். திருட்டுப் பட்டம் கட்டித் தொலைந்து போன தன் பால்யகால நண்பன் ஹசன் இப்போது உயிருடன் இல்லை என்ற தகவலையும், ஹசன் குறித்த இன்னொரு அதிர்ச்சிகரமான உண்மையையும் சொல்லி, ஹசனின் பிள்ளை ஏதோ ஒரு அனாதை விடுதியில் இருக்கலாம் என்றும் ரஹீம்கான் கூறி ஹசனின் படத்தையும், பழைய கடிதத்தையும் ஒப்புவிக்கின்றார். அமீர் இளம் பிராயத்தில் செய்த தவறத் திருத்தும் வாய்ப்பாக போல் அமைகின்றது இது. தலிபான் போராளிகளின் ஆட்சியில் இருக்கும் காபூலை நோக்கி அமீர் பயணித்து பல இன்னல்களைச் சந்தித்து அநாதையாகிப் போன ஹசனின் மகன் சொஹாப்பை காப்பாற்றித் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துப் போகின்றான். உளரீதியாகப் பாதிக்கப்பட்டு நொந்து ஒடுங்கிப் போய் இருக்கின்றான் அந்தச் சிறுவன். தன்னுடைய நண்பன் ஹசன் கைக்கொண்ட வித்தையைப் பயன்படுத்திப் பட்டத்தை ஓட்டிக் காட்டி ஹசனின் மகனின் மனதில் இடம் பிடித்து அவனின் நட்பைப் பெறுகின்றான் அமீர்.

"The Kite Runner" என்பது Khaled Hosseini என்ற ஆப்கானிய எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவல். 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நாவல் உலகளாவிய ரீதியில் மிகச்சிறந்த விற்பனையில் இருந்த நாவல்களில் ஒன்று, இது 34 நாடுகளில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இந்த நாவல் கூட கதாசிரியன் வாழ்க்கையில் நடந்த கதையோ என்ற எண்ணமும் வருகின்றது. நாவலின் களம் கூட இந்த எழுத்தாளரின் வாழ்க்கையோடு இணைந்து நிற்கின்றது. Khaled Hosseini காபூல் நகரில் பிறந்து 1980 ஆக் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். 2007 ஆம் ஆண்டு இவர் எழுதிய A Thousand Splendid Suns" என்ற நாவல் கூட முதற்தர விற்பனையில் இருக்கின்றது. இந்த நாவலைத் திரைக்கதை வடிவமாக்கியவர் David Benioff, இயக்கிவர் Marc Forster . இப்படத்தைப் பற்றிய மேலதிக செய்திகளை அறிய: http://www.kiterunnermovie.com/

நேற்று The Kite Runner படத்தைப் பார்த்த கணமே வரும் போது இந்த நாவலை வாங்கிக் கொண்டேன். "இந்தப் படம் அருமை, ஆனால் நாவலை வாசிக்கும் சுகம் அதை விட அருமை" என்று முறுவலோடு சொன்னாள் புத்தக விற்பனைப் பிரதிநிதி. ஆற அமர இருந்து வாசிக்க வேண்டும் இதை.

