Pages

Sunday, November 16, 2008

"மிருதங்க பூபதி" A.சந்தானகிருஷ்ணன்

ஈழத்தின் கலைஞர்கள், படைப்பாளிகளை வலைப்பதிவு வழியே ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடர்ச்சியாக இப்பதிவு வாயிலாக ஈழத்தின் புகழ்பூத்த மிருதங்கக் கலைஞர் கலாபூஷணம் திரு A.சந்தான கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினைப் பதிவு செய்கின்றேன். இவரின் கலையுலக அனுபவங்கள் தாங்கிய ஒலிப்பகிர்வைப் பின்னர் தருகின்றேன்.

மூளாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாபூஷணம் திரு A.சந்தான கிருஷ்ணன் அவர்கள், தனது தந்தையாரான ஸ்ரீ A.V.ஆறுமுகம்பிள்ளையிடம் குருகுலமுறைப்படி கல்வி கற்றவர். இவர் ஒரு ஓய்வு பெற்ற தொலைத்தொடர்பு பொறியியலாளர். அமரர்களான இசைமேதைகள் வலங்கைமான் திரு A.சண்முகசுந்தரம்பிள்ளையும், திரு A.பாலகிருஷ்ணனும் (மூளாய்) இவர்களது சகோதரர்கள் ஆவார்கள்.

ஆரம்பகாலத்திலே சங்கீதபூஷணம் திரு S.கணபதிப்பிள்ளை, சங்கீத பூஷணம் திரு பொன்.சுந்தரலிங்கம், திரு M.A.குலசீலநாதன், சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியை பிரமீளா குருமூர்த்தி, ஸ்ரீமதி M.A குலபூஷணி கல்யாணராமன், ஸ்ரீமதி சிவசக்தி(லண்டன்), ஸ்ரீமதி சத்யபாமா ராஜலிங்கம் ஆகியோரின் இசையரங்கேற்றங்களுக்கு மிருதங்கம் வாசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு ரவிச்சந்திராவின் மிருதங்க அரங்கேற்றத்திலும் யாழ் நகர மண்டபத்தில் கஞ்சிரா வாசித்தவர். கொழும்பிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் பிரபலம் பெற்ற நடனமணிகளின் நாட்டிய அரங்கேற்றங்களிலும் மிருதங்கம் வாசித்துள்ளார்.

சமீபகாலத்தில் சிட்னியிலும், பிறிஸ்பேனிலும், ஸ்ரீமதி ஆனந்த வல்லி, தமயந்தி, சித்திரா ஆகியோரின் மாணவிகளினது நடன அரங்கேற்றங்களில் மூன்றாவது தலைமுறைக்கும் வாசித்தது பெருமைக்குரியது.

1965 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே N.C.O.M.S பரீட்சை பிரதம அதிகாரியாக கடமையாற்றியவர். அப்போது பரீட்சைக்குத் தோற்றியவர்கள் பலர் இன்று புகழ்பூத்த மிருதங்க கலைஞர்களாகத் திகழ்கின்றார்கள்.

இவர் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஓமான், ஹாங்ஹாங், அவுஸ்திரேலியா என்று பல நாடுகளில் கச்சேரிகள் செய்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனங்களின் Super Grade Artist ஆவார். சென்னை அனைத்திந்திய வானொலி நிலையம் (AIR)இலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய இரண்டு வாத்தியங்களிலும் கச்சேரிகளில் பங்குகொண்டவர்.

இவருக்கு நல்லை ஆதீனமும், மதுரை ஆதீனமும் இணைந்து "மிருதங்க பூபதி", கொழும்பு கப்பித்தாவத்தை தேவஸ்தானம் "ஞானச்சுடரொளி", இலங்கை அரசாங்கம் "கலாபூஷணம்" ஆகிய பட்டங்களையும், பொற்கிழி, தங்கப்பதக்கங்கள், பொன்னாடை உட்பட்ட கெளரவங்களோடு சிறப்பித்திருக்கின்றார்கள். இவரது ஷஷ்டியப்த பூர்த்தி நிமித்தமாக கொழும்பு கம்பன் கழகம் "லயசங்கமம்" என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வாசிக்க வைத்து பொன்னாடை போர்த்தியும், யாழ் இசைவேளாளர் சங்கமும் கச்சேரி செய்யவைத்து கெளரவித்திருக்கின்றார்கள்.

திரு A.சந்தான கிருஷ்ணன் அவர்கள் சென்னை இசை விழாக்களின் போது மியூசிக் அகாடமி, அண்ணாமலை மன்றம், ரசிக ரஞ்சன சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சபா, கிருஷ்ணகான சபா, வாணி மஹால், மற்றும் பல சபாக்களிலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய வாத்தியங்களை வாசித்துச் சிறப்பித்திருக்கின்றார்.

