Pages

Sunday, October 26, 2008

லைப்ரரி சேர் காட்டிய "ராஜம் கிருஷ்ணன்" இன்னும் பலர்

வேலைக்குப் போவதற்காக ரயிலில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணித்தியாலத்துக்குக் குறைவில்லாத பயணம். அந்த நேரம் காதுகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு கண்களுக்கு மட்டும் தீனி தேடவேண்டும். எனவே வழக்கம் போல் வாரப்பத்திரிகைகள் வாங்கும் கடைக்குப் போகின்றேன். அங்கே "அவள் விகடன்" சஞ்சிகையின் பதினோராவது ஆண்டு மலர் இருந்தது. புரட்டிப் பார்த்து விட்டு அதையும் எடுத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் நாஞ்சில் நாடனின் தொடர் கட்டுரையைத் தவிர ஆனந்த விகடனில் உருப்படியாக ஒன்றும் வருவதில்லை என்பது என் பல ஆண்டு விகடன் வாசிப்பில் நான் எடுத்த அனுமானம். அதனால் தான் அவள் விகடனில் ஆவது ஏதாவது சமாச்சாரங்கள் கிட்டுமே அதை வாங்கிக் கொண்டேன். அடுத்த நாள் ரயில் பயணத்தில் பிரிக்கின்றேன் அதன் பக்கங்களை. அதில் வந்த முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை வாசித்ததும் மனம் கனக்கின்றது. மெல்ல என் மடியில் புத்தகத்தை வைத்து விட்டு பழைய நினைவுகளுக்கு என் மனம் தாவுகின்றது.

"பிரபாகர்! புதுப் புத்தகங்கள் கொஞ்சம் வந்திருக்கு, புக் ரெஜிஸ்டரில் போட்டு விட்டேன், வந்து பாரும்" எமது கல்லூரி நூலகத்தைக் கடக்கும் என்னைக் கூப்பிடுகின்றது தனபாலசிங்கம் சேரின் அழைப்பு. எங்கள் கல்லூரி நூலகத்துக்கு அவர் வந்து கொஞ்ச நாளுக்குள்ளேயே என்னை நட்புப் பாராட்டியவர். அதற்குக் காரணமும் இருந்தது. என் பள்ளிப் பிராயத்தில் "கடலைச் சரைப் பேப்பரைக் கூட உவன் விடமாட்டான்" என்று என் மீது ஒரு விமர்சனம் இருந்தது. நடந்து போகும் போது றோட்டில் ஏதாவது பேப்பர் இருந்தாலோ அல்லது கச்சான் கடலையைப் பொதி பண்ணும் பேப்பர் சரை இருந்தாலோ அதைப் பிரித்து அதில் என்ன சமாச்சாரம் இருக்கு என்று ஆர்வக் கோளாறோடு படித்த காலமது. கல்லூரி நூலகத்தை மட்டும் விடுவேனா? பாட இடைவேளைக்கும் கூட அங்கேயே தஞ்சமாகிப் போன காலம் அது.எங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி நூலகம் மிகவும் பழமையானது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் இருக்குமாற் போல பல அரிய நூல்களைச் சேமித்து வைத்த அறிவுக் களஞ்சியம் அது.

செங்கை ஆழியானின் கதைகளை ஒரு வெறியோடு படித்துக் கொண்டிருந்த என்னை இன்னும் ஒரு உலகம் இருக்கு என்று காட்டியவர் எங்கள் நூலகத்துக்கு வந்த தனபால சிங்கம் என்ற நூலகர். அவரை லைப்ரரி சேர் என்று தான் அழைப்போம். தொடர்ந்த என் வாசிப்பு ஆர்வத்தையும், குறித்த நாளுக்குள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும் பண்பையும் சத்தமில்லாமல் அவதானித்திருக்கிறார் இந்த லைப்ரரி சேர் போலும்.

"பிரபாகர்! செங்கை ஆழியானின் புத்தகங்கள் எங்கட பிரதேசத்துக்குரிய வாழ்க்கையை மட்டுமே காட்டும், அதோட மட்டும் நிக்கக் கூடாது, வாசிப்பை விசாலப்படுத்தோணும், இந்தாரும் இதைக் கொண்டு போய் வாசியும்" ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் நாவலைத் தானாகவே எடுத்து வந்து என் பெயரை ரிஜிஸ்டரில் போட்டு விட்டுக் கொடுக்கின்றார்.

பிறகு மு.வரதராசனின் "கரித்துண்டு", அகிலனின் "சித்திரப் பாவை", "பால்மரக் காட்டினிலே", "வேங்கையின் மைந்தன்", ஜெயகாந்தனின் " பிரம்மோபதேசம்" அ.செ.முருகானந்தனின் "மனித மாடுகள்", பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முதல் தொகுதி தமிழ்மாணவர்கள் அறுபதுகளில் எழுதிய "விண்ணும் மண்ணும்" சிறுகதைத் தொகுதி என்று அவர் எனக்காக அறிமுகப்படுத்தும் பட்டியல் தொடர்கின்றது. இன்றுவரை என் ஞாபகக் கூட்டில் எஞ்சியிருக்கும் நூல்களில் ஒரு சில தான் அவை.

சஞ்சிகைகளில் அப்போதெல்லாம் கோகுலமும் அம்புலிமாமாவுமாக இருந்த என்னை, யதார்த்த உலகுக்கு கைபிடித்து அழைத்துச் சென்றார் சுபமங்களா, க்ரோதாயுகம், துளிர் போன்ற சஞ்சிகைகளைக் காட்டியதன் மூலம்.

