Pages

Saturday, December 31, 2005

எங்க ஊரு காவல்காரங்கள்


அகிரா குரொசவா ஜப்பானிய சினிமாவில மட்டுமில்ல, உலகளாவிய சினிமா அரங்கிலும்அறியப்பட்ட ஒரு தலை சிறந்த இயக்குனர். ( புண்ணியவான் தமிழ் நாட்டில பிறந்திருந்தால் புரட்சி இயக்குனர் பட்டமும் எதாவது சந்துக்குள்ள இருக்கிற பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் குடுத்திருக்கும்)
சில காட்சிப்படுத்தல்களை சினிமாவின் மூலம் இன்னும் அழகாகக் காட்டமுடியும். குறிப்பிட்ட நிமிடங்களே ஓடக்கூடிய சினிமாவை நச்சென்று காட்டக்கூடிய காட்சியமைப்பின் மூலம் சொல்ல வந்த விஷயத்தின்ர ஆழத்தைக் காட்டமுடியும். இதை கமரா உத்தி மற்றும் திரைக்கதை அமைப்பு மூலம் சாத்தியப்படுத்தலாம். ஒரு மேடை நாடகத்தில் இருந்து சினிமா வேறு படுவது இதில் தான். ( இயக்குனர் விசு சினிமாவையே மேடை நாடகம் ஆக்கிய பெருமைக்குரியவர்).

பக்கம் பக்கமாகப் பேசக்கூடிய காட்சிவடிவத்தைக் சில நிமிட கமராக் கோணம் மூலமும் கமராவினுடைய மிகச்சரியான இயக்கம் மூலமும் காட்சிப்படுத்தலை சினிமாவுக்குள்ள புகுத்தியவர் தான் இந்த அகிரா. இன்றைய மணிரத்னம் படங்கள் இவரின்ர உத்தியத் தான் எடுத்து அதிக அளவில் பயன்படுத்துகின்றார். (அகிராவை போன்ற முன்னோடிகளைத் தெரியாத சாமான்யன்கள் தமிழ்நாட்டுப் படங்களை அடிக்கடி ஒஸ்கார் விருதுக்கு சிபார்சு செய்வான்கள்)

இந்த உத்தியின் ஒரு வடிவத்தை சின்ன உதாரணம் மூலம் சொல்லுறன்.
வில்லன் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்துவதாக காட்சி என்றால் அதை உருவகப்படுத்த ஒரு புள்ளி மானை ஒரு சிறுத்தை கோரமாகக் கடித்து உண்பது திரையில் வரும்.
இது ஒரு சாதாரண உதாரணம். இது போல் பல உத்திகளைக் அறிமுகப் படுத்திய புண்ணியவான் இந்த அகிரா. 1990 ஆம் ஆண்டில இவருக்கு சிறப்பு ஓஸ்கார் விருதும் கிடைச்சது.

அண்மையில் அகிராவின் “Seven Samurai” (Shichinin no samurai, 1954 Japan 200mins) என்ற படம் பார்க்க வாய்ப்புக் கிடைச்சது.சமுராய் என்பதற்கு ஜப்பானிய மொழியில் "போர் வீரன்" என்றும் விளக்கம் வரும்.

1954ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் 16ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் நகரும் கதை இதுதான். ஜப்பானிய விவசாயக் கிராமம் ஒன்று வழிபறிக் கொள்ளையர்களின் தொடர்ச்சியான சூறையாடல்களால் தவிக்கின்றது. தமது உடைமைகளையும், பயிர்ச்செய்கைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கும் அந்த விவசாயிகள் இனியும் இது தொடர்கதையாகக் கூடாது என்று முடிவு எடுத்து ஊர்ப் பெரியவரைச் சந்திக்கிறார்கள். இவரின் ஆலோசனைப்படி (Find hungry samurai) சமுராய் அதாவது காவல் வீரர்களை அமர்த்திக்காவல் காப்பது என்று முடிவு செய்யப்பட்டு தகுந்த தலைவனைத் தேடுகின்றார்கள். மிகுந்த சிரமங்களின் பின் தலைவன் ஒருவனைக் தேர்ந்தெடுத்து அவனோடு ஏழு பேராக இணைந்து அந்த ஊரைக் காப்பாற்றக் கொள்ளையர்களைத் துரத்தியடிப்பது தான் கதை.