The Kite Runner திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துப் பதிவுகள் மிக அழகாகக் காட்டப்படுகின்றன. படத்தின் ஆரம்பத்திலிருந்து நிறைவு வரை இழையோடும் பின்னணி இசை கூட ஆப்கானிய கலாச்சாரத்தோடு இணைந்த சுகத்தைக் கொடுக்கின்றது. மரத்துண்டத்தில் தம் பெயர் பொறித்து மகிழந்தும், பட்டம் விட்டும் கதைகள் பேசியும் வாழ்ந்த அந்தப் பால்ய நட்புக்காலம், அமீர் வெறுத்து ஒதுக்கும் போது நேசமாக இரும் ஹசனின் பண்பு, சோவியத் படைகளின் படையெடுப்பு, தலிபான் போராளிகளின் ஆட்சிக்காலம், தொலைந்த நட்பின் சுவடுகளாய் எஞ்சி நிற்கும் இடங்களைத் தேடிப் போதல் என்று பல இடங்களைக் காட்சிப்படுத்துகின்றது இப்படம். கூடவே ஹொலிவூட் படமென்பதால் ரஷ்யா மீதான சீண்டல்களும், தலிபான் போராளிகளை மிக மோசமானவர்களாகக் காட்டும் காட்சிகளும் இன்னும் அழுத்தம் கொடுத்தே காட்சியாக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு நாவலைப் படமாக்கும் போது ஏற்படும் சிக்கலைச் சில காட்சிகளின் வேகம் புலப்படுத்துகின்றது. உண்மையில் இந்த நாவலை வாசித்து விட்டுப் படம் பார்ப்பவர்களுக்கு இன்னும் ஒருபடி மேல் போய், படத்தோடு ஒன்றக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும். இருபது ஆண்டுகளுக்கு முந்திய பூமி சோகம் களைந்த சுதந்திரமான பிரதேசமாகவும், பின்னர் சமீபத்திய காபூல் நகர் நொண்டிச் சிறுவர்கள் ஓடியாடி விளையாடும் பூமியாகவும் காட்டப்படுவது எம் ஊரோடு பொருத்திப் பார்க்கவேண்டிய மனது வலிக்கும் காட்சிகள். எங்கள் கதைகள் இப்படிப் படமாவது எப்போது? நம்மவர் இப்படியான படைப்புக்களை இன்னும் வலிமையான எழுத்துக்களோடு உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழிப்படைப்பாக எழுதினால் இப்படி இரு சந்தர்ப்பம் வாய்க்குமோ?

கடந்த பொங்கலுக்கு வானொலி நிகழ்ச்சி செய்யும் போது சில வடமராட்சியில் வாழ்ந்த நேயர்கள் கலந்து கொண்டு, தைப்பொங்கல் தினத்தில் தம்மூர் கடற்கரையில் வைத்து பட்டங்களைப் பறக்க விடும் போட்டியெல்லாம் ஒரு காலத்தில் நடந்திருக்கிறதாம். எனக்கு அது புதுமையாக இருந்தது.

செங்கை ஆழியான் எழுதிய தலை சிறந்த நாவல்களில் ஒன்று "முற்றத்து ஒற்றைப் பனை" . சிரித்திரன் வெளியீடாக வந்த இந்த நாவல் .
தன் வாழ்வில் பட்டம் விடுதலையே சாதனையாகக் கொண்டு வாழ்ந்த "கொக்கர் மாரிமுத்து" என்னும் மாரிமுத்தர் அம்மானின் வாழ்க்கையோடு நம்மூரின் வாழ்வியலில் ஒரு அங்கமாகியிருந்த பட்டம் பறக்கவிடும் நிகழ்வினை இந்த நாவல் சுவை பட விபரிக்கின்றது.
நூலகத் திட்டத்தில் இந்த "முற்றத்து ஒற்றைப் பனை" இணையத்திலேயே வாசிக்கக் கிடைப்பதும் ஒரு வரம்.

என் சக வேலைத் தோழி சொன்னதை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன். போரின் கொடுமைக்கு முகம் கொடுக்க முடியாமல், ஊரையும் உறவையும் தொலைத்து எங்கோ ஒரு தொலைவில் இருக்கும் அந்நிய தேசம் வந்து பாதுகாப்பாக மட்டும் இருந்து, இங்கிருந்து அந்தப் பழைய வாழ்வு மீண்டும் வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நான் அதிஷ்டக்காரனா?
விடையைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

33 comments:

  1. ஆமாங்க ரொம்ப நல்ல புத்தகம்...ஒன்றி போய் படித்தேன்...
    இன்னும் படம் பாக்கவில்லை.ஒரு பயம்தான் காரணம்..ஆனா நீங்க சொல்லி இருக்கரதா பாத்தா ரொம்ப சிதைக்காம எடுத்து இருக்கர மாதிரிதான் தெரியுது.:):) மிகவூம் முக்யமான திருப்பு முனையா நான் புத்தகத்துல உணர்ந்தது ஹசன் கற்பழிக்கபடும் காட்சியும்..ஆமீரின் கைய்யாலாகத்தனமும் அதை தொடர்ந்து ஆமிரின் மன போராட்டாமும்..:):)

    ஆனால் படத்தை பற்றி எழுதுவதற்கு முன்னால் நீங்க எழுதியிருப்பதை படித்து மன்னதுக்கு கஷ்டமாக இருந்தது........