ஐம்பது வருஷத்துக்கு முற்பட்ட சஞ்சிகைகள், குறிப்பாக "விவேகி" போன்றவை உசாத்துணைப் பட்டியலில் மிகுந்த பாதுகாப்போடு பூட்டுப் போடப்பட்டு வைக்கப்பட்டிருந்தவை.
அவற்றை மெல்ல எடுத்து வந்து "வாசிச்சிட்டு தாரும்" என்று இரகசியமாகக் கையில் திணிப்பார். அந்த சஞ்சிகையைத் திறந்தாலே அப்பளம் போல நொருங்கிப் போய்விடும் அளவுக்கு பழசானது.

"கலாநிதி நா,சுப்ரமணியனின் "ஈழத்துச் சிறுகதை வரலாறு" என்ற ஆராய்ச்சி நூல் வந்திருக்கு, இதையும் கொண்டுபோய் வாசியும்" வெறும் நாவல் என்ற வட்டத்துக்குள் நின்று விடாது என்னுடைய வாசிப்பினை இன்னும் இன்னும் எல்லை கடக்கச் செய்யவேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்தது. அதே நேரம் என் வாசிப்பு திசை திரும்பி படிக்ககூடாத சமாச்சாரங்களில் இருந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் இவராகவே எனக்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்குமோ என்ற உணர்வு இப்போது எனக்குள் வருகின்றது.

ஒருமுறை லைப்ரரி சேருக்கு என் மீது ஏனோ மனஸ்தாபம், ஏசி விடுகின்றார். நான் அந்தப் பக்கம் கொஞ்ச நாள் போகவில்லை. ஆனால் என் வகுப்புக்குப் போவதென்றால் நூலகத்தைக் கடந்து தான் போகவேண்டும்.

"சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமி நாதன் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார், நாளைக்கு நாவலர் மண்டபத்தில் அவரின் பேச்சு இருக்கு நீரும் வரோணும்" என்று கதவுப் பக்கமாக நின்ற அவர் அன்புக் கட்டளை போடுகின்றார் லைப்ரரி சேர்."ஒகே சேர்" என்று விட்டு அடுத்த நாள் விழாவுக்குப் போகின்றேன். இலக்கிய ஆர்வலர்கள், பெருந்தலைகள் என்று நிரம்பி வழிந்த கூட்டத்தின் காற்சட்டைப் பையனாக நானும் ஒரு ஓரத்தில். ஈழத்து மொழி வழக்கை தமிழக வாசகர்கள் புரிந்து கொள்வதன் கஷ்டத்தை "சாரம்" என்ற உதாரணத்தின் மூலம் பேச்சில் காட்டிக் கொண்டு போகிறார் கோமல். ஈழத்தில் சாரம் என்றால் தமிழகத்தில் அது லுங்கி என்று பேசப்படுகின்றது, அது போல தமிழகத்தில் சாரம் என்று அழைப்பது கட்டிடங்கள் கட்டும் போது பிணைச்சலாகப் போடுவது என்று பேசிக் கொண்டே போகின்றார் கோமல். அவரின் உரை முடிந்ததும் கேள்வி நேரம். கோமலை பலரும் கேள்வி கேட்க மேடையில் ஏறுகின்றார்கள். மேடைக்குப் நின்ற லைப்ரரி சேர் மறுகரையில் நின்ற என்னைக் கண்டு
"ஏறும் ஏறும்" என்று கண்களாலேயே ஜாடை சொல்லி என்னை மேடைக்கு அனுப்புகின்றார்.
ஏதோ ஒரு துணிவில் மேடையில் ஏறி கோமலைக் கேட்கின்றேன். "திரைப்படங்கள் சமூக நாடகங்களுக்கு சாபக்கேடு என்றீர்கள், நீங்கள் கூட "ஒரு இந்தியக் கனவு", "தண்ணீர் தண்ணீர்" கதாசிரியர், நீங்கள் எதிர்பார்க்கும் சினிமாவை நீங்களே தொடர்ந்து செய்யலாமே" என்று ஏதோ ஒரு வேகத்தில் மேடையில் ஏறிய நான் கேட்கின்றேன். அவரின் பதிலோடு மேடையில் இருந்து இறங்கிய என்னைத் தட்டிக் கொடுக்கின்றார் லைப்ரரி சேர்.

இந்திய இராணுவப் பிரச்சனை முடிந்து எமது கல்லூரிக்குப் போன முதல் நாள் கண்ட காட்சிகள் அவலமானவை. அகதி முகாமாக்கப்பட்டு அது நாள் வரை இருந்த முழுக் கல்லூரியே விதவைக் கோலத்தில் இருந்தது. நூலகத்துக்குப் போகின்றேன். எல்லா புத்தக அலுமாரிகளும் உடைக்கப்பட்டு புத்தகங்கள் திசைக்கொன்றாய் இருக்கின்றன. நூலகத்தின் கதவுப் புறங்களில் ஷெல்லடித்து உடைந்த ஓடுகளின் ஊடாக வரும் மழை வெள்ளத்தைத் தடுக்க புத்தகங்களே தடுப்பாகப் போடப்பட்டிருக்கின்றன. பல அரிய நூல் தண்ணீரில் தொப்பமாக நனைந்து அகதிகளாகி அழுது கொண்டே இருக்கின்றன. லைப்ரரி சேரைப் பார்க்கின்றேன், ஷெல் வீச்சில் இறந்த குழந்தையின் தந்தை போல இடிந்து போய் இருக்கின்றார். மெதுவாக ஒவ்வொரு புத்தகமாகக் கையில் எடுத்துத் துடைத்துக் கொண்டு வருகின்றார்.