இசைமேதைகளான சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, வைணிக வித்துவான் M.A கல்யாண கிருஷ்ண பாகவதர், T.K. ரங்காச்சாரி, மஹாராஜபுரம் சந்தானம், K.B சுந்தராம்பாள், M.L வசந்தகுமாரி, ராதா ஜெயலஷ்மி, Dr பாலமுரளி கிருஷ்ணா, Dr K.J ஜேசுதாஸ், O.S தியாகராஜன், சேஷகோபாலன், சந்தானகோபாலன், சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், சீர்காழி S கோவிந்தராஜன், சுதா ரகுநாதன், பம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, T.V சங்கரநாராயணன், ஹைதராபாத் சகோதரிகள், வயலின் மேதைகள் T.N கிருஷ்ணன், V.V சுப்ரமணியம், L.சுப்பிரமணியம், கணேஷ்-குமரேஷ், வேணுகான வித்துவான்களான Dr ரமணி, ஷஷாங் ஆகியோரின் இசை நிகழ்வுகளின் போதும் தன் சாகித்தியதை வாசிப்பால் உணர்த்தியவர்.

இவர் இந்தியாவின் சிரேஷ்ட மிருதங்க வித்துவான்களான T.K மூர்த்தி, பாலக்காடு ரகு, உமையாள்புரம் சிவராமன், வேலூர் ராமபத்ரன், அமரர் தஞ்சை உபேந்திரன், குருவாயூர் துரை, ஸ்ரீ முஷ்ணும் ராஜாராவ், திருச்சி சஙகரன், திருவாரூர் பக்தவத்சலம், மற்றும் இளைய தலைமுறை வித்துவான்களுடனும் இணைந்து கஞ்சிரா வாசித்ததை நினைவு கூர்ந்து மகிழ்வதோடு, பெரும் பாக்யமாகவும் கருதுகின்றார்.

இவரது மகனும் மாணாக்கருமாகிய திரு சிவசங்கர் சிட்னியில் மிருதங்க கலை பயிற்றுவிப்பதில் ஈடுபட்டு வருகின்றார். இவரின் புத்திரர்களில் ஒருவரான திரு சிவராம் அவர்கள் தேர்ச்சி பெற்ற கீ போர்ட் வாத்தியக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பதிவுக்கான தகவல் உதவி: திரு சிவராம் சந்தானகிருஷ்ணன்.

23 comments:

  1. இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பார்க்கும்போது இசைக்கலையில் பெரியதாய் யாரும் ஆர்வம் கொள்ளாத நிலையே மிகுந்த கவலைக்குரிய விசயமாக இருக்கிறது!

    இவர் போன்ற பெரும் இசைக்கலைஞர்களின் செய்திகள் ஆவணங்களாக்கப்படும்போது எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு ஆர்வத்தினை உண்டாக்ககூடும்!

    ReplyDelete
  2. அடிக்கடி நான் நினைக்கும் ஒரு விடயம் என்னவென்றால் நாமும் தமிழகமும் ஒரே மொழியை பேசினால் கூட, எமக்கு கலைகளில் சில தனித்த அடையாளங்கள் உள்ளன. அவற்றை நாம் சரியான முறையில் எடுத்துவைப்பதில்லை. எமது கலைஞர்களாஇ நாம் சரியான முறையில் அடையாளப்படுத்துவதுமில்லை. எனது wouldbe அளவெட்டியை சேர்ந்து இருந்தபோதும், மஹாகவி என்கிறா அற்புதமான கவிஞனும் சேரன் என்கிற இந்த தலைமுறை கவிஞனும் பிறந்த , வாழ்ந்த இடம் என்பதே அவர்கள் குடும்பத்துக்கே தெரியவில்லை என்றபோது மிகுந்த வேதனை உண்டானது.

    இந்த நிலையில் நீங்கள் தொடர்ந்து செய்துவரும் இப்பணி மிகுந்த வரவேற்புக்குரியது. நானும் இப்படி கனடாவில் இருந்து சிலரை அறிமுகம் செய்ய வேண்டும்ம் என்று நினைப்பேன். இன்னும் சில பதிவுகள் இர்ரு, ஓரளவு அடையாளாம் பெற்றபின்னர் நிச்சயம் அதனை செய்வேன்

    நன்றிகள் பிரபா

    ReplyDelete
  3. //ஆயில்யன் said...
    இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பார்க்கும்போது இசைக்கலையில் பெரியதாய் யாரும் ஆர்வம் கொள்ளாத நிலையே மிகுந்த கவலைக்குரிய விசயமாக இருக்கிறது!//

    உண்மைதான் ஆயில்யன்
    அத்தோடு குறுகிய லாப புகழுக்காகவும் விருதுக்காகவும் மட்டும் இப்படியான கலைகளை அடுத்த சந்ததி பயன்படுத்துவது இங்கே புலம்பெயர்ந்த வாழ்வில் சகஜமாகி விட்டது.