சாதாரண மசாலா சாயம் தோய்ந்த கதைக் கருவாக இருந்தாலும் 50 களில் இருந்த தொழில் நுட்பத்தை வைத்து அகிரா நன்றாகவே இயக்கியிருக்கிறார். இப்ப்டத்தைப் பார்க்க முன் அந்தக் கால கட்டத் தொழில்நுட்பத்தை மனதில் வைத்திக்கொண்டு தான் ரசிக்கவேண்டும்.


ஊரைக்காவல் காக்கும் சமுராய்களுக்குக் கிடைக்கும் ஊதியம் நல்ல சாப்பாடு மட்டுமே. இப்படத்தின் முதல் பாகம் கொள்ளையர்களால் ஊர் மக்கள் படும் தொல்லையும், தகுந்த சமுராயைத் தேடுவதிலுமாகக் கழிகின்றது.
அடுத்த பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுராய்களின் தலைவன் தன் வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பது, தாக்குதல் நடவடிக்கைகள் என்று கழிகின்றது.
ஊர்மக்களுக்கும் சமுராய் வீரர்களுக்கும் உள்ள இடைவெளியும் அந்த இடைவெளி, என்ன தான் கொள்ளைக்காரர்களைக் கொன்று சமுராய் வீரர்களை இழந்தாலும் தொடர்கின்றது. படத்தின் இறுதிக் காட்சியில் இறந்த சமுராய் வீரர்களின் புதைகுழிகளில் அசைந்தாடும் தம் கொடியைப் பார்த்த வண்ணம் சமுராய்களிள் தலைவன் சொல்வான். " இந்த ஊர் விவசாயிகள் இப்போது வென்று விட்டார்கள் நாம் தோற்று விட்டோம் என்று. ( அவன் சொல்லும் தோல்வி, இந்த ஊர்மக்கள் சமுராய்களோடு நட்புப்பாராட்டாததைக் குறிக்கின்றது). நெஞ்சம் கனக்கும் முடிவு அது.

ஆரம்பத்தில் கூறியது போன்று அகிராவின் திறமையான இயக்கத்தை காட்டப் பல காட்சிகள் உள்ளன. எந்த இடத்தில் காட்சியை மையப்படுத்த வேண்டும், பொருத்தமான இசை எங்கே வரவேண்டும் போன்ற சந்தர்ப்பங்களும், ஒரு சாதாரண ஜப்பானியக் கிராமம் ஒன்று அதன் இயல்புகெடாமல் காட்டப் படுவது மற்றும் சண்டைக் காட்சிகளின் வீரியத்தை வெளிப் படுத்த கமராவை எப்படிக் கையாள வேண்டும் என்றும் இப் படம் பாடம் எடுக்கின்றது.

படத்தின் ஆரம்பக்காட்சியமைப்பு இவ்வாறு உள்ளது.
கொள்ளையர்கள் ஊருக்கு வருவதைக் கிராமவாசி ஒருவன் காண்கின்றான். தொடர்ந்து வரும் காட்சிகளில் திரளானோர் கூடி நின்று என்ன செய்வது என்று கூடிப் பேசுவது தொலை தூரக் காட்சியமைப்பாகவும் (long shot)
தொடந்து காட்சி மாறி இரண்டு மூன்று பேர் கூடிப் நின்று பேசுவது அண்மித்த காட்சியாகவும் ( close shot) திடீரென மிக நெருக்கமான காட்சிபடுத்தலாக ஒருவனை மையப்படுத்திக் (close up) கமரா நகரும் போது "இதற்கு ஒரே வழி இந்தக் கொள்ளையர்களைக் கொல்வது" என்று அவன் சொல்வதுமாக அமைகின்றது. இதைப் போல எந்தத் சூழ்நிலைக்கு எந்த முறையில் கமராவின் கோணத்தை அமைப்பது என்று பல காட்சிகளைக் காட்டலாம்.

1954 venice film festival இல் silvar lion மற்றும் கலையமைப்பு & அரங்க அமைப்புக்காகவும், உடையலங்காரத்திற்காகவும் இரண்டு ஒஸ்கார் விருதையும் எடுத்தது மட்டுமன்றி திரைப்படம் எடுக்கும் கலாரசிகர்களுக்கு இன்றும் பால பாடமாகத் திரைப்படக் கல்லூரிகளில் இப்படம் இன்னும் சிறப்பிக்கப்படுகின்றது.

இந்தப் படம் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து வந்ததோடு
பசுபிக் பிராந்திய நாடுகளில் ஜப்பான் மேற்கொண்ட முற்றுகை,நேச நாடுகள் அணியின்ஜப்பானிய எதிர்ப்பு நிலைப்பாடு அதைத் தொடர்ந்த யுத்த முன்னெடுப்புகள் இதனால் சிதைந்த இந்த நாடு தன் பண்பாட்டு விழுமியங்களையும் தேசப் பற்றையும் மீண்டும் தூக்கி நிறுத்த எழுந்த படைப்பாகவும் திரையுலக வல்லுனர்களால் பார்க்கப்படுகின்றது.
சிதைந்து போன தன் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒவ்வரு குடிமகனும் சமுராயாக மாறவேண்டும் என்ற கண்ணோட்டத்திலும் இப்படத்தைப் பார்க்கலாம்.
அதனாலோ என்னவோ இந்தப் படத்தைப் பார்க்கும் போது நமது ஈழப் போராட்டத்தின் தொடரும் வரலாறும் நினைவில் வந்து மறைகின்றது.
குறிப்பாக சமுராய் வீரர்கள் முதலில் தம்மை அடையாளப் படுத்தக் கொடியொன்றைத் தயார்படுத்துவது, களத்தில் பயிற்சி எடுப்பது, எதிரியைத் தேடிச் சென்று வலிந்திழுத்துத் தாக்குவது, கரந்தடிப் ப்டைத் தாக்குதல் என அவை எம் களச் சூழலையும் நினைவுபடுத்துகின்றன.
இந்த நேரத்தில எனக்கு ஞாபகத்துக்கு வந்த இரண்டு சம்பவங்களையும் சொல்லுறன்.
86 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஈழத்தில எல்லா இயக்கக்களும் களத்தில் இருந்த நேரம் அது.
எங்கட அயலூர் தாவடியில் சிவராசா வீட்டுக்குப் பக்கத்தில தமிழ் ஈழ இராணுவத்தின்ர முகாம் இருந்தது. இலங்கை அரசாங்கத்தின்ர விமானம் இந்த முகாமைக் குறிபார்த்த குண்டு பக்கத்துத் தோட்டதில நின்று விளையாடிய இருண்டு பாலகரைப் பரிதாபமக் கொன்று தன் பசியை அடக்கியது. ஈழ வரலாற்றில முதல் தடவையா போட்ட விமானக் குண்டு அது தான். முதல் கோணம் முற்றும் கோணல் போல இவன்கள் போட்ட குண்டுகள் எப்போதுமே பொது சனத்தைத் தான் பதம் பார்க்கும்.

இந்தக் காலப் பகுதியில தாவடிச் சுடலைப் பக்கமாக தோட்ட வெளிப்பக்கமும் துரை வீதி முடக்கில இராசநாயகம் அண்ணையின் பவர் லூம் பக்கமாவும் கிறனேற் குண்டுடன் போராளிகள் ஊரைக் இரவிரவாக் காவல் காத்த காலம் உண்டு. ஒருமுறை மானிப்பாய் பக்கம் ஹெலி ஒன்று இறங்கிப்போனதும் ஒரு காரணம்.

ஒருநாள் காலை துரைவீதி முடக்கில இரவில் சென்றிக்கு நின்ற போராளி தவறுதலாகக் கிறனேற்றின் கிளிப் கழன்று அந்த இடத்திலேயே இறந்தது இன்றும் மனச இறுக்குது.