    ReplyDelete
  2. --"இந்தப் படம் அருமை, ஆனால் நாவலை வாசிக்கும் சுகம் அதை விட அருமை" என்று முறுவலோடு சொன்னாள் புத்தக விற்பனைப் பிரதிநிதி. ஆற அமர இருந்து வாசிக்க வேண்டும் இதை.--

    அதனால்தான் எனக்கு இந்தப் படத்தைப் பார்க்கும் எண்ணமில்லை. குறைந்தது இப்போதைக்காவது.

    புத்தகத்தை வாசித்துவிட்டு அதைப்பற்றியும் ஒர் இடுகை போடுங்கள்.


    --"கொங்ய்ய்ய்ய்" என்று பட்டத்தில் பூட்டியிருக்கும் பனையோலை விண் ஒலி எழுப்பும்.--

    இந்த வரி நிறைய நினைவுகளைத் தட்டியெழுப்பி விட்டுது. ஒரு விசயம் கேக்கோணும். மடத்துவாசல் பக்கமெல்லாம் பெட்டையள் விளையாட மாட்டினமே. :)

    பல புள்ளிகளை இணைத்து எழுதியிருப்பது நன்றாகவிருக்கிறது பிரபா.

    -மதி

    ReplyDelete
  3. //Radha Sriram said...
    ஆமாங்க ரொம்ப நல்ல புத்தகம்...ஒன்றி போய் படித்தேன்...
    இன்னும் படம் பாக்கவில்லை.ஒரு பயம்தான் காரணம்..//

    வணக்கம் Radha Sriram

    இக்கதையில் இடம்பெற்ற முக்கிய சில திருப்பங்களை அல்லது காட்சிகளைப் பற்றி என் பதிவில் நான் பேசவில்லை. அதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். புதுசா இந்தப் படத்தையோ, நாவலையோ வாசிப்பவர்களுக்கு அது இயல்பாகவே தெரியட்டும்.

    இரண்டு மணி நேரப் திரைப் பயணத்தில் ஒரு சுவையான நாவலைக் கொண்டுவரும் சிரமம் இப்படத்திலும் தெரிகின்றது, ஆனாலும் பார்க்காமல் இருந்துவிடக் கூடாத ஒரு படம்.

    ReplyDelete
  4. கலக்கல் தல..

    இந்த இடுகைய Non leanear இடுகைன்னு சொல்லலாமா :) ஒண்ணிலிருந்து இன்னொன்னு இன்னொன்னிலிருந்து இன்னொன்னு படிக்க நல்லாருந்தது..இந்த படம் கேள்விபட்டதோட சரி..தேடிப்பிடிக்கிறேன்..

    ReplyDelete
  5. //மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

    அதனால்தான் எனக்கு இந்தப் படத்தைப் பார்க்கும் எண்ணமில்லை. குறைந்தது இப்போதைக்காவது.//

    நல்ல முடிவு, காரணம் நானும் இப்போதே பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்து விட்டேன். நாவல் இன்னொரு உலகத்தைக் காட்டுகின்றது. இந்த நாவல் உருவாக்கும் உலகத்தில் கொஞ்சக் காலம் பயணிக்கலாம்.

    //ஒரு விசயம் கேக்கோணும். மடத்துவாசல் பக்கமெல்லாம் பெட்டையள் விளையாட மாட்டினமே. :)//

    அண்ணை, அவையளும் இருப்பினம். ஆனால் அந்தக் காலத்திலை அவையள் கூடப் பேசவே வெட்கப்பட்டு நாணிக் கோணி நின்ற காலம் ;-)

    ReplyDelete
  6. // அய்யனார் said...
    கலக்கல் தல..

    இந்த இடுகைய Non leanear இடுகைன்னு சொல்லலாமா :) ஒண்ணிலிருந்து இன்னொன்னு இன்னொன்னிலிருந்து இன்னொன்னு படிக்க நல்லாருந்தது..இந்த படம் கேள்விபட்டதோட சரி..தேடிப்பிடிக்கிறேன்..//

    வாங்க தலைவா

    உங்களுக்கு இந்த நாவலோ படமோ கண்டிப்பா பிடிக்கும். எங்களுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் படைப்புக்களையே பதிவாக இரைமீட்கின்றேன். எனவே சுயபுராணமும் கலந்து இப்படித் தான் இருக்கும் ;-) எழுதி முடித்ததும் பாரம் குறைந்த இலேசான சுகமும் இருக்கும்.