    ReplyDelete
  4. //அருண்மொழிவர்மன் said...


    இந்த நிலையில் நீங்கள் தொடர்ந்து செய்துவரும் இப்பணி மிகுந்த வரவேற்புக்குரியது. நானும் இப்படி கனடாவில் இருந்து சிலரை அறிமுகம் செய்ய வேண்டும்ம் என்று நினைப்பேன். //


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
    கனடாவில் நிறைய நம்மவரில் துறைசார் வல்லுனர்கள் இருக்கின்றார்கள் அவர்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் உங்களை ஈடுபடுத்தினால் வெகு சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  5. பிரபா,சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மனம் முட்டி வழிய...
    என்னவோ!அதனால்தான் பின்னூட்டம் போட முடியாமல் பின் நின்றேன்.நேற்றைய மன உளைச்சல் வீட்டுக்குச் சொன்ன பிறகே சரியானது.

    இந்தப் பெரும் கலைஞர் எங்கள் அருகில் இல்லாமல் அந்நிய தேசத்தில் வாழ்ந்தாலும் எங்கள் கலை உலகிற்கு இவரும் இவர் குடும்பமும்...இல்லை இவர் பரம்பரையும் ஆற்றிய சேவைகளுக்கு என்றுமே கலை உலகத் தமிழ் இனம் என்றுமே கடமைப்பட்டிருக்கும்.
    இன்னும் அவர் தன் கலையைத் தன் பின் அடுத்த தலைமுறைக்கும் கொடுத்து நீடூழி வாழ என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.அவர் குடும்பத்தில் நானும் எங்கேயோ இருப்பதையிட்டுச் சந்தோஷப்படுகிறேன்.இன்னும் அவரையும் அவர் குடும்ப அங்கத்தவரைப் பற்றியும் சொல்ல நிறையத் தகவல்கள் இருக்கிறது என்றே எனக்குத் தெரிகிறது.
    சிலசமயம் அவரிடமே தகவல்கள் எடுத்தீர்களா பிரபா?

    பிரபா.இந்தச் சமயத்தில் உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
    காலப்பதிவுகள் நிச்சயம் உங்களை போன்றவர்களின் கையில்.

    சந்தானகிருஷ்ணன் அவர்களின் மூத்த புதல்வன் எம்மிடையே இல்லாமல், மறைந்த சிவபாலன் அவர்களை மனதில் நிறுத்திக்கொண்டு ராம் அவர்களுக்கும் இந்தச் சமயத்தில் நன்றி சொல்ல்கிறேன்.

    ReplyDelete
  6. விரிவான பகிர்வுக்கு நன்றி ஹேமா

    நம் கலைஞர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அவர்கள் குறித்த ஆவணப்படுத்தலைச் செய்ய வேண்டியதும் நம் கடமை. இவரைப் பேட்டி எடுத்து ஒலிப்பகிர்வாகத் தான் முதலில் கொடுக்க இருந்தேன். இப்படியான ஒப்பற்ற கலைஞரின் உறவினர் என்ற வகையில் நிச்சயம் உங்களுக்குப் பெருமையாக இருக்கும் இல்லையா?

    ஆனாலும் காலம் தள்ளிக் கொண்டே போனதால் எழுத்து வடிவில் முதலில் தருகின்றேன், தகவல்களை இவரின் குடும்பத்தினர் மூலமே திரட்ட முடிந்தது.

    ReplyDelete
  7. நல்ல விஷயங்களை பலரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் தருகிறீர்கள்! நன்றி பகிர்ந்தமைக்கு!

    ReplyDelete
  8. இங்கேயும் சங்கீத சீஸ்ன் ஆரம்பித்து விட்டதா? தமிழ் இசைக் கலைஞர் பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்!
    அவருக்கு கிடைத்த பட்டங்கள் வியக்க வைக்கிறது!!

    ReplyDelete
  9. //இவரின் கலையுலக அனுபவங்கள் தாங்கிய ஒலிப்பகிர்வைப் பின்னர் தருகின்றேன்.//

    காத்திருக்கிறேன்!!

    ReplyDelete
  10. ஆயில்ஸ் சொல்லியிருப்பது போல இளைய தலைமுறையினர் இதில் ஆர்வம் கொள்ளாதது சோகமே!