கல்லூரி வாழ்வு கழிந்து இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து ஆண்டு பல ஓடிவிட்ட பின்னர் ஊருக்குப் போன போது தாவடியில் இருக்கும் என் மாமி வீடு போகின்றேன். மச்சாள் எங்கள் கல்லூரியில் தான் படிப்பிக்கின்றார்.
ஆர்வமாக "லைப்ரரி சேர் இன்னும் அங்கே இருக்கிறாரா" என்று கேட்கிறேன்.
"இல்லை பிரபு! அவர் இப்ப ரிடயர்ட் ஆகிட்டார்" பக்கத்திலை தான் சுதுமலையில் இருக்கிறார் இது மாமி மகள்.
"அவரை ஒருக்கால் நான் பார்க்கோணும்" என்ற என்னை மச்சாள் புருஷன் தன் மோட்டார் சைக்கிளில் இருத்திக் கொண்டு போகின்றார்.
லைப்ரரி சேரின் வீட்டுக்கு முன்னால் வந்து வண்டி நிற்கின்றது. பூக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அவர் என்னைக் கண்டும் தெரியாத பாவனையில் உற்றுப் பார்க்கின்றார்.
"சேர்! நான் பிரபாகர், ஞாபகம் இருக்கா?"
"ஓ அப்படியா கனகாலத்துக்கு முந்தி இருக்கும் என்ன?" என்று மீண்டும் என்னை ஐயமுறப் பார்க்கின்றார்.
"முந்தி நீங்கள் தான் சேர் எனக்கு நிறையப் புத்தகம் எல்லாம் தாறனீங்கள்" என்று மீண்டும் ஆசையாகச் சொல்கிறேன்.
"இஞ்சையப்பா! எங்கட ஸ்கூல் பிள்ளை வந்திருக்கு, இஞ்சை வாரும்" என்று வீட்டுக்குள் இருந்த தன் மனைவியை அழைக்கிறார் லைப்ரரி சேர். அப்போதும் பிரபாகர் என்ற என்னை மறந்து விட்டார் என்று தொண்டைக்குள் எச்சிலை மிண்டுகின்றேன்.
தன்னுடைய மனைவி சந்திரா தனபாலசிங்கம் எழுதிய நூலை எனக்குத் தருகிறார். லைப்ரரி சேரை ஒரு போட்டோ எடுத்து விட்டு மச்சாளின் புருஷனின் மோட்டார் சைக்கிளில் அமர மீண்டும் தாவடிக்குப் போகின்றது. எதிர்த் திசையில் அலையும் காற்று முகத்தில் குப்பென்று அடிக்கின்றது.

லைப்ரரி சேருக்கு பிள்ளைகள் இல்லை, அந்தப் புத்தகங்கள் தான் அவரின் குழந்தைகள். அந்தப் புத்தகக் குழந்தைகளோடு நேசம் கொண்டு வருபவர்களை எந்தத் தந்தைக்குத் தான் பிடிக்காது? எனக்குப் பிறகு நிறைய பிரபாகர்கள் அந்த நூலகத்துக்கு வந்திருப்பினம். அந்தந்தக் காலகட்டத்தில் அவரின் புத்தகக் குழந்தைகளை நேசித்தவர்களை அவரும் நேசித்திருக்கின்றார் அவ்வளவு தான். ஆனாலும் லைப்ரரி சேரை நான் மறக்க மாட்டேன்.

இனி என் ஞாபகத்தைக் கிளறிய அவள் விகடனில் வந்த "ராஜம் கிருஷ்ணனின்" பேட்டியை அவள் விகடனுக்கு நன்றியுடன் அப்படியே தருகின்றேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.
'வேருக்கு நீர்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
இதுபோல எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த எண்பத்தி இரண்டு வயதான ராஜம் கிருஷ்ணன் இன்று இருப்பதோ பாலவாக்கம் விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில்!
குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய் ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.
மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.. என்று முதுமையின் வாட்டம் தெரிந்தாலும் பேச்சின் கம்பீரம் என்னவோ அப்படியே இருக்கிறது.
''என்னை எதுக்குப் பார்க்க வந்திருக்கீங்க? ஐ'ம் ஜஸ்ட் எ டஸ்ட்'' என்றவரை ஆசுவாசப்படுத்திப் பேச்சுக் கொடுத்தோம்..
''அன்னிக்கு என் பேச்சைக் கேக்க ஆயிரம் பேர் இருந்தாங்க. இன்னிக்குப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லை'' என்றபடியே பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தார்.
''1925-ல முசிறியில பிறந்தேன். சின்ன வயசுலயே எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. ஆனா, என் பெற்றோர் என்னை ஸ்கூலுக்கு அனுப்பலை. அந்தக் காலத்துல பெண்கள் வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க. எனக்கும் பதினைந்து வயதில் பால்ய விவாகம் நடந்தது.

ஒன்பது நாத்தனார், மாமியார், மாமனார்னு நான் வாழ்க்கைப்பட்டது பெரிய குடும்பம். ரொம்பவே கஷ்டப்பட்டோம். என் கணவர் கிருஷ்ணன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கிப் போடுவார். லைப்ரரிக்குப் போயும் நிறையப் படிப்பேன்.
பதினாறு வயசுல கதைகள் எழுத ஆரம்பிச்சேன். அதெல்லாம் தொடர்ந்து பத்திரிகைகளில் பிரசுரமாகி, எழுத்தாளர்கள் வரிசையில் எனக்கு ஒரு தனி இடம் கிடைச்சது'' என்றவர் முகத்தில் மெலிதான பூரிப்பு. தொடர்ந்த ராஜம் கிருஷ்ணன்,
''தாம்பரத்துல மூணு கிரவுண்ட்ல வீடு வாங்கினோம். நிம்மதிக்குக் குறைவில்லை. நான் கதை எழுதும்போதெல்லாம் என் கணவர் பேனாவுக்கு மை போட்டுத் தருவார். என் துணிமணிகளை அயர்ன் பண்ணித் தருவதும் அவர்தான். என் கதைகளைப் படிக்கக்கூட அவருக்கு நேரம் இருக்காது. ஆனாலும், நான் எழுத அவ்வளவு ஊக்கம் கொடுத்தார்..'' என்று நெகிழ்ச்சியோடு சொன்னவர், தன் எழுத்து அனுபவங்களின் பக்கமாகப் பேச்சைத் திருப்பினார்.
''1970-ல் தூத்துக்குடி உப்பளத்துக்குப் போய் அங்கு வாழும் மீனவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடையாது. மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டே வாழ வேண்டிய நிலை. பரிதாபத்துக்குரிய அந்த மனிதர்களின் அவல நிலையை 'கரிப்பு மணிகள்' என்ற நாவலாக எழுதினேன். அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்தன.
1972-ல் பீகாரில் கொள்ளையர்கள் அராஜகம் செய்து கொண்டிருந்த சமயம். அப்போ அந்த கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து பல மாதங்கள் அவர்களுடனே இருந்து பார்த்தவற்றை 'முள்ளும் மலரும்' என்ற தலைப்பில் எழுதினேன்.
பெண் சிசுக் கொலை, கோவா விடுதலை, சோவியத் நாடுகள் பற்றிய கட்டுரைத் தொடர்கள் என நான் எழுதாத விஷயங்களே இல்லை. பாரதியார் பற்றி நிறையப் புத்தகங்கள் வந்திருக்கு. ஆனால், 'முற்போக்குவாதியான பாரதியின் இறப்புக்குப் பின் செல்லம்மாளுக்கு மொட்டை அடித்தது ஏன்?' என்ற விவகாரத்தை ஆராய்ந்து 670 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டேன். இப்படி என்னுடைய 80-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது'' என்று நிறுத்தியவர், எதையோ நினைவுக்குக் கொண்டு வந்தவர் போல மேலே பேசினார்.
''ஒரு கட்டத்தில் என் கணவருக்குப் பக்கவாதம் தாக்கி நடமாட முடியாமப் போச்சு. தன்னோட தொண்ணூறாவது வயசுவரைக்கும் எனக்குத் துணையாவும் தூணாவும் இருந்தார். எங்களுக்குக் குழந்தைகளும் இல்லை. அவர் மறைவுக்குப் பின் 'என் ஒருத்திக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு?'னு உறவுகளும், நட்புகளும் கேட்டதால வீட்டை வித்துட்டேன். நான் எழுதிய அத்தனை படைப்புகளையும் எடுத்துச் செல்ல இடம் இல்லாததால் எல்லாத்தையும் தீ வெச்சுக் கொளுத்தினேன்.
கையில் இருந்த லட்சக்கணக்கான பணத்தை யார் யாரோ பகிர்ந்துக்கிட்டாங்க. பாங்க்ல இருந்த பணமும் என்னாச்சுன்னு தெரியலை. பங்களாவில் வாழ்ந்த நான் சகலத்தையும் இழந்து சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில வாடகைக்குக் குடிபோனேன். அங்க இருந்தப்போ, வரதட்சணை கேட்டுப் பொண்டாட்டியைக் கொடுமைப்படுத்தறவன்.. தினமும் குடிச்சிட்டு மனைவியை அடிச்சு உதைக்கிறவன்.. இப்படிப்பட்ட ஆட்களையெல்லாம் பார்த்தப்போ இன்னும்கூட பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலையோன்னு தோணுச்சு'' என்றவரின் குரலில் பெரும் துயர்.
''எட்டு மாசத்துக்கு முன்னால ஒரு ஆக்சிடென்ட்ல எனக்குக் கால் எலும்பு முறிஞ்சு போச்சு. ஆபரேஷன் நடந்து அஞ்சு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். என் தோழியான திலகவதி ஐ.பி.எஸ்., பாரதி சந்துரு இருவரும் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்து விட்டாங்க. என்னால இப்ப நடக்க முடியலை. இந்த வாக்கர் உதவியா இருக்கு. எத்தனையோ பேருக்கு ஒரு கஷ்டம்னா ஓடிப்போய் உதவி பண்ணினேன். இப்போ எனக்கு உதவத்தான் யாருமில்லை. பார்ப்போம்..''
கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி அந்த இரும்பு மனுஷி நமக்கு விடை கொடுக்க, சமூகத்துக்காக எவ்வளவோ அக்கறையோடு யோசித்த ஒரு மனுஷிக்கு இந்த சமூகம் செய்திருக்கும் மரியாதையைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை படித்ததும் மனது கனத்தது. தனது நாவல்கள் மூலம் இரு காலகட்டத்தில் சமுதாயத்திற்கு வெளிச்சம் காட்டியவர் இன்று இருளில். எமது சிட்னி தமிழ் அறிவகத்துக்குப் போய் ஆசையாய் அவரின் ஒவ்வொரு புத்தகத்தையும் தொட்டுப் பார்த்து புகைப்படமும் எடுத்துவிட்டு "முள்ளும் மலர்ந்தது" என்ற அவரின் நாவலை எடுத்து வைத்தேன். இந்த வாரம் ரயிலில் வைத்து வாசிக்க வேணும்.

40 comments:

  1. மனசு பாரமா இருக்கு தல..

    ReplyDelete
  2. நல்ல பதிவு கானா அண்ணே! வாய்ப்புகளும், வசதியும் இருந்தும் தமிழ் நூல்களைப் படிக்கும் ஆர்வம் இல்லாமல் போன, வீணாய் கழித்த பதின்ம வயதுகளை இன்று ஏக்கத்துடன் பார்க்கிறேன்... :)

    ReplyDelete
  3. //சமூகத்துக்காக எவ்வளவோ அக்கறையோடு யோசித்த ஒரு மனுஷிக்கு இந்த சமூகம் செய்திருக்கும் மரியாதையைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது///


    :((((

    ReplyDelete
  4. லைப்ரரி சார்!

    எத்தனையோ புத்தகங்கள் எத்தனை எத்தனையோ சங்கதிகள் இருந்தாலும் கூட ஒவ்வொன்றினையும் மிகுந்த ஈடுப்பாட்டுடன் தெரிந்து அறிந்து வைத்துக்கொண்டு வரும் வாசகர்களின் மனக்குறிப்பினை அறிந்து அவர்களை மிகுந்த உற்சாகப்படுத்தி நூல்களை வாசிக்க செய்த விதத்தில் உங்களது லைப்ரரி சார் போற்றுதலுக்குரியவர் (கொஞ்சம் பொறாமையுடனேயே பார்க்கிறேன்!-அன்பு கலந்து) இதே போன்றதொரு அனுபவம் என் நூலக நாட்களில் உண்டு - ஆனால் இங்கு எனக்கு நூல்கள் வாசிக்க உதவியவர் தினமும் நூலகம் வந்து படித்துச்சென்ற ஒரு வயதான வாசகர்தான்! (பெரும்பாலும் நூலகர்கள் இதை ஒரு அலுவலக பணியாக மட்டுமே எடுத்து ஆர்வமின்றி செய்கின்றனர் எங்கள் பகுதிகளில்!)

    ReplyDelete
  5. நான் எழுதிய அத்தனை படைப்புகளையும் எடுத்துச் செல்ல இடம் இல்லாததால் எல்லாத்தையும் தீ வெச்சுக் கொளுத்தினேன்.
    பிரபா, ஆசையாய் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் படைப்புகளைப் பற்றி பேச நினைத்திருந்தேன். கடைசியில் எதுவும் பேச இயலவில்லை

    ReplyDelete
  6. ''அழுவதற்கென்று எவரும் வந்து பூமியில் பிறக்கவில்லை. அழுதது போதும் அழுதது போதும் வாழ்வு இறக்கவில்லை""... தமிழில் வார்த்தைகளுக்குப் பஞ்சம் இல்லை என்பது உங்கள் சொல்லாடல்கள் ஊடகத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றன. மனதை வருடும் நினைவுகளைப் பதிவுகளாக்கியுள்ளீர்கள். யாழ் நூலகத்தைத் தொடர்ந்து எங்கள் மண்ணின் கல்விச் சாலைகள் பல அழிக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை.

    ReplyDelete
  7. நிஜமா நல்லவன்

    அந்தப் பேட்டியில் சொன்னது போல ஒரு சமூகப் போரளிக்கே இவ்வளவு அவலமான இறுதிக்காலம் என்று நினைக்கும் போது வேதனை இல்லையா?

    ReplyDelete
  8. வாங்க தமிழ்பிரியன்

    அப்போதெல்லாம் அதிகம் சின்னத்திரை ஆக்கிரமிப்பும் இல்லாதது நிறையப் பேருக்கு புத்தகங்களைத் தேட வைத்தது. இப்போதெல்லாம் நூலகங்களில் பெரும்பாலான புத்தகங்கள் மீளா உறக்கத்தில் இருக்கின்றன இல்லையா. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்கணும் என்பது என் விரதங்களில் ஒன்று.

    ReplyDelete
  9. ஆயில்யன்

    உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கும் நன்றிகள். பொதுவாகக் கல்லூரி நூலகங்களுக்கு பயிற்றப்பட்ட நூலகர்களே நியமிக்கப்படுகின்றார்கள். நீங்கள் சொன்னது போல தொண்டராக எந்த வித ஊதியம் இல்லாமல் கிராமம் தோறும் தாமே அமைத்து நடத்தும் நூலகங்கள் பலவும் இருக்கின்றன.

    ReplyDelete
  10. //
    அந்தந்தக் காலகட்டத்தில் அவரின் புத்தகக் குழந்தைகளை நேசித்தவர்களை அவரும் நேசித்திருக்கின்றார் அவ்வளவு தான். ஆனாலும் லைப்ரரி சேரை நான் மறக்க மாட்டேன
    //

    மனதில் நிற்கின்றது..

    ReplyDelete
  11. பகிர்வுக்கும் பதிவுக்கும் நன்றி அண்ணன்...

    ReplyDelete
  12. எங்கடை ஹாட்லிக்கல்லூரி நூலகத்தில் நான் கடைசியாக எடுத்து படித்த புத்தகம் பாம்பு நரம்பு மனிதன் கவிதைத்தொகுதி...

    புத்தகம் திருப்பிக்குடுக்காதவர்கள் பட்டியலில் என் பெயரையும் தவறுதலாக எழுதியிருந்தார் பொறுப்பாசிரியர்,அதுதான் கவலை எண்டால் அவர்களுக்கு கவிதைகளை உணரத்தெரியவில்லை என்பது அடுத்த கவலை...( பிழை நான் திருப்பிக் குடுத்ததை பதியாமல் விட்ட அந்த கிளாக்கின்ரை பக்கம்) அந்தப்புத்தகப்பெயரை வாசிச்சுப்போட்டு இதென்டா புத்தகம் இது 'பாம்பு நரம்பு மனிதன்' எண்டு நக்கலா சிரிச்சார் அருளானந்தம் வாத்தி...பெடியளும் சிரிச்சாங்கள்...(பெடியள் சிரிக்கிறது புதுசில்லையே) ஆனால் அந்தப்புத்தகத்தில் இருந்த கவிதைகளின் வீச்சும் மொழி நடையும் சற்றே வித்தியாசமாய் இருக்கும் புத்தகத்தின் பெயரைப்போலவே...

    இதனைப்பற்றி தமிழ்நதி அல்லது காயத்ரி யாரோ ஒருவர் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள் என்று நினைவு...
    புத்தகங்கள் வாசிப்பதில் இருந்த ஆர்வம் பாடப்புத்தகங்கள் படிப்பதில் இல்லாமல் போனதுதான் பிழையாப்போச்சு...;)

    ReplyDelete
  13. //ramachandranusha(உஷா) said...
    பிரபா, ஆசையாய் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் படைப்புகளைப் பற்றி பேச நினைத்திருந்தேன். கடைசியில் எதுவும் பேச இயலவில்லை//

    உஷாக்கா

    உண்மையில் இந்தப் பேட்டியின் தாக்கம் இன்னும் என்னை விட்டுப் போகவில்லை, எழுத்துலகின் போராளிக்கே இந்த நிலமையா என்னும் போது மனம் கனக்கின்றது.

    ReplyDelete
  14. // kamal said...
    யாழ் நூலகத்தைத் தொடர்ந்து எங்கள் மண்ணின் கல்விச் சாலைகள் பல அழிக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை.//


    வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி கமல்

    83 போல் பல கண்டோம், அதுபோல் நூலக அழிவுகளும் எரிப்புக்களும் எத்தனை எத்தனை.

    ReplyDelete
  15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா

    சிவம்

    உங்கள் தள அறிமுகத்துக்கும் நன்றி, நிச்சயம் இணைந்து கொள்கின்றேன்

    ReplyDelete
  16. பிரபா,
    நல்ல பதிவு..
    Krithika

    ReplyDelete
  17. அருமையான பதிவு பிரபா.

    சிதைந்த நூலகம் மனதில் ஏற்றும் பாரத்தைப் போலவே "ராஜம் கிருஷ்ணன்" வாழ்வும் அழுத்தமாய் பதிகின்றது.

    ReplyDelete
  18. தமிழன்

    உங்கள் வாசிப்பு அனுபவங்களையும் ஒரு பதிவாகத் தாருங்களேன். நூலகர் என்பது வெறும் பதவியில் மட்டுமன்றி நூல்களை நேசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கவேண்டும் இல்லையா?

    ReplyDelete
  19. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி க்ருத்திகா

    //பஹீமாஜஹான் said...
    அருமையான பதிவு பிரபா.

    சிதைந்த நூலகம் மனதில் ஏற்றும் பாரத்தைப் போலவே "ராஜம் கிருஷ்ணன்" வாழ்வும் அழுத்தமாய் பதிகின்றது.//

    வணக்கம் சகோதரி

    நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள் இல்லையா, அவற்றைப் படைத்தவர்கள் இப்படித் தொலைந்து போவதைக் காணும் போது மனதில் பாரம் நிலைக்கிறது.

    ReplyDelete
  20. இரண்டு சோகத்தை ஒன்றாகத்தந்திருக்கிறீர்கள்.. :(

    ReplyDelete
  21. பிரபா

    உணர்வுபூர்வமான ஒரு பதிவு. தனபாலசிஙம் சேரை எனக்கு சரியாக நினைவில்லை. நான் படித்தது யாழ் இந்து என்றாலும் சுதுமலையில் இருந்திருக்கிறேன். இதுபோல எத்தனையோ ஆசிரியர்கள் தொழிலை ஒரு சர்ப்பணிப்பாய் செய்தவர்கள். librarians களை பார்க்கும்போதெல்லாம் கொடுத்துவைத்தவர்காள் இவர்கள் என்று நான் பொறாமைப்பட்ட காலுமும் உண்டு.
    கிட்டதட்ட இது போன்றதொரு நிகழ்வு தனுஷ் நடித்த காதல் கொண்டேன் திரைப்படத்திலும் துள்ளுவதோ இளாமை படத்திலும் காட்டப்பட்டிருக்கும்.

    ReplyDelete
  22. ராஜம் கிருஷ்ணனுக்கு இந்த நிலைமையா. பேச ஆளில்லை என்றா சொல்கிறார்.

    சாஹித்ய அகாடமி பரிசுவாங்கிய ,சாதனையாளருக்கு இந்த நிலைம!

    மிகவும் வருத்தமாக இருக்கிறது பிரபா. தகவலுக்கு நன்றி. அவர் நூல்களைக் கொளுத்திய செய்தி இன்னும் பாரத்தை ஏற்றுகிறது.
    உங்கள் லைப்ரரி சார் நல்லா இருக்கணும்.

    ReplyDelete
  23. அன்புள்ள பிரபாகர்,

    பதிவுக்கு நன்றி. மிகத் துயரமான நிகழ்வு இது.

    நான் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை விஷ்ராந்தி போய் அங்கே இருக்கும் அன்னையரோடு நேரம் கழித்துவிட்டு வரும் வழக்கம். ஓணத்தை ஒட்டிப் போயிருந்தேன். அப்போது ராஜம் கிருஷ்ணன் அவர்கள் அங்கே இல்லை. அப்புறம் வந்திருப்பார் போல் உள்ளது.

    நேற்று திரு திருப்பூர் கிருஷ்ணனிடம்(அமுதசுரபி ஆசிரியர்) இது பற்றி விசாரித்தேன். ராஜம் கிருஷ்ணனுக்க்கு நெருங்கிய நண்பர்களில் அவரும் உண்டு. போன வாரம் ராஜம் கிருஷ்ணனைச் சந்தித்திருக்கிறார் திருப்பூர் கிருஷ்ணன்.

    ராஜம் அவர்கள் தற்போது யாரையுமே சந்திக்கும் மனநிலையில் இல்லை என்பதையும், அரசு உதவி, தனியார் உதவிக்காக யாரிடமும் யாரும் எனக்காக சிபாரிசு செய்ய வேண்டாம் என்றும் திருப்பூர் சொன்னார். வரும் ஞாயிறு (நவம்பர் 2) ராஜம் அவர்கள் தன் நெருங்கிய உறவினருடன் புனா போய் வசிக்கப் புறப்படுகிறார் என்றும் தெரிவித்தார்.

    நான் இந்த சனிக்கிழமை அவரைச் சந்திக்க முயல்கிறேன். கடினம் என்று தெரிகிறது. பார்க்கலாம்.