    ReplyDelete
  7. பிரபா
    இந்தப் பதிவைப் படிக்கத் தொடங்கியதும் 'முற்றத்து ஒற்றைப் பனை தான்' நினைவுக்கு வந்தது.

    "நம்மவர் இப்படியான படைப்புக்களை இன்னும் வலிமையான எழுத்துக்களோடு உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழிப்படைப்பாக எழுதினால் இப்படி இரு சந்தர்ப்பம் வாய்க்குமோ?'

    போரின் வடுக்களைச் சொல்லிக் கொண்டிருப்பதிலும் பொற்காலத்தை மீட்டிப் பார்ப்பதிலும் அதிக எழுத்துக்கள் கவனம் செலுத்தியுள்ளன என நினைக்கிறேன்.சிறுவர் தொடர்பான இலக்கிய வடிவங்களைப் படைப்பது மிகவும் குறைவு.தற்காலத்தில்
    வடக்கு கிழக்கை மையப்படுத்திச் சிறுவர் தொடர்பான நாவல் ஒன்று வெளிவருமாயின் நிச்சயமாக அது பேசப்படும்.
    யார் எழுதுவார்????

    ReplyDelete
  8. நல்ல படமாயிருக்க வேண்டுமென்று நினைத்துப் போனேன்.
    ஏமாற்றி விட்டது. குறை இயக்குனரிடம்தான். நடிகர்கள்
    அனைவரின் தரமும் A++++++. அப்பாவை தனக்குப் பிடித்த
    பெண்ணை மணம் பேச அனுப்பும் காட்சியும் அதற்கு
    அடுத்து வரும் காட்சிகளும் அருமை.
    நேர் கோட்டில் அமையும் படங்களை இயக்க நிறையத் திறமை
    வேண்டும். பாக்கிஸ்தானுக்கு தப்பித்துப் போகும் போது
    எதிர்ப்படும் ரஷ்யரைப் போல் பல படங்களில் பார்த்துச்
    சலித்து விட்டது. A.R Rahman would have been a better choice for the music. The Spanish person didn't have a good understanding of the local music. Rahman used his "Bombay" score in the movie "Fire" as well. It fit perfectly!

    ReplyDelete
  9. ஆகா திரும்பவும் ஒரு கலக்கல் பதிவு. Drachenläufer ( The Kite Runner ) என்ற இந்த புத்தகத்தை நான் 2005இல் வாசித்திருக்கின்றேன். வாசித்து எனக்குள்ளேயே கற்பனையில் ஒரு திரைப்படத்தையும் ஓட்டியிருக்கிறேன். அந்த திரைப்படம் அளவு இந்த திரைப்படம் வருமா என்பது தெரியவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம்.

    நீங்கள் பட்டவிடும் வயதுவரை ஊரிலிருந்திருக்கிறீர்கள். உங்களின் அனுபவங்களை அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள். நான் எல்லாம் பட்டம் விடும் அண்ணாமாரை அண்ணாந்து வாய்பார்க்கும் வயதுவரை மட்டுமே அங்கு இருந்ததால். அதைப்பற்றிய அனுபவமே இல்லை.

    கானா, மலையாள படமும் அதில் வரும் நடிக{நடிகை}களுக்கு மட்டுமே முக்கியத்துவம் குடுத்து எழுதுவார் என ஒரு தப்பான எண்ணத்திலிருந்தேன். பருவாயில்லை நல்ல நல்ல ஆங்கிலத்திரைப்படங்களுக்கும் முக்கியத்துவம் குடுக்கிறார். :-))

    ReplyDelete
  10. தல

    அப்படியே ஒரு சினிமா பார்த்த மாதிரி இருக்கு. அனுபவச்சி எழுதியிருக்கிங்க ;))

    \\மூங்கில் கழிகளை வளைத்துச் செய்யப்பட்ட கொக்குப் பட்டம், நாலு மூலைப் பட்டம், எட்டு மூலைப் பட்டம், வெளிச்சக்கூடு என்று வானத்தில் அணிவகுக்கும் பட்டக் கூட்டம்.\\\

    பானா, ரெட்டை கண்ணு, ஒத்தை கண்ணு, வால் கத்தாடின்னு எனக்கும் நான் விட்ட பட்டம் எல்லாம் ஞாபகத்துக்கு வருது. தீபாவளி ஆனா போதும் ஏரியாவில் பெரிய சண்டையே வரும். எப்படியும் எவன் மண்டையாச்சும் உடையும் ;)))

    இப்போ எல்லாம் டிவி தான்...

    ReplyDelete
  11. \\ அய்யனார் said...
    கலக்கல் தல..

    இந்த இடுகைய Non leanear இடுகைன்னு சொல்லலாமா :) ஒண்ணிலிருந்து இன்னொன்னு இன்னொன்னிலிருந்து இன்னொன்னு படிக்க நல்லாருந்தது..இந்த படம் கேள்விபட்டதோட சரி..தேடிப்பிடிக்கிறேன்..\\

    சீக்கிரம் தேடிப்பிடிங்க தல ;))

    (எங்களுக்கு எல்லாம் அய்யனாரு தான் சப்ளையர்) ;)

    ReplyDelete
  12. // பஹீமாஜஹான் said...
    போரின் வடுக்களைச் சொல்லிக் கொண்டிருப்பதிலும் பொற்காலத்தை மீட்டிப் பார்ப்பதிலும் அதிக எழுத்துக்கள் கவனம் செலுத்தியுள்ளன என நினைக்கிறேன்.//

    வணக்கம் சகோதரி

    உண்மைதான் பழம் பெருமைகளையும், கலாச்சாரத்தையும் மீண்டும் மீண்டும் புரட்டிப் புரட்டிப் பேசுவதை அதிகம் பேசியும், எழுதியும் விடுகின்றோம். நிகழ்காலப் பதிவுகள் ஆழமற்றே இன்னும் இருக்கின்றன.

    சிறுவர் இலக்கியம் மூலமே எம் துயரையும், இந்நிகழ்வுகளையும் வேற்று மனிதருக்கு இயல்பாகப் புரியவைக்கலாம். அத்தோடு சிறுவருக்கான இலக்கியம் என்பதும் எமது படைப்பாளிகளிடம் இருந்து அரிதாகவே விரல் விட்டு எண்ணும் வையில் வந்துள்ளன.
    யார் செய்யப் போகின்றார்கள் என்பதே எனக்குள் இருக்கும் கேள்வியும்.

    ReplyDelete
  13. // Anonymous said...
    நல்ல படமாயிருக்க வேண்டுமென்று நினைத்துப் போனேன்.
    ஏமாற்றி விட்டது. குறை இயக்குனரிடம்தான்.//


    வணக்கம் நண்பரே

    நாவலைப் படித்தோ, அல்லது இதையொத்த திரைப்படங்களைப் பார்த்தோ இருந்தால் இப்படத்தோடு ஒன்ற முடியாது என்பதை ஏற்கின்றேன். கூடவே இந்த அவலங்கள் தொடர்கதையாக இருக்கும் போது இப்படியான படைப்புக்கள் அதிகம் வருவதும் தவிர்க்கமுடியாதது.
    படத்தின் முடிவுக் காட்சியும் அதிகம் அழுத்தமில்லாமல் தான் இருக்கின்றது.

    எனக்கு இப்படம் ஓர் புது அனுபவமாகவே வாய்த்தது. இசை ஏ.ஆர் ரஹ்மான் பம்பாய் காலத்தில் இருந்த பாங்கில் அவர் இப்போதும் இருந்தால் உண்மையில் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் இன்றுள்ள ரஹ்மான் சாதிப்பாரா என்று தெரியவில்லை.

    நீங்கள் கூறியது மாதிரி பாத்திரப் பொருத்தம் மிகக் கச்சிதம்.

    ReplyDelete
  14. //கூடவே இந்த அவலங்கள் தொடர்கதையாக இருக்கும் போது இப்படியான படைப்புக்கள் அதிகம் வருவதும் தவிர்க்கமுடியாதது.//
    புரிகிறது. நாட்டைவிட்டுப் போகும் போது காட்சி அமைப்பு
    வலுவாக இல்லை என்பது என் கருத்து. எதோ டைரக்டர்
    போகச் சொன்னார், போகிறோம் என்பது போல்
    நடிகர்கள் வெளியேறியது போலிருந்தது. இழப்பை, திரும்பி
    வருவோமோ மாட்டோமோ என்கிற ஆதங்கத்தை அழுத்தமாகக்
    காண்பித்திருக்கலாம்.

    கோக் வாங்கி வரட்டுமா என்று கேட்கும் மகனின் எண்ணத்தை
    புரிந்து கொண்டு, வெளிப்படையாகப் பேசும் தந்தை,
    மருத்துவமனையில், தந்தையைப் பார்க்க குடும்பத்துடன் வந்த
    தான் விரும்பும் பெண்ணுடன் மகன் தனியாக சோகத்தைப்
    பகிர்ந்து கொள்ளும் போது, கண்ணியமாகப் பேசுவது,
    தான் எழுதிய கதையை அவர் படித்து விட்டார் என்று
    தெரியும் போது அழுகையினுடையே மகிழ்ச்சியடைவது போன்ற காட்சிகளுக்காக டைரக்டரைப் பாரட்டலாம்.

    படம் மனிதர்களைப் பற்றியது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, பின்னணியில் இறைவனைப் பற்றிய
    ஆங்கிலப் பாடல் நெருடல்.

    ReplyDelete
  15. மிகவும் நுணுக்கமாக அலசியிருக்கின்றீர்கள். பாகிஸ்தானுக்கு போகும் காட்சி போல இன்னும் சில காட்சிகள் வேகமாக/இயல்பை மீறிய செயற்கையாக உள்ளது நாவலைப் படமாக்கியதன் சிரமத்தைக் காட்டுகின்றது.இரு வேறு பருவங்களைக் காட்சிப்படுத்தியதால் வரும் நேர நெருக்கடியும் காரணமாக இருக்கலாம்.

    அமீரின் திருமணத்தில் கண்ணாடியில் இருவரும் முகம் பார்க்கும் சடங்கில் மனைவி அவனைப்பார்த்து "என்ன தெரிகின்றது" என்பாள். "என்னுடைய எதிர்காலம் தெரிகின்றது" என்பான் அவன், அதுவும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  16. //U.P.Tharsan said...
    ஆகா திரும்பவும் ஒரு கலக்கல் பதிவு. Drachenläufer ( The Kite Runner ) என்ற இந்த புத்தகத்தை நான் 2005இல் வாசித்திருக்கின்றேன். //


    வாங்கோ தர்சன்

    நீங்கள் ஜெர்மன் மொழிபெயர்ப்பில் வந்ததை வாசித்திருக்கிறியள் போல.

    நான் பட்டம் விட்டு மண் கவ்வியது தான் மிச்சம் ;-)

    யார் சொன்னது மலையாளப்படம் மட்டும் தான் எழுதுவன் எண்டு? செவன் சமுராய் (ஜப்பான்), பதேர் பாஞ்சாலி (வங்காளம்), வீடு (தமிழ்), சினிமா பரைடைசோ (பிரெஞ்ச்) எல்லாம் எழுதியிருக்கிறன் தானே ;-)

    ReplyDelete
  17. //கோபிநாத் said...
    தல

    அப்படியே ஒரு சினிமா பார்த்த மாதிரி இருக்கு. அனுபவச்சி எழுதியிருக்கிங்க ;))//

    ரொம்ப நன்றி தல

    உங்களுக்கும் பட்டம் விட்ட அனுபவம் இருக்கா? ஒரு கொசுவர்த்திப் பதிவைப் போட வேண்டுகின்றேன்.

    அய்ஸ் இருக்கப் பயமேன். அவர் இந்தப் படத்தை சப்ளை செய்வார் ;-)

    இப்போ இருக்கிற பசங்களுக்கு கொக்கு பற பற பாட்டில் தான் பட்டமே தெரியும்.
    அது ஒரு அழகிய காலம்....

    ReplyDelete
  18. இந்தப் புத்தகத்தை ஸ்கிப்போல் ஏர்ப்போர்ட் கடையில் பார்த்தேன். ஏனோ வாங்காமல் விட்டுவிட்டேன். உங்கள் பதிவு வாங்கத் தூண்டுகிறது. வாங்கீட்டாப் போச்சு :)

    சமீபத்தில் தாலிபான் ஆப்கானிஸ்தான் ரஷ்யா வைத்து வந்திருக்கும் இரண்டாவது படம் இது. சார்லி வில்சன்'ஸ் வார் என்ற படமும் இந்தச் சூழ்நிலை வைத்து எடுக்கப்பட்டதுதான். சென்ற வாரம் திரையரங்கில் பார்த்தேன்.