    ReplyDelete
  11. எங்கடை ஊரில் பழையவர்களிடம் இருந்த கலையார்வம் அடுத்தடுத்த தலை முறைகளிடம் இல்லாமமையும்,இருந்தாலும் அதற்கான சாத்திய கூறுகளும் சூழலும் இல்லாமல் போனதும் ஒரு துர்ரதிஷ்டமான விசயம்தான் அண்ணன்;
    பொருளாதாரம் நாட்டுப்பிரச்சனை அதன் நிமித்தமான முறையான வழி நடத்தல்கள் இல்லாத குடும்ப சூழல் என சிலவிசயங்களால் மழுங்கிப்போயிருக்கிறது தலைமுறைகளும்,சில கலைகளும்...

    ReplyDelete
  12. பகிர்வுக்கு நன்றி அண்ணன்...

    ReplyDelete
  13. ஆவணமாக்குகிற முயற்சிக்கு பாராட்டுக்கள் மறுபடியும்...

    ReplyDelete
  14. பகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றி அண்ணன்...

    ReplyDelete
  15. நல்ல முயற்சி. தொடருங்கள். உங்களைப்போன்ற ஆட்களால்தான் இன்னமும் ஈழக்கலைஞர்கள் மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எமது கலாசார விழுமியங்களை நாம்தான் காப்பாற்றவேண்டும்.

    ReplyDelete
  16. kalaignarkal enraikkum potrappadaveddiyavarkal uyarntha ulathal valththapadavendiyavarkal
    isaiganippiththan.

    ReplyDelete
  17. திரு சந்தானகிருஷ்ணன் அவர்களிடமும் அவரது மகன் திரு சிவஷங்கர் அவர்களிடமும் சிறிது காலம் மிருதங்கம் பயின்ற மாணவன் என்ற முறையில், இக்கட்டுரையை மிகவும் இரசித்து படித்தேன்.
    இப்பதிவிற்கு நன்றி, பிரபா!

    ReplyDelete
  18. My name is Muhunthan....It is good to hear about this well known maestro. He is not only a talented person in his musical field, also he shined well in the Telecom field. I am very proud to say that I lived around and played cricket with his kids 20-25 odd years ago. I know all his children learned various musical instruments and the late eldest one was talented singer. Now I heard all his children are highly educated as well. More eager to find out the info on his children's professions as well as their grade of involvements in the music industry. Looking forward to listen some of his program. Thanks to you for your great work Prabu.

    ReplyDelete
  19. // சந்தனமுல்லை said...
    நல்ல விஷயங்களை பலரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் தருகிறீர்கள்! நன்றி பகிர்ந்தமைக்கு!/

    வாங்க சந்தனமுல்லை, வாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    //தமிழன்-கறுப்பி... said...
    எங்கடை ஊரில் பழையவர்களிடம் இருந்த கலையார்வம் அடுத்தடுத்த தலை முறைகளிடம் இல்லாமமையும்,இருந்தாலும் அதற்கான சாத்திய கூறுகளும் சூழலும் இல்லாமல் போனதும் ஒரு துர்ரதிஷ்டமான விசயம்தான் அண்ணன்;//

    உண்மைதான் தமிழன்

    தாயகத்தில் இருந்த எத்தனையோ தலை சிறந்த கலைஞர்கள் அழிந்தும்,எஞ்சியோர் திசைக்கொன்றாய் போனதுமாக ஆகிவிட்டது. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. //தமிழ் விரும்பி said...
    நல்ல முயற்சி. தொடருங்கள். //

    மிக்க நன்றி நண்பா

    //Anonymous said...
    kalaignarkal enraikkum potrappadaveddiyavarkal uyarntha ulathal valththapadavendiyavarkal
    isaiganippiththan.//

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  21. நல்ல முயற்சி அண்ணா! அழிந்து போகும் நினைவுகளைத் தூசு தட்டி மீட்டுகின்றீர்கள். இந்த நினைவுகள் உங்களைப் போன்றவர்களின் முயற்சியூடாக ஆவணப்படுத்தப்படும் போது நெஞ்சில் இலகுவில் பதிந்துவிடுகின்றது.

    ReplyDelete
  22. // Vathsan said...
    திரு சந்தானகிருஷ்ணன் அவர்களிடமும் அவரது மகன் திரு சிவஷங்கர் அவர்களிடமும் சிறிது காலம் மிருதங்கம் பயின்ற மாணவன் என்ற முறையில், இக்கட்டுரையை மிகவும் இரசித்து படித்தேன்.//

    மிக்க நன்றி நண்பரே

    //Anonymous said...
    My name is Muhunthan....It is good to hear about this well known maestro. //

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முகுந்தன்

    //kamal said...
    நல்ல முயற்சி அண்ணா! அழிந்து போகும் நினைவுகளைத் தூசு தட்டி மீட்டுகின்றீர்கள்.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமல்

    ReplyDelete
  23. தொடர்ந்து எமது கலைஞர்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்குத் தரும் உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete