Pages

Sunday, April 16, 2006

யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு


தமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். முதல் நாள் ஊர்க்கோயில் வளவுகுள்ள இருக்கிற ஐயர் வீட்ட போய் கண்ணாடிப்போத்தலுக்க மருத்து நீர் வாங்கி வந்து வச்சிட்டு இருப்பம். அடுத்த நாள் வெள்ளன எழும்பி மூலிகைக் கலவையான மருத்து நீரைத் தலையில் தடவி விட்டு கிணத்தடிக்குப் போய் கண் எரிச்சல் தீர அள்ளித் தோய்ந்து விட்டுப் புதுச் சட்டையை மாட்டிக்கொள்வோம்.
வருசம் பிறக்கும் நேரத்துக்கு முன்னமே மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போய்க் காத்திருந்து வருசப்பிறப்புப் பூசையையும் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டுவோம்.
வீடும் முதல் தினங்கள் மச்சச் சாப்பாடு காய்ச்சின தீட்டுப் போக முதல் நாளே குளித்துத் துப்பரவாக இருக்கும்.

எங்கட வீட்டுச் சுவாமி அறைக்குள் பயபக்தியாக நுளைஞ்சால் அப்பாவிட்ட இருந்து புதுக் காசு நோட்டுக்கள் வெற்றிலையில் சுற்றிக் கைவியளமாக் கிடைக்கும். அடுத்தது நல்ல நேரம் பார்த்து இனசனங்கள் வீட்டை நோக்கிய படையெடுப்பு.
அவர்கள் வீட்டிலும் அரியதரம், சிப்பிப் பலகாரம், வடை,முறுக்கு, பயற்றம் உருண்டை என்று விதவிதமான பலகாரங்களுடன் நல்ல தேத்தண்ணியும் கைவியளமும் கிடைக்கும். காற்சட்டைப் பொக்கற்றுக்குள் காசைத் திணித்துவிட்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டுவோம். வீட்டை வந்ததும் காற்சட்டையைத்துளாவித், திணித்திருக்கும் நாணயக்குற்றிகளையும், ரூபா நோட்டுக்களையும் மேசையில் பரப்பிவைத்து எண்ணத்தொடங்குவேன். ராசா பராக்கிரமபாகுவின்ர படம் போட்ட அஞ்சு ரூபா, பத்து ரூபாப் புதுநோட்டுக்களும் ஒரு ரூபாய், ரண்டு ரூபாய்க் குற்றிகளும் என்னைப் பார்த்த புளுகத்தில இருப்பது போல ஒரு பிரமை, சந்தோசத்தோட அவற்றைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பன்.
எங்கட சொந்த ஊரில இப்பிடி அனுபவிச்சுக் கொண்டாடக்கூடிய வருசப் பிறப்பு பன்னண்டு வருசத்துக்குப் பிறகு இந்த ஆண்டு கிடைச்சது.

வருசப்பிறப்புக்கு முதல் நாள் வெறுமையான குடி தண்ணீர்ப் போத்தலும் கொண்டு பிள்ளையாரடி ஐயர் வீட்ட போனன். ஐயரின் பேத்தி முறையான சின்னன்சிறுசுகள் (எதிர்கால ஐயர் அம்மா!)பெரிய கிடாரத்தில இறைக்கப் பட்டிருந்த மருத்து நீரை அள்ளி வருபவர்களுக்கு அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தனர். இருபது ரூபாய் நோட்டை நீட்டி வீட்டுப் போத்தலை நிரப்பிக்கொண்டேன்.
" அம்மா ! இவ்வளவு நேரமும் அள்ளியள்ளி இடுப்பு விட்டுப் போச்சுது" என்று செல்லமாக முனகியவாறு அந்தச்சிறுமி என் போத்தலை மருத்து நீரால் நிரப்பினாள்.

அடுத்த நாள் வருசப்பிறப்பு நாள். அதிகாலை 4.31க்கு இலங்கை நேரப்படி வருசம் பிறக்கப் போகுது, வெள்ளன எழும்ப வேணும் எண்டு மொபைல் போனில அலாரம் வைத்தேன். அதிகாலை நான் வைத்த அலாரம் எழும்ப முன்னமே ப்க்கத்து ஊர்க்கோயில் ஒலி பெருக்கிகளில் சீர்காழி கோவிந்தராஜனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பலமாகப் பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.




நானும் எழும்பிக் குளித்து முடித்துவிட்டு மடத்துவாசல் பிள்ளையாரக்குப் போனால், நேரம் அதிகாலை 3.45. அப்போதே சனக்கூட்டம் இருந்தது.சின்னஞ்சிறுசிகளிலிருந்து வயதானாவர்கள் வரை அதிகாலை வேளையில் திரண்டிருந்தனர். உள்வீதி சுற்றிச் சுவாமி தரிசனம் முடித்து விட்டு வருசம் பிறக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தேன்.
சரியாக 4.31க்கு ஆலயத்தின் காண்டாமணி ஓங்கி ஒலித்தது.
காண்டாமணி ஓசையைத் தொடர்ந்து கோயில் பேரிகை முழங்க நாதஸ்வர மேளக் கச்சேரியும் உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. அவற்றை அமுக்குமாற்போலப் பக்தர்களின் பக்திப் பரவசம் அவர் தம் வாய்வழியே " அப்பூ பிள்ளையாரப்பா" என்று ஓங்கி ஒலித்தது.தன் குமர் கரை சேர ஒரு பிரார்த்தனை, வெளிநாடு போக வழி ஏற்படுத்த ஒரு பிரார்த்தனை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற இன்னொரு பிரார்த்தனை, இப்படியாக அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் பிரார்த்தனைகளாக வெளிப்பட்டன. தலைக்கு மேல் கை கூப்பி அனைவரும் ஒரு சேர அந்த ஆண்டவனின் பூசையில் ஒருமுகப்பட்டு நின்றனர்.
திரைச்சீலை மறைப்பு விலகிச் சுவாமி தரிசனமும், தீபாராதனைகளும் தொடர்ந்து சுவாமி வெளிவீதி வலமும் இடம்பெற்றது.
விபூதி சந்தனப் பிரசாதம் பெற்று விட்டுப் பக்கத்துக்கோயிலான கந்தசாமி கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தேன்.

அடுத்தது நல்லூர்க் கந்தசாமி கோயில். நான் கோயிலுக்குப் போனபோது சுவாமி உள்வீதி சுற்றி வெளிவீதிக்கு வரும் வேளை அது. " சுவாமி வெளியில வரப்போகுது, உங்கட வாகனங்களை அப்புறப்படுத்துங்கோ" எண்டு ஒருவர் ஒலி பெருக்கியில் முழங்கிக்கொண்டிருந்தார். சனத்திரள் இன்னொரு நல்லூர் மகோற்சவத்தை ஞாபகப்படுத்தியது.

தாவடி பிள்ளையாரடியிலும் அன்று தேர்த்திருவிழா. அப்பாவின் ஊர்க்கோயில் என்பதால் சென்று பார்த்தேன்.

காலை பத்து மணியாகிவிட்ட பொழுதில் யாழ் நகரவீதிக்குப் போனேன். மனோகராத்தியேட்டர் புது வருச ரிலீஸ் " திருப்பதி" பட போஸ்டர்களும் ஹீரோ கொண்டா மோட்டார் சைக்கிள் இளைஞர் கூட்டத்துடன் மொய்த்திருந்தது.
காக்காய் கூட்டத்திலும் குறைவான சனம் தான் நின்றிருந்தது. சில கடைகள் தன் படிக்கால்களைக் கழுவி " பெண் பார்க்கப்போகும் போது ஒளித்திருந்து பார்க்கும் புது மணப் பெண் போல ஒற்றைக் கதவு திறந்திருக்க நாட்கடை வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தன. முதல் நாள் நான் நகரப் பகுதிக்கு வந்தபோது எள் போட்டாலும் விழ் முடியாச் சன்க்கூட்டம் இருந்திருந்தது. "நூறு ரூபாய்க்கு வருசப்பிறப்பு" என்று தான் விற்கும் ரீசேட்டை விளம்பரப்படுத்திய பாதையோரக் கடைக்காரர்களையும் காணோம்.
தொண்ணூற்று மூண்டாம் ஆண்டு ஏசியாச்சைக்கிளிளில் கூட்டாளிமாரோடை கூட்டாளிமாரோட கோயில்களுக்குப் போய்ப் பிறகு ரவுணுக்கு வந்து சுற்றிப் போனது ஞாபகத்துக்கு வந்தது.இப்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில இருக்கினம்.

வருசப்பிறப்பு நினைவுகளின் எச்சங்களை இரை மீட்டிக் கொண்டு இணுவிலுக்குத்திரும்பினேன்.
புதிதாய்ப் பிறந்த வருடத்திலாவது நிரந்தர நிம்மதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு நிற்குமாற்போலக் காங்கேசன் துறை வீதி அமைதியாகக் குப்புறப் படுத்துக்கிடந்தது. பாதை நீண்ட தூரம் போல எனக்குப் பட்டது.

19 comments:

  1. ஓய்,
    எங்க நிக்கிறீர்?
    யாழ்ப்பாணத்திலயோ?

    ReplyDelete
  2. அப்ப வருஷப் பிறப்பு இந்த முறை மடத்து வாசலிலை. நல்லா இரை மீட்டியிருக்கிறியள். வரேக்கை அடுத்த பதிவுகளுக்குமாச் சேர்ந்து இரை மீட்டி வாங்கோ. சிட்னியில இருந்து புதுவருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Thanks Praba for the great post "live" from Jaffna. We simply miss this!!

    ReplyDelete
  4. வணக்கம் வசந்தன், சிறீ அண்ணா, சிவராம்

    ஓமோம் யாழ்ப்பாணத்தில தான் நிற்கிறன்:-)
    பின்னூட்டமிட்டதிற்கு என் நன்றிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  5. அப்ப உங்க நடக்கிற அரசியல் விசயங்களைக்கூட தொகுத்துத் தரவேணுமெண்டு எதிர்பாக்கிறம்.

    ReplyDelete
  6. மருத்து நீர் வேண்டிற, கோயிலுக்குப்போற சாட்டில, சைக்கிளில நல்ல சுழட்டல் போல...ம்..ம் நடக்கட்டடும்.

    ReplyDelete
  7. ஒகோ இந்த வருசம் ஊரிலயா?
    கொடுத்து வைச்சனீங்க,,,!!!! கலக்குங்க?சித்திரையில் சிதறு கள் என்பாங்க,,,,!!! கவனம்.;;;;ம்ம்ம்ம்ம்
    நல்லூரான் படத்துக்கு நன்றி.
    யோகன்
    பாரிஸ்

    ReplyDelete
  8. வரியப் பிறப்புக்கு என்னையும்
    யாழ்ப்பாணம் கூட்டிக்கொண்டு போனதுக்கு நன்றி ராசா!

    ஒவ்வொரு கோயில் வாசலிலையும் நிண்டு கும்பிட்டன்.

    எல்லாரும் நல்லா இருக்கவேணும் அப்பு.

    ReplyDelete
  9. ஊரிலிருந்து பதிவு! அருமை.

    ReplyDelete
  10. வணக்கம் வன்னியன்

    நீங்கள் எதிர்பார்ப்பது படங்களோட நிச்சயம் வரும்

    வணக்கம் மலைநாடான்

    சுழட்டல் காலம் மலையேறீட்டுது:-)

    வணக்கம் யோகன்

    உண்மைதான், கலக்கலான வருசப்பிறப்பு.

    வணக்கம் சின்னாச்சியின்ர மேன்

    நன்றி உங்கள் பின்னூடத்திற்கு.

    வணக்கம் சேயோன்

    தங்கள் வருகைக்கும் பின்னூடத்திற்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  11. வருசப்பிறப்பன்று என்ன ஊருக்குப் போயிருந்தீங்களா????

    ReplyDelete
  12. ஆமாம் மயூரேசன்

    எங்களூரில் தான் இருந்தேன், அந்த இன்பத்தைச் சொல்லவேண்டுமா? இப்போ எல்லாம் தலைகீழ் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. இலங்கைக்கே நேரில் சென்று ஆண்டுப் பிறப்பில் கலந்து கொண்ட உணர்ச்சி எனக்கு. நல்ல படங்கள். நல்ல வருணனை. எளிமையான சொற்கள்தான் உங்கள் பலம்.

    ReplyDelete
  14. தங்கள் கருத்துக்கு நன்றிகள் ராகவன்

    ReplyDelete
  15. You are a lucky chap Piraba.I left
    Jaffna in the year 1984.I missed my
    friends & relatives.Since there is no gurantee for your life in Eelam
    my wife & daughter didn't allow me to visit Jaffna.There are many like me.We are living a machine life in the foreign soil.I pray every day for the birth of Eelam

    ReplyDelete
  16. You are a lucky chap Piraba.I left
    Jaffna in the year 1984.I missed my
    friends & relatives.Since there is no gurantee for your life in Eelam
    my wife & daughter didn't allow me to visit Jaffna.There are many like me.We are living a machine life in the foreign soil.I pray every day for the birth of Eelam

    ReplyDelete
  17. வணக்கம் ஈஸ்வரன்

    னம் தேசத்தில் நிரந்தர சுபீட்சம் அடையவும், தங்கள் தொலைத்த உறவுகளைக் கண்டு மகிழவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  18. யாழ்ப்பாணம் இன்னும் எனக்கொரு தொலைதூரக் கனவாகவே உள்ளது.சிறு வயது முதல் போகவேண்டும் என இருந்த தீராத ஆசையை 1998 இல் நிறைவேற்றிடும் சந்தர்ப்பம் வாய்த்தது. நேர்முகத் தேர்வில் போது, "கணித நெறி பலாலியிலும் அட்டாளைச்சேனையிலும் மாத்திரமே உள்ளது.பலாலி போக முடியுமா?" எனக்
    கேட்டார்கள்.என்னை அறியாமலேயே "போக மிகவும் விருப்பம்.எங்களைப் போக அனுமதிப்பார்களா? உயிருடன் திரும்பி
    வரமுடியுமா?"
    கேட்டுவிட்டேன்.அதிகாரிகள் ஒருவர்முகத்தை ஒருவர் பார்த்துப் பின்னர் சிரித்தார்கள்.யாழ்ப்பாணம் போக இருந்த இறுதி வாய்ப்பும் தொலைந்தது.அட்டாளைச்சேனைக்கு அனுமதி கிடைத்தது.
    ஆனால் எனது கணினியில் யாழ்நூலகத்தின் நிழற்படங்கள் தான் Desktop இல்.
    வ.ஐ.ச.ஜெயபாலனின் பெருந்தொகையை படித்த பின்னர் கனவில் நெடுந்தீவைக் கண்டேன்.கல்வேலி,புல்வெளி,குதிரைகள்,தண்ணீர் சுமந்து செல்லும் பெண்கள் என.
    இப்போது எழுத்தினூடாகவும் படங்களினூடாகவும் காணும் யாழ்ப்பாணத்தில் ..எனது அழகிய கனவுத் தேசம் அழிவுகளைச் சுமந்து துயரத்துடன் அலைகிறது.

    ReplyDelete
  19. வணக்கம் ஃபஹீமாஜஹான்

    உங்களின் தேசவேட்கை உங்களின் எழுத்துக்களில் தெரிகின்றது. கண்ணுக்கு முன் நம் அன்னை தேசம் உருக்குலைந்து விதவைக்கோலம் பூண்டுகொண்டிருக்கின்றது. இயலாமை என்னும் நிலை தான் எம்மக்களின் நிரந்தரத் தலையெழுத்தோ என்னவோ

    ReplyDelete