Pages

Sunday, February 11, 2007

நான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன்

ஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களைப் பற்றிய எனது பதிவை நீண்ட நாட்களாகத் தரவேண்டும் என்று முயற்சி யெடுத்திருந்தேன். அது இன்றுதான் கை கூடியிருக்கின்றது. 80 களில் நான் இணுவில் அமெரிக்கன் மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் காலகட்டத்தில், காலை என் பாடசாலை நோக்கிய பயணத்தில் அடிக்கடி வருவது பாலச்சந்திரன் அண்ணையும் ஒறேஞ் நிற பஜாஜ் ஸ்கூட்டரும் தான்.


நான் சிறுவனாக அந்தக் காலகட்டத்தில் அவரின் கலையுலக செயற்பாட்டின் ஆழ அகலம் முழுதுமாகத் தெரியாவிட்டாலும் நடந்து கொண்டே பள்ளி செல்லும் போது பக்கத்தில் வரும் பள்ளித் தோழன் ரூபனை உலுப்பி " உங்கை பாரும், அண்ணை றைட் பாலச்சந்திரன்" என்று விழிகள் விரிய ஒரு சினிமா உலகப் பிரபலத்தைப் பார்க்கும் அதே பிரமிப்போடு பார்ப்பேன். ஒரு முறை எங்கள் மடத்துவாசல் பிள்ளையாரடி உற்சவகாலத்தில் பார்த்த "அண்ணை றைட்" நாடகம் தான் கே.எஸ்,பாலச்சந்திரன் அவர்களை அடையாளப்படுத்தியிருந்தது. கடந்த வருடம் மின்னஞ்சல் தொடர்பில் அவர் கிடைத்தபோது இப்படிச் சொன்னார்.

//Dear Kana praba,
Lot of people around Inuvil, Kondavil, Thavadi and Kokuvil remember me with my orange scooter(Bajaj) as I was travelling to Jaffna. I was working at Income Tax office in Jaffna during 1981 - 1983, until I got transferred back toColombo. My days in Inuvil was very happy and peaceful. My family left Inuvil in 1990. When Sengai Aliyan visited Canada few years back, I gave those stills from Vadai Katru, which he has published in his book. I've Vaadai katru in NTSC video and U-matic format. I hope to release them very soon.

Anbudan
K.S.Balachandran//

அதே காலகட்டத்தில் பி.விக்னேஸ்வரன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இருந்தபோது வாரத்தில் அரைமணி நேரப் பகுதிகளாக வழங்கிய "நாடு போற்ற வாழ்க" படத்தைப் பார்த்து பாலச்சந்திரனின் வில்லத்தனமான நடிப்பை ரசித்திருந்தேன். கவர்ச்சிகரமான தோற்றமும் , குரலும் இவர் மீதான ஈர்ப்புக்கு ஒரு காரணம் என்றால் மிகையாகாது. "வாடைக்காற்று", "நாடு போற்ற வாழ்க", "நான் உங்கள் தோழன்", "அவள் ஒரு ஜீவ நதி" போன்ற படங்கள் இவரின் ஈழத்து சினிமா உலகின் பங்களிப்புக்கள்.


என் இளம்பிராயத்திலேயே இந்தக் கலைஞனைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ பின்னர் தூர இருந்தாலும் இவரின் ஓவ்வொரு படைப்பையும் தேடி நுகரவைத்தது. தொண்ணூறுகளில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், இவர் தடுப்புக்காவலில் பல மாதங்கள் இருந்ததை அறிந்து வேதனையோடு, இந்தக் கலைஞன் வாழ்வில் விடிவு வராதா என்று மனதுக்குள் புழுங்கிய நாட்களையும் மறக்கமுடியாது.

1995 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் வெள்ளைப் புறாவைக் காட்டிச் சமாதான வேடம் பூண்ட வேளை என் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம். என் நண்பர் குழாமிலேயே நான் மட்டுமே வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க வேண்டிய நிலை வந்தது. கூடவே வந்த நட்பு வட்டத்தைத் தொலைக்கின்றேன். மனதுக்குள் அழுகின்றேன். அப்போது....

வெள்ளவத்தையில் உள்ள முத்துக்கருப்பன் செட்டியார் நகை மாளிகைக்கு மேலே இருந்த என் தங்கும் அறைக்கு நேரெதிரே இருந்தது Finaaz Music Corner. (இப்போதும் அது அதேயிடத்தில் இருக்கிறது, ஒவ்வொரு முறை தாயகம் போகும் போதும் மறக்காமல் அங்கே செல்வேன்).

பயணம் செல்ல ஒரே ஒரு நாள் தான் பாக்கி. Finaaz Music Corner செல்கின்றேன். கே.எஸ். பாலச்சந்திரனின் வாத்தியார் வீட்டில் நாடகப் பேழைகளின் மூன்று பாகங்களும் . (தெனாலி படத்துக்கு கமலஹாசனின் ஈழத்துப் பேச்சுப் பயிற்சிக்கு உதவிய அதே ஒலி நாடாக்கள்) , இவரின் தனி நடிப்பு ( அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரிலே) மற்றும் சக ஈழத்துக் கலைஞர்களோடு வழங்கிய நகைச்சுவைப் படையல்கள் (சிதம்பர ரகசியம், சவாலுக்கு சவால்) இவற்றைக் கொண்ட ஒலிப்பேழை ஆகியவற்றை அள்ளியெடுத்துக்கொண்டேன்.






















அந்த ஒலிப்பேழைகளோடு புலம் பெயர்ந்தேன். அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் என் பகல் வேளைப் படிப்பு முடிந்து மாலை வீடு திரும்பித் தனியறையில் அடைபட்ட காலங்களில் வோக்மென்னில் (walkman) இந்த ஒலிப்போழைகள் ஒவ்வொன்றாகச் செருகிக் காதில் தமிழ் கேட்காத குறையைத் தீர்த்துக் கொண்டேன். நண்பர் வட்டத்தோடு பேசித்தீர்த்த அதே உணர்வோடு தூங்கப் போவேன்.

பின்னர் காலவோட்டத்தில் நட்பு வட்டத்திலும் வானொலியுடாகவும் தமிழ்த் தொடர்பு மீண்டாலும் என் புலம் பெயர்வாழ்வில் எனக்கு உயிர்கொடுத்து அந்நியப்படாமல் வைத்திருந்தத பாலச்சந்திரன் அவர்களின் நாடகங்களை மறவேன் நான்.





















அந்த நன்றிக்கடனோ என்னவோ, பத்திரிகையோ இணைத்திலோ அறிந்து கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் கலையுலகில் 25 ஆண்டு நிறைவைப் போற்றி எனது முற்றத்து மல்லிகை வானொலி நிகழ்ச்சியில் ஒரு செவ்வியைக் கண்டிருந்தேன். (அந்த ஒலிப்பதிவையும் பின்னர் தருகின்றேன். )
மாதங்கள் கடந்தன. வாடைக்காற்று நாவல் மற்றும் திரைப்படம் குறித்த பதிவொன்றை தமிழ்மண நட்சத்திர வாரத்துக்காக எழுதியிருந்தேன். ஒரு நாள் ஒரு மடல் வந்தது. இப்படி.

//Dear Kana Piraba,

I'm that Balachandran from the movie "Vaadai Katru" presently living in Canada.
I was living in Inuvil for 14 years closer to Kalingan Theatre.
As I'm unable to write in Tamil using Unicode, I could'nt do any feed back on "Vaadai Katru" in your page. Anyhow thanks for your interest in Sengai Aliyan and his novels.

Anbudan
K.S.Balachandran//

K.S.Balachandran said ... (January 17, 2007 4:46 AM) :
கானப்பிரபா,வாடைக்காற்று நாவலைப் பற்றி கூறப்போய் ஈழத்து திரைப்படங்களைப்பற்றிய பல தகவல்கள் வருவதற்கு களம் அமைத்திருக்கிறீர்கள்.//

என் புழுகத்துக்குச் சொல்லவும் வேண்டுமா? இருக்காதா பின்னை. எட்ட நின்று போற்றும் ஒரு கலைஞன் என் பதிவினை வாசித்துக் கருத்துச் சொன்னதுதான் அதற்கான ஒரே காரணம்.