இன்னொரு சம்பவம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிரேமதாசா காலத்தில யுத்தம் ஆரம்பமான நேரம். ஊரில் மின்சாரம் இருந்தது. சுன்னாகம் மின்வழங்கியில இருந்து அயலூர்களுக்கு மின்சாரம் வந்து கொண்டிருந்தது. ஆனாலும் இரவு நேரங்களில் சில விஷமிகள் ஊரில் இருக்கும் உபமின்வழங்கிகளில் இருக்கும் ஒயிலைத் திருடுவதற்காக அவற்றை உடைத்துத் திடுடி விடுவார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பகுதியாக மின் இழப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது.
இதைத்தடுக்க வேண்டும் என்றால் இரவில் வீதிவலம் வந்து இந்த மின்வழங்கிகளைக் காவல் காபபது என்று எங்களூர் கோயிலடியில் கூடும் பெடியன்கள் முடிவு செய்தார்கள். விழிப்புக் குழுவாக ஒவ்வோர் இரவும் ஊர் மக்களின் வீட்டில் மின்சாரம் வருவதற்காகத் தாங்கள் விழித்திருந்து காத்தார்கள். இதற்கு அவர்களுக்கு கிடைப்பது சுழற்சி முறையில் வீடுகளில் இருந்து சூடான தேத்தண்ணியும் வடையும் தான்.
கொஞ்சக் காலம் கழிந்த பின் சுன்னாகம் மின்வழங்கி நிலையம் இலங்கை அரசாங்கதின்ர குண்டுகள் முற்றாகத் தாக்கியபின் உப மின்வழங்கிகளும் செயல் இழந்தன. கோயிலடி நண்பர்களின் விழிப்புக் குழுவுக்கும் வேலையில்லாமல் போனது.

இந்த இரண்டு சம்பவங்களை இப்போது நினைத்தால் பெருமிதம் தான் வருகுது. ஊர் வாழத் தன்னை அர்ப்பணிக்கும் எங்கட சகோதரர்களின் அந்த செயற்பாடு தான் இன்னும் அந்த மண்ணை ஈரப்படுத்துது.

19 comments:

  1. ஈழப் போராட்ட நினைவுகளுடனும் கிராமத்து நினைவுகளுடனும் கூடிய உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.
    பின்னூட்டலுக்கான word verificationஐ எடுத்து விடுங்களேன்.

    ReplyDelete
  2. நன்றி அண்ணா word verification ஐ எடுத்து விட்டேன்.

    ReplyDelete
  3. Good Prapha

    write more. very interesting style.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  5. ம். நீங்கள் சொன்ன விழிப்புக்குழுக்கள் பற்றின நிறையச் சம்பவங்கள் இருக்கு.
    சுழற்சி முறையில கடற்கரையில நேவி தரையிறக்காமல் காவல் இருந்த நாட்கள் ஞாபகம் வருது. சின்னப்பெடியனா அவைக்குத் தேத்தண்ணி கொண்டுபோய்க் குடுத்த ஞாபகம் வருது.
    அதின்ர தொடர்ச்சி இன்னும் இருக்கு. பங்களிப்பு அதிகமாயிருக்கு.
    பிற்பகுதியில் எல்லைக் காப்புப் படையாக, முழு இராணுவமாக எல்லை காத்ததும், இடங்கள் பிடித்ததும் நடந்தது. ஏறத்தாள 300க்கும் அதிகமான எல்லைக் காப்புப் படைவீரர்கள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. விழிப்புக்குழுக்களின் எனக்குத் தெரிந்த ஆரம்பகாலச் செயற்பாட்டை இன்னுமொரு பதிவிலும் தருகிறேன்.

    ReplyDelete
  7. இதே படத்தைத்தான் ஹாலிவுட்டில் Magnificient Seven என்ற பெயரில் படமாக 1960-ஆம் ஆண்டு எடுத்தார்கள்.

    நடித்தது Yul Brynner, Eli Wallach,
    Horst Buchholz, Charles Bronson
    and others.

    இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. ராகவன், உங்கள் பதிவை எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  9. //ராகவன், உங்கள் பதிவை எதிர்பார்க்கின்றேன்//
    அவர் போலி டோண்டுவாகத்தான் இருக்கும்:-) :-)

    ReplyDelete
  10. "இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments"

    இதுதான் உங்களை குழப்பியது என நினைக்கிறேன். பின்னூட்டமிடுவது உண்மையான டோண்டு என்றறிய மூன்று சோதனைகள் உண்டு.
    1. என் பெயர் மற்றும் அடைப்பு குறிகளுக்கிடையில் என் ப்ளாக்கர் எண்ணுடன் dondu(#4800161) என்று வரும். எலிக்குட்டியை அதன் மேல் வைத்து பார்த்தால் கீழே உங்கள் திரையில் உள்ள பட்டையில் அதே ப்ளாக்கர் எண் தெரிய வேண்டும்.
    2. கூடவே உங்கள் ப்ளாக்கர் கணக்கில் போட்டோக்கள் எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவும் மேலே இருப்பது போல தெரியும்
    3. நான் வேறு எந்த ப்ளாக்கூகளில் பின்னூட்டமிட்டாலும் அதன் நகல், (இப்பின்னூட்டம் உட்பட) என்னுடைய தனிப்பதிவில் வரும். பார்க்க:
    http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

    அவ்வளவுதான் விஷயம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    பின் குறிப்பு: உங்கள் படத்தை பார்த்தால் ஹிந்தி நடிகரும் நடிகை நூதன் அவர்களின் மகன் மோனிஷ் பெஹல் அவர்கள் ஞாபகத்துக்கு வருகிறார்.

    ReplyDelete
  11. நல்ல படம். எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர். நல்ல விமர்சனம்.

    ஆனா ஒன்னு புரியல. உங்களுக்கு தமிழ்நாட்டு மேல அப்படி என்ன கோவம்? பத்திக்கு பத்தி தாக்கி இருக்கீங்க?

    ReplyDelete
  12. சித்தார்த்,
    தமிழ் நாடு மீது ஒரு கோபமும் இல்லை. நீங்களும் உலக சினிமா ரசிகர் என்பதால் புரிந்திருக்கும் சாதிக்ககூடிய களமும் வல்லமையும் இருந்தும் நம் சகோதரர்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார்கள். வர்த்தக நோக்கில் தான் படம் எடுத்தால் தான் தம்மைத் தக்க வைக்க முடியும் என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டுச் சரக்கிற்கும் வர்த்தக வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.

    ReplyDelete
  13. அண்ணே,

    //இயக்குனர் விசு சினிமாவையே மேடை நாடகம் ஆக்கிய பெருமைக்குரியவர//

    பாலசந்தர் கூட தான்.

    //நமது ஈழப் போராட்டத்தின் தொடரும் வரலாறும் நினைவில் வந்து மறைகின்றது.//

    உண்மை ்!! ஏழு பேர் கொண்ட குழு 40 பேரை எதிர்கொள்ள சாதாரண மக்களை தயார்படுத்தும்போது, எனக்கும் ஈழப்போராட்டம் தான் கவனத்தில் வந்தது.

    //அகிராவை போன்ற முன்னோடிகளைத் தெரியாத சாமான்யன்கள் தமிழ்நாட்டுப் படங்களை அடிக்கடி ஒஸ்கார் விருதுக்கு சிபார்சு செய்வான்கள//

    அகிரோ படங்களை பெரிசா அங்கிகரிக்கத ஆஸ்காரை பத்தி நமக்கு எதுக்கு ஆதங்கம்.

    ReplyDelete
  14. "எங்க ஊரு காவல்காரங்கள்"

    தலைப்பு நல்லா இருக்கு, பிறகு ஈழத்துக்கு இந்த படத்தை மறுவெளியீடு செய்யும்போது வச்சிக்கலாம் :)).

    ReplyDelete
  15. வாங்க குட்டிப்பிசாசு

    வாசித்து உங்க கருத்தை அளித்தமைக்கு மிக்க நன்றிகள்

    ReplyDelete
  16. தொலைந்து போன சுட்டியை மீண்டும் தந்ததற்கு நன்றி பிரபா. நீண்ட நாட்கள் கழித்து இப்போது வாசித்தபோதும் அதே உணர்வை தரும் நல்ல கட்டுரை இது.

    ReplyDelete
  17. வாங்க சித்தார்த்

    உங்களைப் போன்ற நண்பர்களின் கருத்து உற்சாகமளிக்கின்றது. நன்றி

    ReplyDelete
  18. //ஊர் வாழத் தன்னை அர்ப்பணிக்கும் எங்கட சகோதரர்களின் அந்த செயற்பாடு தான் இன்னும் அந்த மண்ணை ஈரப்படுத்துது.//

    உணர்ச்சிகரமான வாக்கியம்.

    சாமுராய் ஊடான அகிரா குரோசவா தொடர்பான அறிமுகம் சிறப்பாக இருந்தது. நன்றி

    சாமுராயையும் ஈழத்தையும் ஒப்பிட்டவிதமும் பிரமாதம்.

    பாராட்டுக்கள் கானாபிரபா..

    ReplyDelete
  19. மிக்க நன்றி கோகுலன்

    ReplyDelete