Pages

Saturday, July 22, 2006

கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.

ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.
அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறூப்" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.

'தில்லீஸ்
குறூப்"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.

மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.
'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்.
மாதக் கடைசி. கையில் பணமில்லை.

வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.
அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.

மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ"வைத் தள்ள ஆரம்பித்தேன்.
அந்த 'ஓட்டோ"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.
எனினும் என்ன பயன்?
எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.
அது திறக்கப்படவில்லை.
மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?
யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.
வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.
வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.
தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.
பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.
மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.
அவர்களின் பின்னால் 'ஜயவேவா" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.
இராணுவத்தினர் 'ட்ரக்"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.
பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.
கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.
அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.
அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.
அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.
வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.
நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.
ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.
ஓடினால் 'தமிழன்" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.
நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.
கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.
வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.
அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.
என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.
தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.
இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.
அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.
பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.
சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.
இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.
இரவு எட்டு மணியிருக்கும்.
முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.

லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.
உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.
உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.
இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...
ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.

பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.
அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.

இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.
பசித்தது.

துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.
பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.
'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்."
அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.

யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.
யாழ் தளத்திற்கும் சோழியனுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்

26 comments:

  1. மடத்துவாசல் பிள்ளையாரடிக்கு எனது அனுவமும் வந்ததையிட்டு மகிழ்ச்சி பிரபா. புலம்பெயர் ஈழத்தமிழன் என்ற பதம் கூர்ப்படைய அல்லது உற்று நோக்கப்படவும் 'கறுப்பு ஜுலை'யே முக்கிய காரணம் என்றால் தப்பில்லை. அந்த வகையில் புகலிடத்தில் வாழும் பெரும்பான்மையோரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு 'கறுப்பு ஜுலை' அனுபவம் இருக்கும். அவை பதிவுகளாக வேண்டும் என்பது எனது ஆசை.

    அன்புடன், 'சோழியான்'.

    ReplyDelete
  2. வணக்கம் சோழியன்
    இந்தச் சோக நிகழ்வை உங்களைப் போன்றவர்கள் பகிர்ந்துகொள்ளுவதன் மூலம் இப்பேரினவாதிகளின் முகத்தை வெளி உலகுக்குக் காட்டியிருக்கிறீர்கள். காலத்தின் தேவைகருதி நீங்கள் செய்த இப்பணிக்கு நான் தலைவணங்குகின்றேன்.

    ReplyDelete
  3. பதிவிட்டதுக்கு நன்றி.
    இருநாள் முன்பே போட்டுவிட்டீர்கள்.

    ReplyDelete
  4. நான் பிறக்கமுதல் இறந்த அனைத்து உயிர்களுக்கும் என் அனுதாபங்கள். நல்ல பதிவு இதை பற்றி மேலும் அறிய ஆவல். கூகிள் துணைசெய்வார் என நினைக்கிறேன். நன்றி

    ReplyDelete
  5. வணக்கம் வசந்தன்

    தொடர்ந்துவரும் நாட்களில் சிட்னியில் நிகழும் நிகழ்வுகளை முடிந்தால் தருகின்றேன்.

    தர்சன்

    கூகுளில் சில கட்டுரைகளைத் தேடியெடுக்கலாம், ஆனால் இப்படியான அனுபவ வாக்குமூலங்களைப் பெறுவது கடினம்.

    ReplyDelete
  6. பிரபா என்னத்தைச் சொல்ல

    ReplyDelete
  7. வணக்கம் ஈழநாதன்
    இந்தப் பாதிப்பில் அனுபவப்பட்ட பலர் இப்போது நம் தாயகம் மீதான கரிசனையிலிருந்து ஒதுங்கியிருப்பது தான் வேதனையிலும் வேதனை.

    ReplyDelete
  8. தங்கள் வருகைக்கு நன்றிகள் கலாநிதி

    ReplyDelete
  9. சோழியனின் அந்தப் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பிரபா. 77இலும் 83இலும் நடந்த கலவரங்கள் மூட்டம் நான் நாட்டில் இல்லாததால் நேரடி அநுபவம் எனக்கு இல்லை. (அவை எல்லாவற்றிற்கும் சேர்த்து இந்திய இராணுவத்தினர் மூலம் நான் நிறைய அநுபவங்களைப் பெற்றேன்). இருந்தாலும் எனது குடும்பத்தினர் மூலமாகவும் (இரண்டு கலவரங்களிலும் கொழும்பில் இருந்தவர்கள்) மற்றையோரின் மூலமாகவும் அந்தப் பயங்கர சம்பவங்களை அறிந்து கொண்டேன். மீண்டும் மீண்டும் இவை பதிப்பிக்கப்பட வேண்டும்.

    நேற்று உங்கள் வானொலியில் நீங்கள் நடத்திய கருத்துக்களத்தில் ஒருவர் கூறினார், 58, 77, 83 கலவரங்களை விட நாட்டில் வருடந்தோறும் சிறு சிறு கலவரங்கள் தமிழருக்கு எதிராக இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார். அது உண்மை. இவையனைத்துக்கும் விரைவில் முடிவு காணப்படும் என நம்புவோம்.