    அன்புடன்
    இரா.முருகன்

    ReplyDelete
  24. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    இரண்டு சோகத்தை ஒன்றாகத்தந்திருக்கிறீர்கள்.. :(//

    வாங்க முத்துலெட்சுமி

    ஒன்று மனசில் இது நாள் வரை இருந்தது, இன்னொன்று இப்போது வந்து சேர்ந்தது இரண்டுமே என் பால்யகாலத்தின் துணைகளாக இருந்தவை என்பதால் அதிக தாக்கம் ஏற்படுகிறது.

    //அருண்மொழிவர்மன் said...
    பிரபா

    librarians களை பார்க்கும்போதெல்லாம் கொடுத்துவைத்தவர்காள் இவர்கள் என்று நான் பொறாமைப்பட்ட காலுமும் உண்டு//

    உண்மைதான் அருண்மொழி வர்மன் எனக்கும் அதே ஆசை ஒருகாலகட்டத்தில் இருந்தது. ஆனால் இது எவ்வளவு சிக்கலானதும் நுட்பமானதும் என்பது இப்போது தெரிகின்றது. தனபாலசிங்கம் சேர் வீடு சுதுமலை அண்ணாமலை வீதிக்கு பக்கம் தான் இருக்கிறது.

    மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  25. //வல்லிசிம்ஹன் said...
    ராஜம் கிருஷ்ணனுக்கு இந்த நிலைமையா. பேச ஆளில்லை என்றா சொல்கிறார்.//

    வாங்க வல்லியம்மா

    இரா முருகன் சாரின் பின்னூட்டம் கொஞ்சம் ஆறுதல் தருகின்றது. இந்த எழுத்துப் போராளியின் இறுதிக் காலங்கள் வருத்தம் தோய்ந்த மையால் எழுதப்படக் கூடாது.

    ReplyDelete
  26. // era.murukan said...
    அன்புள்ள பிரபாகர்,
    வரும் ஞாயிறு (நவம்பர் 2) ராஜம் அவர்கள் தன் நெருங்கிய உறவினருடன் புனா போய் வசிக்கப் புறப்படுகிறார் என்றும் தெரிவித்தார்.

    நான் இந்த சனிக்கிழமை அவரைச் சந்திக்க முயல்கிறேன். கடினம் என்று தெரிகிறது. பார்க்கலாம்.

    அன்புடன்
    இரா.முருகன்//

    அன்பின் இரா.முருகன் சார்

    உங்கள் மடல் உண்மையில் ஓரளவு நிம்மதியைக் கொடுத்திருக்கின்றது. என்னதான் ஆதரவற்றோர் இல்லங்கள் நல்ல பணியைச் செய்தாலும், நல்ல உறவினர்களின் நேசமும் பரிவும் கிடைக்கும் பட்சத்தில் அவர் பேட்டியில் வெளிப்பட்ட விரக்தியான நிலை மாறும். அவருடனான சனிக்கிழமை சந்திப்பு நிகழவேண்டும், அவருக்கு உங்களால் முடிந்த ஆறுதலையும் பரிவையும் கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்கின்றேன்.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. I was truely moved when I read this article. You have brought tears to my eyes as i read the sorrowful events that have played Raajam Krishnan's life. Often you hear about happiness in peoples lives but not enough of their sorrows. Vikatan& You sould be commented for bringing writer
    Raajam's sorrows to light.

    "Gjaabaha koodtil" This is a beautiful line Praba.

    Arun Vijayarani.

    ReplyDelete
  29. ஆமாம் கானாப்ரபா ராஜம்க்ருஷ்ணன் போல பல எழுத்தாளர்களின் நிலமை இப்படித்தான் இருக்கிறது,,இவர் கதை தெரிந்துவிட்டது தெரியாத கதை பல இருக்கிறது. என் அப்பாகாலத்தில் எழுத ஆரம்பித்தவர் இவர். சின்ன வய்சில் நேரில் பார்த்த நினைவு லேசாய் இருக்கிறது அடக்கமான பெண்மணி. அவருக்கா இந்த நிலமை என்று வாசித்தபோதே மனம் கனத்தது.

    ReplyDelete
  30. விஜயராணி அக்கா

    எமக்கு எவ்வளவு தூரம் நேர்மையான படைப்பைத் தருகின்றார்களோ அவர்கள் எம் வாழ்க்கையில் நிரந்தரமான உறுப்பினர்கள் ஆகி விடுகின்றார்கள் இல்லையா. நீங்கள் உட்பட ராஜம் கிருஷ்ணனின் படைப்பை நேசித்த ஆழம் தான் அவரின் மீது இன்னும் பரிவு ஏற்பட வைத்திருக்கின்றது. அவரின் வாழ்வு சிறக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  31. //ஷைலஜா said...
    ஆமாம் கானாப்ரபா ராஜம்க்ருஷ்ணன் போல பல எழுத்தாளர்களின் நிலமை இப்படித்தான் இருக்கிறது,,//

    வாங்க ஷைலா

    அவர் தன் பிற்காலத்திலும் யாருக்கும் தன் கஷ்டம் தெரியாமலேயே இருந்திருக்கிறார், சஞ்சிகை பேட்டி தான் வெளிப்படுத்தி விட்டது, அதன் மூலம் நன்மை கிட்ட வேண்டும்.

    ReplyDelete
  32. அன்புள்ள பிரபாகர் சார்,

    இன்றைக்குத்தான் (செவ்வாய்) விஷ்ராந்தி போய்வரச் சந்தர்ப்பம் கிட்டியது.

    திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் நவம்பர் இறுதியில் தான் புனா போகிறார்.

    1) ராஜம் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் (அவர் கணவர் அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதால்) ஒருவழியாகத் தற்போது கிடைத்திருக்கிறது. ஆகவே அவருடைய பொருளாதார நிலை ஓரளவு சீராகியிருக்கிறது.

    2) அவர் தன் புத்தகங்களைக் கொளுத்தியதாக வந்த செய்தி தவறானது என்று தெரிவித்தார்.

    3)ஈழத்து நண்பர்கள் பற்றி பேச்சினிடையே அன்போடு நினைவு கூர்ந்தார். முக்கியமாக பேரா.சிவத்தம்பி குடும்பத்தினரோடு கொண்ட அன்பான நட்பு பற்றி.

    4) துயரமான நினைவுகளை மறக்கவோ என்னவோ, இலக்கியம் பற்றிப் பேசுவதையே அதிகம் விரும்பினார். அவருடன் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக அவருடைய நாவல்கள், மற்ற இலக்கியப் படைப்புகள் பற்றி உரையாடினேன். அதை சாவகாசமாக, என் பத்திரிகைப் பத்தி ஒன்றில் எழுத உத்தேசம். என் இணையத் தளத்திலும் (www.eramurukan.in) பின்னர் பிரதி செய்ய இருக்கிறேன்.

    அன்புடன்
    இரா.முருகன்

    p.s எஸ்.பொ நலமாக ஊர் திரும்பி விட்டாரா? அவர் வீட்டுக்கு அருகே தான் உங்கள் இல்லம் என்று வெள்ளிக்கிழமை பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்:-)

    ReplyDelete
  33. வணக்கம் அன்பின் இரா.முருகன் சார்

    ‍திருமதி ராஜம் கிருஷ்ணனை நீங்கள் சந்தித்ததும், அவர் குறித்த செய்திகளை எடுத்து வந்ததையும் அவரின் மீது நேசம் கொண்டவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். உண்மையிலேயே பெரும் மன நிறைவை அடைந்தார்கள் அவர்கள். திருமதி சிவத்தம்பி அவர்கள் நாளை சென்னை பயணப்படுகின்றார். உங்களைத் தொடர்பு கொள்வார் அல்லது எனக்கு ஒரு மின்னஞ்சல் இடுங்கள் அவர் குறித்த விபரங்களைத் தருகின்றேன்.

    எஸ்.பொ வந்து விட்டார், மகள் வீட்டில் தான் தங்கல்,

    மீண்டும் மீண்டும் உங்களுக்கு நன்றியோடு என்னை மின்னஞ்சலில் (kanapraba@gmail.com) தொடர்பு கொண்டால் எஸ்.பொ வின் தொலைபேசி இலக்கம் தருகின்றேன்.

    ReplyDelete
  34. //சமூகத்துக்காக எவ்வளவோ அக்கறையோடு யோசித்த ஒரு மனுஷிக்கு இந்த சமூகம் செய்திருக்கும் மரியாதையைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது //

    பல சிந்தனையாளர்கள் தமது தனிப்பட்ட வாழ்வு விவகாரங்களில் கவனக்குறைவாக இருந்து விடுவதால் பல இன்னலுக்குள்ளாகிறார்கள். ஒருவேளை விவகாரங்களில் கெட்டிக்காரர்களாய் இருந்திருந்திருந்தால் சிந்தனையாளராய் உருவாகி மாட்டார்களோ என்னவோ :(

    காலம்தான் எவ்வளவு வலியது ! கோமகள் என்ற பெயரில் எழுதிவந்த ராஜலக்ஷ்மி என்ற எழுத்தாளர் அல்ஜெமீர் வியாதிக்கு உள்ளாகி இப்போது தான் யார் என்ற உணர்வே இல்லாமல் காலத்தைக் கழிக்கிறார் என்பதை சில வருடங்களுக்கு முன் ஒரு தொலக்காட்சி நிகழ்ச்சியில் கண்டு இதயம் கனத்ததை இப்போது மீண்டும் உணர்கிறேன்.

    இரா.முருகனின் கடைசி பின்னூட்டம் சற்று ஆறுதலாய் இருந்தது.

    நன்றி

    ReplyDelete
  35. கபீரன்பன்

    கோமள் என்ற எழுத்தாளருக்கு நேர்ந்த அவலம் குறித்து இன்றே அறிகின்றேன்.

    நீங்கள் சொன்னது மெய்யெனப்படுகின்றது சமூகத்தை நினைத்தவர்களுக்கு தங்களைக் குறித்த கரிசனை இல்லாமல் போய் விட்டது போலும். உண்மையில் இப்பகிர்வினூடாக இரா.முருகன் சந்திப்பை அறிந்ததும் உண்மையில் எம்போன்றோருக்கு மிகவும் ஆறுதல்.

    ReplyDelete
  36. இப்பொழுதுதான் இப்பதிவினைப் பார்க்கிறேன். அவள் விகடனில் பார்த்து நானும் மிகவும் வருந்திய விடயம் இது.
    பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

    ReplyDelete
  37. வருகைக்கு நன்றி ரிஷான், அவள் விகடனில் வந்ததால் பலரையும் இது போய்ச்சேரவில்லை. மிகவும் கவலை தரும் விடையம் இல்லியா?

    ReplyDelete
  38. மிக அருமையான பதிவு. எனக்கு எனது ஹாட்லிக் கல்லூரி லைப்பிரரி நினைவுகளை கிளறிவிட்டது. W.N.S.Samuel மாஸ்டர் எமக்கு Emergengy 58, Psychologist போன்ற பலவற்றை அறிமுகப்படுத்தியதும். இரவிரவாக நானும் நண்பன் இராமகிருஸ்ணனும் பொன்னியின் செல்வன் ஏழு பாகங்களையும் நாளுக்கு ஒன்று வீதம் இரவிரவாக வாசித்து முடித்ததும் ஞாபகத்திற்கு வந்தது.

    ReplyDelete
  39. டொக்டர்

    என் பதிவினை வாசித்து உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு உண்மையில் மகிழ்வடைகின்றேன்.

    ReplyDelete