    ReplyDelete
  19. வாங்க ராகவன்

    இந்தப் படத்தைப் பொறுத்தவரை போர் நடக்கும் களத்தை விட, போருக்கு முன்னான பின்னான வாழ்வையும், நட்பையும் மையப்படுத்தியுமே நகர்கின்றது.

    நாவலை வாசிக்க ஆரம்பித்து விட்டேன். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  20. உங்கள் பதிவுகள் அத்தனையும் படித்தேன். உங்களின் சீரான மொழியும் கூர்ந்த அவதானிப்பும் பீறிடும் நினைவுகளும், இசை ரசிப்பும் மனதிற்கு மிக நெருக்கமாக உள்ளன.
    எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்தாளர். சென்னை.

    ReplyDelete
  21. வணக்கம் ராமகிருஷ்ணன் அவர்களே

    வாழ்வில் சில நேரங்களில் வரும் உச்ச பட்ச சந்தோஷம் என்பார்களே, அந்த நிலையில் நான் இப்போது இருக்கின்றேன். நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் நீங்கள் என்பதை என் புளாக்கர் புரொபைலில் போட்டுத் தான் வலைப்பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். உங்களின் கதை சொல்லும் பாணி என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

    என்பதிவுகள் உங்களை ஈர்க்கும் அளவுக்கு நகர்ந்ததை நினைத்து உண்மையிலேயே பெரு மகிழ்வு கொள்கின்றேன். மிகுந்த நன்றிகள்.

    ReplyDelete
  22. அன்பின் கானா பிரபா,
    பட்டம் விடும் பால்யத்தினை எழுத்தின் மூலம் திரும்பவும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.
    எழுத்தில் பழைய சந்தோஷமும்,மென் சோகமும் அழகாக இழையோடுகிறது.
    'தினக்குரலில்' உங்கள் வலைப்பதிவு பற்றிய குறிப்பு படித்தேன்.மிக மகிழ்வாக உணர்கிறேன்.
    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  23. வணக்கம் ரிஷான்

    பழைய நினைவுகளும் அவை தரும் உட் பூரிப்பும் தான் இப்போது நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல்.

    பதிவை வாசித்துத் தங்கள் கருத்தையும் இட்டமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  24. பட்டம் விட்டதனால் உண்டான வீரவிழுப்புண் இன்னும் எனது காலில் உள்ளது. நினைவுகளை கிளறியதற்கு நன்றி. செங்கையாழியான் குறிப்பிடும் பனையில் விட்டம்போடுதல் தொடர்பான தொழிநுட்பம் புதிராகவேயுள்ளது. 'லேட் பிக்கப்' என எண்ணவேண்டாம். நல்லூர் பற்றிய தகவல்களும் ஆச்சரியம் தந்தது. ஊசிலி மெஷின் ஜெனரேட்டர் விவகாரமும் எம்மைப்பற்றிய சுயஅனுதாபத்தை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றையும்விட குறுகியகாலத்தில் நான்பார்த்த தமிழ் வலைத்தளங்களில் கானாபிரபாவுக்கான இணைப்பும் காணப்படுதலே உண்மையான வெற்றி. தொடர்ந்து எழுதவாழ்த்துக்கள் கானா பிரபா..

    ReplyDelete
  25. பிரபா,

    படத்தைவிட நீங்கள் பட்டம் விட்ட நிகழ்வுகள்தான் மனதில் நிற்கின்றது...

    ReplyDelete
  26. அண்ணன் எப்படி இருக்கிறீர்கள்
    கன நாளைக்குப்பிறகு வந்திருக்கிறேன் அதனால் ஆறுதலாக கருத்தை சொல்கிறேன் வேறு என்ன ஊரோடு கதைத்தீர்களா?

    ReplyDelete
  27. //ஆ.கோகுலன் said...
    இவை எல்லாவற்றையும்விட குறுகியகாலத்தில் நான்பார்த்த தமிழ் வலைத்தளங்களில் கானாபிரபாவுக்கான இணைப்பும் காணப்படுதலே உண்மையான வெற்றி. தொடர்ந்து எழுதவாழ்த்துக்கள் கானா பிரபா..//


    வணக்கம் கோகுலன்

    நாம் சந்திக்கும் அனுபவங்களையும், மனிதர்களையும் பற்றிய எண்ணவோட்டத்தையே பதிவுகளாகத் தருகின்றேன். அதே எண்ணவோட்டத்தில் இருக்கும் வலையுலக நண்பர்களும் இதில் கை கோத்திருக்கின்றார்கள். உண்மையிலேயே இது எனக்கு பெரு நிறைவைத் தரக்கூடிய விஷயம். இவ்வளவு எல்லையே எனக்குப் போதும். மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  28. //தென்றல் said...
    பிரபா,

    படத்தைவிட நீங்கள் பட்டம் விட்ட நிகழ்வுகள்தான் மனதில் நிற்கின்றது.../

    என் பதிவை வாசித்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றிகள் தென்றல்.