    ReplyDelete
  10. வணக்கம் சிறீ அண்ணா

    நேற்றைய வானொலி நிகழ்ச்சியில் அந் நேயர் குறிப்பிட்டது போன்று, வருடாவருடம் 83 ஆம் ஆண்டில் காவு கொடுத்த உயிர்கள் அளவிற்கு மேல் நாம் இன்னும் எமது உறவுகளை இழந்துவருகின்றோம், முற்றுப்புள்ளியில்லாமல்...

    ReplyDelete
  11. நன்றிகள் பல.

    ReplyDelete
  12. நல்லதொரு பகிர்வு. ஏன் நல்லதென்று சொல்கின்றேன் என்றால்...பதிவின் நிகழ்வுகளுக்காக அல்ல. அது பிளந்தெடுத்துத் தரும் உணர்வுகளுக்காக.

    முதலில் உங்களது அனுபவமோ என்று நினைத்தேன். பிறகு 83ல் ஒரு இடத்தில் தங்கியிருந்ததையும் வேலை பார்த்ததையும் சொல்லும் பொழுது, வேறு யாராகவும் இருக்கக் கூடும் என்று நினைத்தேன். அது கட்டுரையின் முடிவில் தெளிவானது.

    அந்தச் சூழ்நிலையின் கனமும் விபரீதமும் அச்சமும் எனக்குப் புரியக் கூடியதாக இருந்தது. பெங்களூரில் நடிகர் ராஜ்குமார் கடத்தப் பட்ட பொழுது நான் பெல்ஜியத்தில் இருந்ததால் அந்தச் சூழ்நிலையை என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அவர் மரணம் என்ற செய்தி வந்ததிலிருந்தே அலுவலகத்தில் ஒரு பரபரப்பு. அன்று பார்த்து அவசரமாக முடிக்க வேண்டிய வேலை. என்னுடைய மேலாளர் அவசரமாக வந்து அனைவரும் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று சொல்லி விட்டார். அப்பொழுது எல்லாப் பேருந்துகளையும் ஒன்று திரட்டி, அலுவலகத்திலிருந்த அனைவரையும் வெளியேற்ற ஆவண செய்தார்கள். ஒவ்வொரு பேருந்திலும் ராஜ்குமார் படம் ஒட்டப்பட்டிருந்தது. நான் பஸ்ஸில் ஜன்னலோரம். கண்ணாடி ஜன்னல் வேறு. ஆங்காங்கு கல்லெறிகிறார்கள் என்று செய்தி. நான் உட்கார்ந்திருந்த பேருந்தில் என்னுடைய இருக்கையும் அதற்குப் பக்க இருக்கையும் மட்டுமே காலியாக இருந்தது. பக்கத்து சீட்டில் ஜன்னலோரம் ஒரு பெண். அந்தப் பெண் நிரம்ப யோசித்து ஜன்னலோரம் உட்காரப் பயந்து என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். அதற்குள் எல்லாப் பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி எங்கள் பஸ்சிலும் நிற்க இடமில்லாமல் கூட்டம். பஸ்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறும் வழியில் "நாளை விடுமுறை" என்று தட்டி காட்டினார்கள். வழியில் கல்லெறிகளும் உடைப்புகளும் நடந்திருப்பது தெரிந்தது.

    பாதுகாப்பாக வீட்டை அடைந்த பிறகுதான் கன்னடமல்லாத எல்லாத் தொலைக்காட்சிகளும் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. சன் டீவிக்குச் சொந்தமான உதயா டீவியில் நல்ல கவரேஜ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மற்ற கன்னடத் தொலைக்காட்சிகளை விட உதயாவிற்கு இவ்வளவு கவரேஜ் செய்யக் கிடைத்தது வியப்பளித்தது.

    எல்லா சேனல்களிலும் ராஜ்குமார் படங்களும் பாட்டுகளும் வந்து கொண்டிருந்தன. உதயா செய்திச் சேனலில் ஊருக்குள் கார்கள் கொளுத்தப்படுவதும் கலவரங்கள் நடப்பதும் காணக்கிடைத்தன. அடுத்த நாளில் கொஞ்சம் அடங்கியது என்றால் இயல்பு நிலையாக இரண்டு நாட்கள் ஆகின.

    இந்தச் சின்ன விஷயத்திற்கே இப்படியென்றால் நீங்கள் சொல்லும் நிகழ்வின் பரிமாணத்தோடு பார்க்கையில் சூழ்நிலையின் விபரீதம் எப்படியிருக்கும் என்று உணர முடிகிறது.

    ReplyDelete
  13. வணக்கம் பொஸ்டன் பாலா
    தங்கள் வருகைக்கு என் நன்றிகள்

    வணக்கம் ராகவன்
    பெங்களூரில் நம்தமிழ்ச் சகோதரர்களுக்கு வேறொரு பரிமாணத்தில் இப்படியான அனர்த்தம் நிகழந்தாலும் கூட, நம் ஈழப்பிரச்சினையில் நம் உறவுகள் படும் இன்னல்களை உங்களைப் போன்ற சகோதர்களால் நினைத்துப் பார்க்கவும் முடிகின்றது. தமிழனாகப் பிறந்தது தான் நாம் செய்த பாவமா?

    ReplyDelete
  14. பிரபா, மீண்டும் நான் தான். சோழியனின் சாட்சியத்தில் அந்தக் கப்பல் பிரயாணம் பற்றியும் யாழ்ப்பாணத்தார்களின் மறுபக்கங்களையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

    77 கலவரம் மூட்டம் அருளர் என்பவர் லங்கா ராணி என்ற கப்பல் பிரயாணம் பற்றி தனது அநுபவத்தை லங்கா ராணி என்ற தனது நூலில் அருமையாக எழுதியிருந்தார். இதனை நான் வாசித்திருக்கிறேன். அந்தப் புத்தகம் கைவசம் இல்லை. கிடைத்தால் கட்டாயம் வாசித்துப் பாருங்கள். அந்த அருளரைப் பற்றிய தகவல் ஏதும் உங்களுக்குத் தெரியுமா?

    ReplyDelete
  15. பிரபா
    சோழியானின் இந்தப் பதிவை மீண்டுமொருமுறை வாசிக்கத தந்ததற்கு நன்றி.

    அனுபவப்பகிர்வு பலதை உணர்த்துகிறது

    ReplyDelete
  16. வணக்கம் சந்திரவதனா அக்கா
    தங்கள் வருகைக்கு என் நன்றிகள்

    சிறீ அண்ணா
    நானும் அருளரின் லங்கா ராணி என்ற நூலை அதன் முதற்பதிப்புப் பிரதியை என் கல்லூரி நூலகத்தில் பெற்று வாசித்திருந்தேன். மிகவும் ஆழ அகலமாக எழுதியிருந்தார். இரண்டாவது பதிப்பாக 80 களின் இறுதியில் ஈரோஸ் இயக்கம் அதனை மறுபதிப்பிட்டது. அதனையும் வாங்கியிருந்தேன். தற்போது கைவசம் இல்லை. அருளரின் மகள் மாயா அருளர் பிரபல பொப் பாடகி என்பதை அறிந்திருப்பீர்கள். மாயா பற்றி அறிய
    http://kavithai.yarl.net/archives/002765.html

    http://www.myspace.com/mia

    அருளர் தற்போது இலங்கையில் உள்ளார். கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தானும் போட்டியிடப்போவதாக ஒரு போட்டியை தினக்குரலுக்கு வழங்கியிருந்தார். ஏனோ தெரியவில்லை பின்னர் அவர் போட்டியிடவில்லை. அந்தத் சந்தர்ப்பத்தில் எமது வானொலிப்பேட்டிக்காக அவரை அணுக இருந்தேன். அப்போது முயற்சி கைகூடவில்லை.

    ReplyDelete
  17. இப்பதிவில் உள்ள படங்களில் எவையாவது பொதுவில் உள்ளனவா?

    ReplyDelete
  18. வணக்கம் நற்கீரன்

    இப்படங்கள் பல்வேறு தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

    ReplyDelete
  19. சிங்களவர்கள் இப்போது இதற்காக வருந்தவில்லை...
    அவர்கள் வருந்தப்போவதும் இல்லை......

    ReplyDelete
  20. இறைவா!எமதருமை ஈழத்தமிழ் உறவுகள் படும்பாடு எப்போது தீரும்?.

    அன்பு பிரபா!அனைவரும் அறியும் வகையில் அனுபவப்பதி(கிர்வு)கள்
    தொடரட்டும்.

    ReplyDelete
  21. அன்பின் மயூரேசன்

    அவர்களை வருந்த விட்டாமல் பேரினவாதிகள் பார்த்துக்கொள்வார்கள்.

    அன்பின் ராஜா

    நம் துயர்கண்டு வருந்தும் உங்களைப் போன்ற உறவுகள் கண்டு தலைவணங்குகின்றேன்.

    ReplyDelete
  22. கலவரத்தில் உயிர் நீத்த தமிழ் சகோதரர்களுக்கு என் அஞ்சலி..

    ReplyDelete
  23. வணக்கம் நண்பரே

    ஆண்டுகள் 24 கடந்து விட்டது யூலை 83 இற்குப் பின் ஒவ்வொரு நாளும் நம் இனத்துக்கு வந்த இழப்புக்களைச் சேர்த்தால் எத்தனையோ மடங்கு இழப்பைச் சந்தித்துவிட்டோம். இன்னும் அப்படியே இருக்கிறது எம் உறவுகள் நிலை.

    ReplyDelete
  24. http://en.wikipedia.org/wiki/Black_July#cite_note-18

    You Can read more about Black July.

    ReplyDelete
  25. We had so many 'Black July' after 1983. But it was not 'visible' to out side world

    ReplyDelete
  26. வரலாற்று நடுநிலைப் பதிவுக்கு நன்றி

    இறுதி வரிகள் தளும்பச் செய்தாது

    ReplyDelete