ஆனால் முன்னரே அவரை வானொலியில் பேட்டிகண்டது நான் தான் என்பது அப்போது தெரிந்திருகவில்லை. என்னுடைய வாடைக்காற்று கட்டுரைத் தன் பிரத்தியோகப் பக்கத்திலும் சேர்த்துச் சிறப்புச் செய்தார்.
என் பங்கிற்கு பாலச்சந்திரன் அவர்களின் நாடகங்களைப் பலரும் கேட்கும் விதத்தில் அவ்வப்போது ஒலி வடிவில் தரவிருக்கின்றேன்.

அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரிலே, கோணர் சீற் கோபாலபிள்ளை, சிதம்பர ரகசியம், சவாலுக்குச் சவால், வாத்தியார் வீட்டில் (அனைத்துத் தொகுதிகளும்), கிராமத்துக்கனவுகள் போன்றவை தான் அவை.

அதற்கான அனுமதியை மின்னஞ்சல் மூலம் பாலச்சந்திரன் அவர்க்ள் தந்தது அவரின் பெருந்தன்மையில் வெளிப்பாடு.

இவர் போன்ற நம் ஈழத்துக் கலைஞர்கள் அண்டைத் தமிழகத்தில் பிறந்திருந்தால் இன்னும் வெளிச்சம் போடப்பட்டிருப்பார்களோ என்ற ஆதங்கமும் எனக்கு அடிக்கடி வருவதுண்டு.

அவற்றின் எழுத்துப் பிரதியாகவும் தட்டச்சு செய்து சமகாலத்தில் தரவேண்டும் என்பதால் நாள் எடுக்கின்றது. முதலில் "அண்ணை றைற்" வருவார்.

என் பதிவை முடிக்கும் போது ஒரேயொரு மனக்குறை என் மனதில் உழன்றுகொண்டிருந்தது. அதையும் சொல்லிவிடுகின்றேன்.
என் பத்துவயது காலத்தில் கண்ட அழகான குறும்பு தொனித்த முகத்தோடு இருந்த அந்தக் கலைஞன் இன்று இளமை தொலைத்து தாடி நிரப்பி ஏதோ சோகத்தைப் புதைத்து வைத்தது போல மூப்பின் வெளிப்பாடாக இருப்பதைக் காண மனம் ஒப்பவில்லை.

பாலச்சந்திரன் அண்ணாவின் இளமை திரும்பவேண்டும் , அவரின் இன்னும் பல கல கல கலைப்படைப்புகளின் மூலம் தான் அது முடியும்.


கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களின் வலைப்பக்கங்கள் இதோ:

http://actorksbalachandran.blogspot.com/

http://balachandran02.blogspot.com/

இணையம் வழி அவரின் குறும்படங்கள் மற்றும் படைப்புக்கள்
தாகம் -குறும்படம்

உயிரே உயிரே - குறும்படம்

மனமே மற்றும் காற்று - அறிமுக விழாத் துளி

மனமே மற்றும் காற்று - அறிமுக விழாத் துளி 2

வை.ரி.லிங்கம் ஷோ

தனி நடிப்பு வீடியோ

ஆரம் நிகழ்ச்சியில் வழங்கிய நேர்காணல் ஒளி

தமிழ் தகவல் விருது


வாடைக்காற்று குறித்த என் பதிவு

http://kanapraba.blogspot.com/2006/07/blog-post.html

34 comments:

  1. வணக்கம் பிரபா

    நான் அண்மையில் தமிழிச்சி படம் பார்த்தேன். அதில் கே.எஸ்.பாலச்சந்திரனும் நடிக்கிறார்.

    நானும் அவற்ர ஒரு விசிறி. அந்தக் கால ஈழத்து வானொலி தொடக்கம் இன்று வரை.
    நல்ல பதிவு பிரபா. இப்பிடியான பதிவுகள்தான் எங்கட ஈழத்து கலைஞர்களை உலகுக்கு தெரியப்படுத்த உதவும்.
    நன்றி

    ReplyDelete
  2. அவரைப் பார்க்கத்தான் சோகமாக இருக்கிறார்.ஆனால் அவருடைய வைத்திலிங்கம் சோ ரீவிஐ ல பார்ப்பவர்கள் அப்பிடி நினைக்க மாட்டார்கள்.எப்பவாவது சந்தர்ப்பம் கிடைக்கும்போது நானும் வைத்திலிங்கம் நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பதுண்டு.நக்கலுக்கும் நையாண்டிக்கும் குறைவிவில்லை.