    ReplyDelete
  29. // தமிழன்... said...
    அண்ணன் எப்படி இருக்கிறீர்கள்
    கன நாளைக்குப்பிறகு வந்திருக்கிறேன் அதனால் ஆறுதலாக கருத்தை சொல்கிறேன் வேறு என்ன ஊரோடு கதைத்தீர்களா?//

    வாங்கோ தம்பி

    எப்படி சுகம், ஆறுதலாக வாங்கோ. இங்கே தான் சுற்றிக் கொண்டிருப்பன் ;-)

    ஊரோடு ஒவ்வொரு வாரமும் கதைப்பன். உங்களைக் கண்டதும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  30. மீண்டும் இப்பதிவுக்கு வருகை தருகிறேன் கானாபிரபா.

    இரு தினங்களுக்கு முன்னர் தான் 'THE KITE RUNNER' புத்தக வடிவில் பார்த்துமுடித்தேன். அத்தியாயங்கள் பல உளச்சிக்கலைத் தோற்றுவித்தபடியும் விழிகசியச் செய்தபடியும் பல நாட்கள் கூட வருபவையாக இருக்கின்றன. மனதோடு ஒன்றிப்போனதாக இருந்தது கதை. ஹசனின் பொறுமையும் ஆமிரின் குற்றவுணர்வுமாக கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. இதையொட்டி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படமும் அபாரமாக இருப்பதாக நீங்களே குறிப்பிட்டிருப்பதால் கட்டாயம் படத்தினையும் பார்க்கவேண்டும்.

    காலித் ஹுசைனியின் 'A thousand splendid suns' கூட புலம்பெயரும் வலியைச் சொல்கிறது. இதில் மர்யம்,லைலா என இரு பெண்கள் கூட வருகிறார்கள். பல வலிகள் மனதில் பெரும்பாரத்தை ஏற்றி அழ வைக்கும்படியான எழுத்துக்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இந் நாவலை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். திரைப்படமாக்கப்பட்டிருக்குமோ எனத் தெரியவில்லை. பார்த்து ஒரு பதிவிடுங்கள்.

    'முற்றத்து ஒற்றைப்பனை' அருமையான நாவல். மொழிநடை முழுதும் நகைச்சுவை மிதக்கும். இறுதி அத்தியாயத்தில் பெரும்சோகத்தைக் கண்ணில் பரப்பும். பனை மரத்தில் கட்டப்படும் பட்டம் குறித்தும் அது எழுப்பும் ஓசை குறித்தும் நானேதும் அறியேன். எனினும் விவரிப்புக்கள் புரிந்தன. அக் கால யாழ்ப்பாணம் குறித்த பிம்பங்களும் கண்களில் தோன்றின. நல்ல நாவல்.

    பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  31. வாங்க ரிஷான்

    'A thousand splendid suns' என் வாசிப்பு பட்டியலில் இருக்கும் நாவல்களில் ஒன்று, அழகான விளக்கத்துக்கு நன்றி

    இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு நாவல் கொடுத்த சந்தோஷம் கிட்டவில்லை என்பார்கள், ஆனாலும் ஒரு புதிய பரிமாணம் உங்களுக்குக் கிட்டலாம்.

    ReplyDelete
  32. Hi Anna,
    Thanks for introducing this movie, I watched today. It is very good movie.

    "இந்தப் படம் அருமை, ஆனால் நாவலை வாசிக்கும் சுகம் அதை விட அருமை"
    IMHO, We can not discriminate the movie by comparing with book.The experience or feeling we get from movie and book are two different thing. When we are reading a book, we give attention to each of the line so we enjoy much. !!!

    ReplyDelete
  33. வாங்கோ திலகன்

    உண்மைதான் இரண்டுமே இரு வேறு பரிமாணத்தைக் கொடுக்கும் இல்லையா.

    ReplyDelete