    நேரிலும் ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.அவருக்கு ஞாபகம் இருக்கோ தெரியவில்லை.சந்திக்கும்போது எனக்கு அவரைப் பற்றி எதுவுமே தெரியாது. "காவடிகள்" என்ற முனைவர் பார்வதி கந்தசாமியின் நாடகமொன்றில் நடித்திருந்தேன்.அந்த விழாக்குழுவினருக்கான ஒரு தேநீர் விருந்தில்தான் அண்ணை றைட் பாலச்சந்திரனைச் சந்தித்தேன்.வீட்டுக்கு வந்து அம்மா இன்றைக்கு அண்ணை றைட் பாலச்சந்திரன் என்றொராளைச் சந்திச்சனான் என்று சொன்னபோதுதான் அம்மா இவரைப் பற்றி நிறையக் கதைகள் சொன்னா.
    நான் ஏற்கனவே என்னுடைய வலைப்பதிவில் "பொய் சொல்லலாம்" என்று ஒரு நகைச்சுவைக் கதை எழுதியிருந்தேன்.அந்தக்கதையை அந்த நான் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில் சொல்லி எங்களையெல்லாம் சிரிக்க வைத்தவர் கே எஸ் பாலச்சந்திரன் தான்.

    தொடர்ந்தும் நிறைய எழுதுங்கள் அவரைப் பற்றியும் அவருடைய படைப்புக்கள் பற்றியும்.

    கடைசிப்படத்தில் "கவனம்" என்று சொல்வதுபோல் இருப்பவரைஅண்மையில் ஏதோவோர் திரைப்படத்தில் பார்த்த ஞாபகம்.

    ReplyDelete
  3. கான பிரபா நன்றி உங்கள் பதிவுக்கு.அவரை பற்றி நங்கு அறிய உதவி செய்திருக்கிறீர்கள். எனக்கு பாலசந்திரன் அவர்களை அவரது தற்போதைய ரிரின்/ரிவிஐ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக தான் தெரியும்.

    ReplyDelete
  4. //என் புழுகத்துக்குச் சொல்லவும் வேண்டுமா? இருக்காதா பின்னை. எட்ட நின்று போற்றும் ஒரு கலைஞன் என் பதிவினை வாசித்துக் கருத்துச் சொன்னது தான் ஒரே காரணம்.//
    வணக்கம் பிரபா ..நல்லதொரு பதிவு தேவையான பதிவு... நன்றிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. // செல்லி said...
    வணக்கம் பிரபா

    நான் அண்மையில் தமிழிச்சி படம் பார்த்தேன். அதில் கே.எஸ்.பாலச்சந்திரனும் நடிக்கிறார்.

    நானும் அவற்ர ஒரு விசிறி. அந்தக் கால ஈழத்து வானொலி தொடக்கம் இன்று வரை.//

    வணக்கம் செல்லி

    தமிழச்சியில் பாலச்சந்திரன் அவர்கள் நடித்தது நான் அறிந்திராத செய்தி, கட்டாயம் பார்க்கவேண்டும். உண்மை தான் ஒரு காலத்து வானொலிப் பிரியர்கள் மனதில் இருந்து கே.எஸ்.பாலச்சந்திரன் போன்றவர்கள் நீக்கமுடியா இடத்தில் இருப்பவர்கள்.

    ReplyDelete
  6. கானா பிரபா, கே. எஸ். பாலச்சந்திரனைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றிகள். அவருடைய வானொலி நாடகங்கள் பலவற்றை அன்றைய நாட்களில் கேட்டு ரசித்தவன். மேடை நாடகம் ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன். மிக அருமையான நடிகர். யாழ்ப்பாணத் தமிழில் பேசி நடிப்பவர். அவருடைய நாடகங்களைப் பதியுங்கள். கேட்க ஆவலாயுள்ளேன். நன்றி பிரபா.

    ReplyDelete
  7. //சிநேகிதி said...
    அவரைப் பார்க்கத்தான் சோகமாக இருக்கிறார்.ஆனால் அவருடைய வைத்திலிங்கம் சோ ரீவிஐ ல பார்ப்பவர்கள் அப்பிடி நினைக்க மாட்டார்கள்.எப்பவாவது சந்தர்ப்பம் கிடைக்கும்போது நானும் வைத்திலிங்கம் நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பதுண்டு.நக்கலுக்கும் நையாண்டிக்கும் குறைவிவில்லை.//

    வணக்கம் சினேகிதி

    Y.T.லிங்கம் show, U Tube இலும் இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட பின்னர் அவரின் மேலும் சில படைப்புக்களுக்கான இணைப்புக்களைக் கொடுத்திருக்கின்றேன்.

    நீங்களும் மேடையேறுவது குறித்து இன்று தான் அறிந்தேன், மிக்க சந்தோஷமான விடயம்.

    ReplyDelete
  8. // வி. ஜெ. சந்திரன் said...
    கான பிரபா நன்றி உங்கள் பதிவுக்கு.அவரை பற்றி நங்கு அறிய உதவி செய்திருக்கிறீர்கள்.//


    வணக்கம் சந்திரன்

    தொடர்ந்து நான் தரப்போகும் அவரின் படைப்புக்கள் இன்னும் இன்னும் அவரின் கலைப்பணியின் ஆழ அகலத்தைக்காட்டும். வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  9. அண்ணா,
    அண்மையில் இணையத்தில் ஐயாவுடைய பேட்டியை பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
    மேலும் அறிய சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  10. நல்ல மனிதர்கள், நினைவுகள், ஆக்கங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள் கானா பிரபா. நன்றி. இவரைப் பற்றிய விக்கிபீடியா கட்டுரையை மேம்படுத்தித் தர முடியுமா?

    http://ta.wikipedia.org/wiki/கே. எஸ். பாலச்சந்திரன்

    ReplyDelete
  11. //சின்னக்குட்டி said ... (February 11, 2007 6:01 PM) :
    வணக்கம் பிரபா ..நல்லதொரு பதிவு தேவையான பதிவு... நன்றிகள் வாழ்த்துக்கள்//

    வணக்கம் சின்னக்குட்டியர்

    உங்களின் உந்துதல் தான் நான் இப்பதிவை விரைவாக எழுதக் காரணம். கூடிய சீக்கிரம் ஒலிவடிவங்களை எழுத்துப்பிரதிகளோடு தருகின்றேன்.

    ReplyDelete
  12. //தூயா said...
    அண்ணா,
    அண்மையில் இணையத்தில் ஐயாவுடைய பேட்டியை பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
    மேலும் அறிய சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தூயா

    ReplyDelete
  13. //ரவிசங்கர் said...
    நல்ல மனிதர்கள், நினைவுகள், ஆக்கங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள் கானா பிரபா. நன்றி. இவரைப் பற்றிய விக்கிபீடியா கட்டுரையை மேம்படுத்தித் தர முடியுமா?//


    மிக்க நன்றிகள் ரவி சங்கர். கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது முன்னைய தளம் ஒன்றில் அவரின் கலைப்பணி குறித்து விரிவான தகவல்கள் இருந்தன. துரதிஷ்டவசமாக அந்த இணையத்தளம் இப்ப்போது மறைந்துவிட்டது. நான் என் பதிவில் குறிப்பிட்டது போன்று இவருடன் எடுத்த செவ்வியில் விரிவான குறிப்புக்கள் உள்ளன. அவற்றை முயற்சி செய்து விரைவில் தருகின்றேன்.

    இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, தமிழ் விக்கிபீடியா திட்டத்திலும் கே.எஸ்.பாலச்சந்திரன் தன் பங்களிப்பை வழங்க ஆரம்பித்திருக்கின்றார் என்றும் அறிந்தேன்.

    ReplyDelete
  14. வணக்கம் பிரபா,

    கே.எஸ் பாலச்சந்திரைனை எனக்கு நினவு தெரின்ச நாள் முதலாத் தெரியும்.எனது தந்தையின் நண்பர்.இவரோடு நானும் நடிச்சிருக்கன், குழந்தை நட்சத்திரமா:-) (ரேடியோ சிலோன் நாடகம், 'இரை தேடும் பறவைகள்' மற்றும்,வரணியூரானின் மேடை நாடகம் 'புளுகர் பொன்னையா', 'நம்பிக்கை' போன்றவற்றில்).இது பற்றியெல்லாம் நினைவில் நின்றவை பற்றி ஒரு பதிவு போடலாம் தான் ஆனா அதால என்ன பிரியோசனம் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கன்.

    ஆன உங்கட பதிவு இவர் போன்ற கலஞர்களை புதிய தலைமுறைக்கும், மற்றும் உலகத் தமிழருக்கும் அறிமுகம் செய்யுது.மிகுந்த சிரமம் எடுத்து தகவல்களைத் திரட்டி உள்ளீர்கள் .பதிவுக்கு, நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  15. வணக்கம் அற்புதன்

    நீங்களும் உங்கள் ஆரம்ப நாள் நடிப்பனுபவங்கள் பலவற்றை வைத்திருப்பீர்கள். என்ன செய்வது உங்கட பொலிசி, அவற்றைப் பதிவாக்க இடங்கொடாது ;-)

    காலம் மாறும், உங்கள் நினைவுப் பதிவும் வரும் என்று காத்திருக்கிறேன். கருத்துக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. தகவலுக்கு நன்றி கானா.
    மறந்தவர்களை நினைக்க வைத்ததற்கு............

    ReplyDelete
  17. அன்புத் தம்பி கானா பிரபாவுக்கும், பின்னூட்டம் இட்ட அத்தனை அன்புள்ளங்களுக்கும்,

    என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை, அபிமானத்தை அறிகின்ற போது என் நீண்ட கலைப்பயணத்தின் களைப்பு தொலைந்து போய்விட்டது. உங்கள் அனேகரின் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்பது ஒரு கலைஞன் என்ற ரீதியில் எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. நன்றி.

    ReplyDelete
  18. \\என்ன செய்வது உங்கட பொலிசி, அவற்றைப் பதிவாக்க இடங்கொடாது ;-)\\ :-) :-)

    ReplyDelete
  19. பிரபா!

    பாலச்சந்திரன் நல்ல கலைஞர் என்பதற்கும் அப்பால், மிக நல்ல மனிதர். பல இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர். அவரது இப்போதைய வைத்திலிங்கம் ஷோ நிகழ்ச்சியில் கூட இதைக் காணலாம்.
    அண்மையில் நின்று அவரை ரசி்த்ததில் நான் அறிந்த உண்மைகள் இவை. சிரத்தையெடுத்த உங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  20. //AJeevan said...
    தகவலுக்கு நன்றி கானா.
    மறந்தவர்களை நினைக்க வைத்ததற்கு............ //

    வணக்கம் அஜீவன்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். தங்களைப் போன்ற கலைஞர் வரவால் என் பதிவு நிறைவடைகின்றது.

    //சிநேகிதி said...
    \\என்ன செய்வது உங்கட பொலிசி, அவற்றைப் பதிவாக்க இடங்கொடாது ;-)\\ :-) :-) //

    சினேகிதி,
    சிரிப்புக்காட்டாதேங்கோ ;-)))

    ReplyDelete
  21. பிரபா!
    கே.எஸ்.பாலச்சந்திரன் என்றால் எனக்கு "அண்ணை றைற்" தான் நினைவு வரும். பின் புலம் பெயர்வில் "வைத்திலிங்கம் ஷோ" கலகலப்புக்குக் குறைவில்லை.
    இனி ஒலிப்பதிவுகளைத் தாருங்கள்!! மீன்டும் பழசை மீட்போம்.
    என்னவோ? இந்த முதுமையிலும் அவரில் ஓர் அனுபவச் செழுமை இருப்பது போல் உணர்கிறேன்

    ReplyDelete
  22. //K.S.Balachandran said...
    உங்கள் அனேகரின் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்பது ஒரு கலைஞன் என்ற ரீதியில் எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. நன்றி.//

    வணக்கம் பாலச்சந்திரன் அண்ணா

    கலைஞர்கள் அவர்தம் வாழும் காலத்தில் கெளரவப்படுத்தப்படல் வேண்டும் என்பதில் நானும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவன். தனிப்பட்ட ஈகோக்களால் ஒருவருக்குக் கிடைக்கவேண்டிய தகுந்த மரியாதை கொடுக்கப்படாது அவரின் வாழ்வியல் காலம் கடந்த பின் விழா எடுப்பதோ மாலை போடுவதோ எம்மை நாமே ஏமாற்றுவது.

    என் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்காக எழுதப்படும் இப்பதிவுகள் என் மன ஆழத்தில் இருந்து வெளிப்படுபவை. தொடர்ந்தும் உங்கள் கலைப்பணி சீர் பெற்று விளங்க இறைவனைப் பிரார்த்திப்பேன்.

    ReplyDelete
  23. வணக்கம் பிரபா.

    கே. எஸ் பாலச்சந்திரனைபபற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.அவரைப் பற்றிய ஒரு இணையத்தளம் கூட எடுத்துவைத்திருந்தேன்.பல காரணங்களால் முடியாமல் போய்விட்டது.இப்போது பார்த்தால் அந்த இணையதளம் கூட காணாமல்
    போய்விட்டது.

    அண்ணைரைட் மூலம் தான் எனக்கு தெரியவந்தவர்.நாடகங்கள்,அதை விட பாடல்களும்(மேடைகளில்)பாடியதாக ஞாபகம்.'
    கனடா வந்த புதிதில் ஒரு நாள் அவரைநேரில் கண்டபோது அதிர்ந்து போனேன்.15,20 வருடங்களுக்கு முன்னர் கண்ட முகம் தான் ஞாபகத்தில் நின்றதே தவிர காலங்கள் உருண்டோடியது ஞாபகத்தில் இல்லை.

    பிரபா நீங்கள் அவரைப் பற்றி செய்பப்போகும் இவ் விடயங்கள் எம் பிற்கால சந்ததிகளுக்கு பேருபகாரமாக
    இருக்கும்.எங்கள் பிள்ளைகலும் இவற்றினை ரசிக்கவேண்டும்.வாழும் கால்த்திலே கலைஞர்கள் கெளரவிக்கப்படவேண்டும்.
    அவரின் அனுமதி கிடைத்து விட்டது.இணையத்தில் ஏற்றுங்கள்.

    ReplyDelete
  24. //மலைநாடான் said...
    பிரபா!

    பாலச்சந்திரன் நல்ல கலைஞர் என்பதற்கும் அப்பால், மிக நல்ல மனிதர். பல இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர்.அண்மையில் நின்று அவரை ரசி்த்ததில் நான் அறிந்த உண்மைகள் இவை.//

    வணக்கம் மலைநாடான்

    அப்படியென்றால் நீங்களும் பல அனுபவங்களை வைத்திருப்பீர்கள், பதிவாக எதிர்பார்க்கின்றேன். வருகைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  25. நல்ல பதிவு.
    நன்றி.
    ஒலிவடிவத்தைக் கேட்க ஆவலோடு இருக்கிறேன்.

    //வணக்கம் அற்புதன்

    நீங்களும் உங்கள் ஆரம்ப நாள் நடிப்பனுபவங்கள் பலவற்றை வைத்திருப்பீர்கள். என்ன செய்வது உங்கட பொலிசி, அவற்றைப் பதிவாக்க இடங்கொடாது ;-)//

    என்னுடைய நகைப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  26. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    பிரபா!
    கே.எஸ்.பாலச்சந்திரன் என்றால் எனக்கு "அண்ணை றைற்" தான் நினைவு வரும். பின் புலம் பெயர்வில் "வைத்திலிங்கம் ஷோ" கலகலப்புக்குக் குறைவில்லை.//

    வணக்கம் யோகன் அண்ணா

    இப்போது தொலைபேசியில் பேசிய நண்பர் ஒருவர் நேற்று இரவு இந்தப் பதிவைப் பார்த்துத் தொடர்ந்த ஆர்வமேலீட்டினால் பாலச்சந்திரன் அண்ணாவின் வலைப்பக்கம் மற்றும் இணைக்க்ப்பட்ட வீடியோக் காட்சி எல்லாவற்றையும் பார்த்துத் தன் அன்றைய நாளைப் புதுப்பித்ததாகச் சொன்னார். உண்மையில் இந்தக் கலைஞனுக்குக் கிடைக்கும் பாராட்டை நினைக்கும் போது பெருமிதமாக இருக்கின்றது.

    ReplyDelete
  27. //கரிகாலன் - karikaalan said...
    வணக்கம் பிரபா.

    கே. எஸ் பாலச்சந்திரனைபபற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.அவரைப் பற்றிய ஒரு இணையத்தளம் கூட எடுத்துவைத்திருந்தேன்.//

    வணக்கம் கரிகாலன்

    தங்கள் கருத்துக்கு நன்றிகள். பாலச்சந்திரன் அண்ணையின் முந்திய தளத்தில் பல தகவல்கள் இருந்தன அவற்றோடு தனியான ஒரு தளத்தை அவர் மீள ஆரம்பிக்கவேண்டும் என்பது என் அவா.

    முன்னர் சொன்னது போல அண்ணை றைற் ஒலி வடித்தை, எழுத்து வடிவத்தோடு சேர்த்துப் பதிவாக இடவுள்ளேன். வரும் வெள்ளிக்கிழமை இதைச் சாத்தியப்படுத்த எண்ணியுள்ளேன்.
    தொடர்ந்து அவ்வப்போது மற்றய ஒலிப்பதிவுகளையும் தருகின்றேன்.

    ReplyDelete
  28. //வசந்தன்(Vasanthan) said...
    நல்ல பதிவு.
    நன்றி.
    ஒலிவடிவத்தைக் கேட்க ஆவலோடு இருக்கிறேன்.//

    வசந்தன்

    வருகைக்கு நன்றி, ஒலி கூடிய கெதியில் வரும், உம்மட ஸ்மைலியையும் கணக்கில் போட்டாச்சு ;-))

    ReplyDelete
  29. பகிர்வுக்கு நன்றி அண்ணே !!!

    ReplyDelete
  30. வருகைக்கு நன்றி தம்பீ ;-)

    ReplyDelete
  31. \\என்ன செய்வது உங்கட பொலிசி, அவற்றைப் பதிவாக்க இடங்கொடாது ;-)\\ :-) :-)



    உதத் தான் வலைஞர் பாசையில உள் குத்து எண்டுறதோ? எனக்கு அப்படிப் 'பொலிசி' ஒண்டும் கிடையாது.ஒவ்வொருத்தருக்கு ஒரு பார்வை இருக்கும் தானே?(இதெப்படி இருக்கு;-)யோசிக்கிறன் எண்டல்லோ எழுதி இருக்கன் ,அதுக்கு என்ன சிரிப்பு வேண்டுக் கிடக்கு சி நேகிதிக்கும்,வசந்தனுக்கும்.:-)

    ReplyDelete
  32. அட இவரா அவர். கீழே போட்ட போட்டோவ தூக்கி மேல போடுங்கப்பா! நானும் யாரையோ பற்றி சொல்கிறீர்கள் என்று நினைத்து வாசித்துக்கொண்டிருந்தேன்.

    நன்றி தகவலுக்கு.

    ReplyDelete
  33. வணக்கம் தர்ஷன்

    இவர் தான் இவர். நீங்கள் கீழை வரைக்கும் வாசிக்கவேண்டும் எண்டுதான் அப்படிப் போட்டனான் ;-)

    அப்பிடியில்லை, எங்களைப் பொறுத்தவரை முதற் படத்தில் இருந்த தோற்றம் தான் இன்னும் கண்ணுக்குள்ளை இருக்குது.

    வருகைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  34. அண்ண றைட் ஒலிப்பேழை ஒறிஜினல் கிடைக்குமா? மேலும் புதிய காற்று நான் உங்கள்தோழன் பட பாடல்கள் கிடைக்குமா? பேசாலை கிறிஸ்ரி christybarathi@gmail.com


    ReplyDelete